2024-07-28

கிழக்கு தோறும்

 



கோழி கூவிற்று.

அது அடைகாத்து 

வைத்திருந்த 

விடியல் முட்டையும்

உடைந்து சிதறி 

வெளிச்சச் சிறகை

விரித்து வெளியே வந்தது.

தமிழனின் மூளி வானம் மட்டும்

மொக்கையாக‌

அப்படியே இருந்தது.

பத்துப்பாட்டும் 

எட்டுத்தொகையும் 

தந்தவன்

தர்ப்பைப்புல்லொடு

தடுமாறும் 

மந்திரங்கள் சொல்லி

தடங்கள் மறந்தவன்.

தமிழ்ச்சுவடுகள் அழித்து

அமிழ்ந்து போனவன்

மீண்டு 

என்று எழுவான் என்று

இந்த உழக்குகளின் 

கிழக்கு மேற்குகளே

கிழக்கு தோறும்

விழித்து 

நோக்கிக்கொண்டிருக்கிறது.


_______________________________________

சொற்கீரன்

2024-07-20

சப்பரம்

 சப்பரம்

______________________________



என்ன தூங்கி விழுகிறாய்?

ஏன் கனவுகள் வந்ததில்லையா?

இப்போது எதுவும்

செய்யத்தொன்றவில்லை 

என்றாலும்

உனக்கு நீயே தான்

சாதித்துக்கொள்ளவேண்டும்.

அடடே

அந்த சாதியை குறிப்பிட்டு விட்டேனா?

இரவு முழுவதும் 

மின்சாரபல்புகள் நாளங்களாய்

தொங்க 

அந்த நாக்குத்துறுத்தி சாமி

முண்டைக்கண்ணும் அருவாளுமாய்

சப்பரத்தில் வலம் வந்திருப்பாரே.

உற்சாகம் தான்.

பானம் தான்.

கையில் வண்ணவண்ணக்கயிறுகள் தான்.

"டேய் டேய்..

இங்கேயே திருப்பிரலாம் சப்பரத்தை

அந்தத் தெருவு வாசன கூட‌

படப்படாது டோய்.."

அப்புறம் அங்கே

கொஞ்சம் தள்ளு முள்ளு.

சாமிகளே...

முண்டக்கண்ணு 

துருத்திக்கொண்டிருந்தது போதும்

கொஞ்சம் இறங்கி வந்து

என்னன்னு தான் பாருங்களேன்.

ஒவ்வொரு ஆண்டும்

இந்த அருவாள்கள் ருசிபார்க்க‌

இந்த மக்கள் தலைகளா?

வெறியை வைத்து

தீப்பந்தம் கொளுத்தி

எத்தனை காலம் தான் 

இருட்டுக்குள்ளேயே கிடப்பீர்கள்

சாமிகளே....

சப்பரம் தள்ளாடி தள்ளாடி

சாய்ந்து கொண்டே

அந்த தெருவைத்தாண்டியது.

அவனுக்கு 

தூக்கம் தூக்கமாகத்தான் வந்தது.

துண்டு துண்டாய்

மனிதர்கள் சிதறிக்கிடந்ததாய்த் தான்

கனவுகள்..

அதையெல்லாம் விரட்டிவிட்டு

அந்த வீட்டு வாசலில் நின்று

அவனைப் பார்த்து பார்த்து

விழுங்க நினைத்த 

அவள் விழிகள் எல்லாம்...

வரும் என்று தான் பார்க்கிறான்.

சுள்ளென்ற வெயிலில்

வாசலில் கெண்டை மீன்கள் 

வறுவலுக்காக கருவாடுகள் ஆக‌

காத்திருந்து

விரிக்கப்பட்ட துணியில்

வெறும்

துள்ளலும் துடிப்புமாய்

தெரிகின்றது.


____________________________________________________

கல்லாடன்










குற்றால அருவி.

 குற்றால அருவி.

_______________________


இத்தனை பேர்

இத்தனை நாளாக‌

குளித்துக்கொண்டிருக்கிறார்களே

அந்த திவலைகளின்

கவலைகளை கேட்டறிந்தார்களா?

அந்த மணித்துளிகளின்

உள் பொதிந்து இருக்கும்

மனத்துளிகளை

ஓர்மையோடு தழுவியதுண்டா?

எங்கோ

வானம் கிழிந்து கொடுத்த‌

நீர்ப்பிழம்பு

பாறையில் மண்டை சிதறி

சூரியன் குத்தி குத்தி

கொப்பளித்த‌

அந்த ஏழுவர்ண ரத்தத்திலா

இவர்கள் குளியல்?

மரத்துப்போன மனிதர்களுக்கு

மண்ணும் பாறையும் கூட பேசும்

என்று

தெரிந்திருக்கவா போகிறது?


____________________________________________

கல்லாடன்

 


2024-07-18

நன்றாக கேட்டது!


நன்றாக கேட்டது!

___________________________________________

அம்பைவாணன்.


செங்கல்கள் அடுக்கிவிட்டார்கள்.

அடுத்து

கலவை பூசும் சத்தங்களுக்கும்

நான் காத்திருக்க வேண்டுமா என்ன?

அல்லது

அந்த வரட்டிகளை வைத்து

சன்னல் மூட்டங்களில் 

கண்கள் அமைத்து

தீயின் கூந்தல் நீளமாய்

மயில் தோகை போல‌

வானம் முழுதும் அடைத்து 

அகவுமே

அதற்கும் காத்திருக்க வேண்டுமா?

என் இடுப்பு டப்பியைத்தேடுகிறேன்.

அதில் தானே 

அந்த குவாண்டம் 

டெலிபோர்டேஷன் ஈக்குவேஷன்

இருக்கிறது.

அதன் மூலம் அந்த 

ஈகிள் கேலக்ஸிக்கு போகலாம்

என்று தானே இருந்தேன்.

அதற்குள்ளாகவா எல்லாம்...

"வாங்கோ..

அந்தக்கலயத்தில் அஸ்தியை எடுத்துண்டு

காசி..ராமேஸ்வரம் போய்

கரைச்சுடுங்கோ..."

இந்த சத்தம் மட்டுமே எனக்கு

நன்றாக‌ கேட்டது.


______________________________________________


2024-07-11

தேசிய மொழி.

 யார் அங்கே?

என் குரல் கேட்கிறதா?

ஏன் கத்துகிறாய்?

மவுனத்தின் அதிர்வெண் 

மவுனம் தானே.

அப்புறம் எப்படிக்கேட்கும்?

தன் குரலே

தனக்கு கேட்க‌

காதுகள் இல்லையா?

மவுனம் அங்கே இருந்து

கழன்று கொண்டது.

இப்போது

அது

காதல் தேசத்தின்

தேசிய மொழி.

_______________________________________‍‍

அஞ்சிறைத்தும்பி

நமக்கு மட்டும்...

 

நமக்கு மட்டும்...

__________________________________‍



தூரத்து புள்ளிகள்

தொலை நோக்கியில்

பூதங்கள் காட்டுகின்றன.

அவை இந்த பிரபஞ்சங்களையே

விரீர் என்று திறந்து போட்டு விடும்

கருந்துளைகளாம்.

அவற்றின் பூட்டு சாவிகளே

அவை தானாம்.

ஒளியாண்டுகளில்

அவை தொலைந்து கிடக்கின்றன.

அவற்றை உள்ளங்கையில்

வைத்துக்கொண்டு

மாவடு ஊறுகாயாக ஆக்கி

கணிதச்சோற்றில் தொட்டுக்கொண்டு

சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்றனர்

விஞ்ஞானிகள்.

எக்ஸோ ப்ளானெட்டுகளில்

உள்ள மனிதர்களோடு

கை குலுக்கிக்கொள்ளும்

தியரிகளையும் 

வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு மட்டும் 

துரோணாச்சாரியார்களும்

அஸ்வத்தாமாக்களும் தான்

அமாவாசை தர்ப்பணத்துக்கு

வெர்ச்சுவல் ரியாலிடியின் 

தர்ப்பை புல்லோடு

உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.


__________________________________________________

கல்லாடன்







மராமரங்கள்

 


எப்போதாவது

எதையாவது கவிதை என்று

நான் எழுதும்போது

மட்டையாகிக்கிடக்கும்

அந்த தருணங்களின்

மராமரங்கள் வழியே

என் மீது பெய்தது

அம்பு மழை.

அந்த ரத்த வெள்ளத்திற்குப் பிறகு

நான் கவிதையின்

அந்த சிவப்பு அணுக்களை

தேடிச்செல்ல முடிவதில்லை.


_________________________________________

கல்லாலன்

2024-07-10

விளிம்பு ரசம்.

விளிம்பு ரசம்.

____________________________


எத்தனை ஞாபகங்களை

ஒவ்வொரு கல்லாய் அந்த‌

ஜாடியில் போடுவது?

கற்கள் தீர்ந்து விட்டன.

சிறகுகள் ஓய்ந்து விட்டன.

வாழ்க்கையின் அந்த 

விளிம்பு ரசம்

வாய்ப்படும் முன்

வானத்தில் என் இரைச்சல்கள்

பஞ்சு பஞ்சாய்

பறந்து விடும்.

அன்று அவளை பார்த்தபோது

சிரித்தாள்.

அப்புறம் ஏதோ சொன்னாளே!

அந்தக்கல்லை

நான் எங்கு போய் தேடி

அலகில் கவ்வி எடுத்து வருவது?

அது எப்போது என்

இதய நாளத்துள்

யாழ் வாசிப்பது?

அங்கும் இங்கும் பறந்ததில்

இந்த வானத்துக்குத் தான்

சிராய்ப்புகள்..கீறல்கள்..

குரல்கள் எழுப்பி எழுப்பி

கரைந்து கொண்டிருக்கிறேன்.


_________________________________________________

கல்லாடன்.

2024-07-09

அச்சமில்லை அச்சமில்லை.

 அச்சமில்லை அச்சமில்லை.

_______________________________

சேயோன்.



அரைக்கால் 

டிகிரி கோணத்தில்

அந்த ஓரவிழி

என்னைச்சுருட்டிக்கொண்டு

விட்டது.

முகம் தெரியாது.

அகம் தெரியாது.

எந்த 

குறுந்தொகையும் 

கலித்தைகையும் 

கொண்டு 

அவள் முகத்தை ஒற்றிகொள்வது.

எதையோ தவறவிட்டு 

அவள் ஓடிவிட்டாள்.

அருகில் பார்த்தேன்.

கசங்கிய கைக்குட்டை

கலை வேலைப்பாட்டுடன் தான்.

தொடவே பயம்.

என்ன செய்வது?

திரும்பி விட்டேன்.

விடிய விடிய 

ஜேம்ஸ்வெப் தொலை நோக்கிப் 

புகைப்படங்கள் போல்

அத்தனை கேலக்சிகளும் 

பிசைந்து கொண்டு

என் இதயம் நுழைந்தது

அவள் முகத்தோடு.


__________________________________________





2024-07-07

தாலாட்டு

 




தாலாட்டு

___________________________________



என்னைத்தாலாட்ட 

ஆரம்பித்துவிட்டாய் 

உன் நினைவுகளால்.

மாமன் அடித்தானோ?

மாமி அடித்தாளோ?

பாசத்தைப்பிழிந்து காட்ட‌

இந்த மாமூல் கேள்விகளில்

தேங்கிக்கிடக்கும் 

இசையமைப்புகளுக்கு

அமைவான 

அம்மாவின் மியூசிக் நோட் ஷீட்டுகளை

அந்த ஆண்டவனாலும் 

திருடிக்கொண்டு விடமுடியாது.

உன்னைப்பற்றிய பகல் நேரத்து

சொப்பனங்களில்

அப்ப்டித்தான் சொக்கி சொக்கி

விழுகிறேன் போலிருக்கிறது.

கொலவெறி கொலவெறி என்று

யாரோ ஒரு சினிமாக்காரர்

பாடிய அந்த சாங்க் புக் வரிகள்

அப்போதைய‌

ஜனாதிபதி மாளிகை வரைக்கும்

அலையடித்ததாக 

சொல்லுகிறார்களே.

அது போல் தான் உன் தாலாட்டு

இந்த மொட்டைவெயிலுக்கும்

குஞ்சம் கட்டி அழகு பார்க்கிறது.

இந்த சவலைப்பிள்ளை 

இப்படியே கத்திக்கொண்டு 

கிடக்கவேண்டியது தான்

உன்னுடனான‌

என் அடுத்த சந்திப்பு வரை.


___________________________________

சேயோன்.

2024-07-06

ஒரு நாவல்

 


ஒரு நாவல்

___________________________

கல்லாலன்.



புத்தகத்தை எடுத்தால்

நாவல் நம்மை

கரைத்து விடுகிறது.

வரிகளுக்குள்

பிறகு அதன்

சொற்களுக்குள்

நாம் 

பதியம் போடப்பட்டு

காகித வானத்தில்

மகரந்த சேர்க்கையின்

மத்தாப்பூக்களாய்

மூளிக்கனவுகளில்

முளை விடுகின்றோம்.

கதையின் பாத்திரங்கள்

கட புட என்ற 

சத்தம் எழுப்பிய போதும்

காதலும் பெண்ணும் கலந்த‌

ரசாயனத்தில்

அந்த எழுத்தாளனின் 

சொல் வெட்டுகளே

நம் வாழ்க்கைக்குள் விழுந்த‌

கல் வெட்டுக்கள்.

உதாரணம் சொல்லுங்கள் 

என்கிறீர்களா?

அந்த "மோகமுள்"

இன்னும் தைத்துக்கொண்டே 

இருக்கிறது.

வானத்தை அண்ணாந்து 

பார்த்தாலும்

அந்த வானவில்லின் ரத்தம்

ஏழு வர்ணங்களில்

சொட்டிக்கொண்டே இருக்கிறது.


_________________________________________________

2024-07-05

ஈரோடு தமிழன்பன் .

 ஈரோடு தமிழன்பன்

__________________________________‍‍‍


உங்கள் வரிகள் பதியாத‌

காகிதங்கள்

மக்களே இல்லாத மெரீனா பீச்.

அதனால்

உங்கள் பக்கங்களில்

புரண்டு எழும்

அல்லது தடவிக்கொள்ளும்

சிறு பூச்சியாக ஊர்வதில்

எனக்கு ஒரு பெருமிதம்

உலகம் சுற்றும் ரசிகன் என்று.

தமிழுக்கு சொற்கள் 

தேவையில்லை.

அதன் மூண்டு எழும் கனலே

அங்கு அங்கு நடப்பட்டிருக்கும்

மைல் கற்கள் என்று

காட்டி விடுகிறீர்கள்.

தமிழின் தொன்மை கூறும்

கீழடிகள் எல்லாம்

சிலருக்கு எலும்புக்குவியல்களாம்.

ஆம் அதைக்கோர்த்து தான்

தேவநாகரியாய் அதை

கழுத்தில் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களின் சின்ன நிறுத்தற்குறிகளும்

அரைப்புள்ளிகளும் போதும்

அதில் பொங்கித் ததும்பும்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின்

தமிழ் வீச்சுகளைக்

கண்டு கொள்ள.

உங்கள் எழுத்துக்கள் ஊழிப்பேரலைகள்.

இந்த உதவாக்கரைகள் எந்தக்

கரைகளிலாவது ஒதுங்கிக்கொள்ளட்டும்.


_________________________________________________

சொற்கீரன் 03.07.2024






2024-07-03

"மௌவல்" பின்னூட்டக்கவிதை

 


"மௌவல்" பின்னூட்டக்கவிதை 

08 13 PM/   03 07 24

 thiru  இராஜாஅபி. kavithai

_________________________________________________


அன்பு நண்பரே

முழு நிலவையும் 

உருக்கி வார்த்து தான் 

தந்திருக்கிறீர்கள் 

கவிதை என்று.

இருப்பினும் 

அவள் மூளி மவுனத்தில்

மூண்டெரியும்

காடுகளை 

உங்கள் மிச்சக்கவிதைகளுக்கு

பதுக்கி வைத்துக்கொண்டீர்களா?

கவிதை அருமை!

__________________________________________

அஞ்சிறைத்தும்பி.


2024-07-02

புள்ளிகள்

 புள்ளிகள்

_______________________________________


இதுவும் கடந்து போகும்

என்று

நம் தலைமீது எப்போதும்

சும்மாடு ஆக உட்கார்ந்திருப்பதே

கவிதை.

எழுதும் வரிகளில்

மெய் எழுத்துக்களின் 

மேற்புள்ளிகள் கூட சிலுவைகளே.

_______________________________________

சொற்கீரன்.