2021-09-17

ஐங்குறும்பாக்கள்

 ஐங்குறும்பாக்கள்

_________________________ருத்ரா



தினம் தினம் 

வண்ணங்களை உலர்த்தி எடுத்தது

மொட்டை மாடி கொடிக்கம்பியில்.


பட்டாம்பூச்சி

____________________________ 1



பச்சைப்புல் பனித்துளியில்

ஒரு தற்கொலை.

ஏழு வர்ண இரத்தம்.


காலைச் சூரியன்

_____________________________ 2



கவலைகளை களைந்து விட்டு

என் வீட்டுக்குள்

வாருங்கள்.


நத்தைக்கூடு

______________________________3





திராவிடமா? தமிழா?

ஆரியம் ஒளிந்து கொள்ள‌ 

வந்த கேள்வி இது.


தமிழ் அற்ற தேசியம்.

____________________________5

2021-09-15

பேஎய் செஞ்சிவப்பின் நீள் வரி போர்த்து.

  பேஎய் செஞ்சிவப்பின் நீள் வரி போர்த்து.

_______________________________________கல்லிடைக்கீரன்

(ஓலைத்துடிப்புகள் 110)



காழ்த்த நெடுங்கால் தண்பறைக் குருகின்

களிதுள் கயல்ஆரும் நளிகடல் சேர்ப்ப!

எக்கர் ஞாழல பாசிலை அடைகரை

வதிநிழல் ஓமை பொருந்தாக் காணிய‌

நெய்தலங் கானல் கண்டிசின் பெரும.

மாழை வரிவிழி நுதல் அளை நோக்கில்

ஆகம் அணியிழை சேக்கும் காதலின்

கறை உழற்றன்ன கொடு எழில் பூப்ப‌

புன்கு அவிழ் பொரிப்பூ படர்ந்த நகையில்

அவள் ஆங்கு சுழித்த நாணில் வீழ்தரு நின்

நாணில் நீர்மை கண்டுநனி நெடுவான்

வெட்கும் ஒட்கும் எல் களைந்து எல்லின்

பேஎய் செஞ்சிவப்பின் நீள் வரி போர்த்து.


_________________________________________

காதல் செழித்த தலைவியையும் மறந்து

பரத்தமையின் பால் காமுறும் தலைவனுக்கு

தோழி அறிவுறுத்தியதே இப்பாடல்.புன்கை மரம்

பூத்துச்சொரிந்தது "பொரி" படர்ந்தாற்போல்

இருக்கும் அந்த பரத்தையின் நாணமற்ற‌

சிரிப்பில் தலைவன் விழ்ந்தது அதை விட ஒரு

நாணமற்ற செயல் என தோழி இடித்துக்காட்டுகிறாள்.

அதையே இங்கு என் சங்கநடைச்செய்யுள் கவிதையாக்கி

இங்கு எழுதியிருக்கிறேன்.

______________________________கல்லிடைக்கீரன்


2021-09-13

ஒரு கவிஞன்

 ஒரு கவிஞன்

==========================="மாளவிகாக்னி மித்ரன்"


காகிதமும் பேனாவும் கொண்டு

சில தமிழ் மற்றும் பல சமஸ்கிருத சொல் கடைந்து

மனப்புழுக்கத்துக்கு வர்ணம் தீட்டி

மன உள் வெளிக்குள் பூதம் காட்டி

எழுதித்தீர்த்தேன்.

பிடித்தவர்கள் படித்தார்கள்.

படித்ததை பகிர்ந்தார்கள்.

அச்சு மையிலும் அது

ஆயிரம் ஆயிரம் பிரதிகளாய்

கருப்பு ரத்தத்தில் கன்னிக்குடம் உடைத்து

பிரசவமாகி பரவசம் ஆனது.

என்ன சொன்னேன் ?

எதற்கு சொன்னேன் ?

சொற்களின் வைக்கல் படப்பில்

அவர்களே 

ஒரு ஊசியை போட்டுவிட்டு

அவர்களே தேடிக்கொள்ளட்டும்.

விசைப்பலகையில் எண்டர் தட்டுவதை

இவர்களின் யாப்பருங்கலக்காரிகை

ஒரு "நொண்டி சிந்து" என்று

நொட்டைச்சொல் சொல்லிக்கொள்ளட்டும்.

ஒரு "சுப்புடுத்தன" தண்டி அலங்காரத்தில்

தடைசெய்து தண்டித்துக்கொள்ளட்டும்.

புதுக்கவிதை என்றாலே

குவார்டர் கட்டிங்க் சீயர் அப்புக்கு

மசாலா தொட்டுக்கொள்வது போல்

ஆகிவிட்டதோர் யுகம் இது.

இதில் காதலை கலக்கி

நொதிக்கச்செய்து நுரை தள்ளும்

கலாச்சாரம் இது.

விக்கிரமாதித்தனின் கவிதையை

பெயரின்றி போட்டால்

குப்பைத்தொட்டிக்குள் வீசி

குதூகலிக்கும் காலம் இது.

லா.ச.ரா வைப்போல்

எழுத்தின் ஆழத்துள்

மூச்சடக்கி மூழ்க முடியாதவர்கள்

கரையோரத்துக் கிளிஞ்சல்களை

கை நிறைய அள்ளிக் களிப்பவர்களின்

இலக்கிய யுகம் இது.

"எழிற்கீரன்"

இந்த அருமையான 

தமிழ்ப்பெயரில் 

கவிதைகள் படைக்க எண்ணினேன்.

என்ன?

தமிழ்ப்பெயரா?

தமிழ் நாட்டில் தமிழ் ஒலிப்பு என்பதே

தீட்டு ஆகிவிட்டதே!

தேவ பாடையில்

"மாளவிகாக்னி மித்ரன்"

என்ற பெயரில்

கவிதை அனுப்புகின்றேன்.

பார்க்கலாம்.

____________________________________

2021-09-08

பிள்ளையாரப்பா சரணம்!

 பிள்ளையாரப்பா சரணம்!

_______________________________ருத்ரா



விநாயகப்பெருமானே

போற்றி! போற்றி!

ஒரு மலைஜாதிப்பெண்ணை

உன் தம்பிக்கு 

மணமுடிக்க நீ

என்னவெல்லாம் 

திட்டம் போட்டாய்.

இவர்களோ

அப்படி மலைஜாதிப்பெண்ணை

உயர் ஜாதி இளைஞன்

திருமணம் புரிந்தால்

உயிரோடு கொளுத்திவிடுவார்களே.

சரி.

உன் அப்பா 

எவ்வளவு நியாயவாதி?

தன் உடம்பில் பாதியை

உன் அம்மாவுக்குத் தந்து

ஆணும் பெண்ணும் சமம்

என்று

உலகிற்கு காட்டியும்

இவர்கள்

அப்படியெல்லாம் இல்லை

ஆணுக்குப்பெண்

அடிமையோ அடிமை என்று

மிகவும் கீழே அல்லவா

போட்டு நசுக்கி வைத்து

மனு சாஸ்திரம்

எழுதி வைத்திருக்கிறார்கள்.

பெண்மையின் தாய்மை

எனும் 

திருக்கோயிலின் கருவறையை

தீட்டு என்றும்

அதனால் அந்த சொர்க்கத்தையே

நரகம் என்றல்லாவா

சொல்லுகிறார்கள்.

நீ கூட‌

அந்த தாய்மை சுடரும்

பெண் போல் எனக்கு

ஒரு பெண் பார்த்துக்கொடு அம்மா

என்று 

கேட்டதாய்த் தானே

சப்பளாக்கட்டைகள் தட்டிக்கொண்டு

கதை சொல்கிறார்கள்

இப்போ உனக்கு 

மிக உயரமாய் சிலை வைத்து

கொணடாடுகிறார்களே

அது 

கிரேக்க நாட்டுக்கதையின்

ட்ரோஜான் குதிரை எனும்

மாயக்குதிரை போல்

அல்லவா இருக்கிறது!

சங்கத்தமிழ் மூன்றும் தா

என்று 

நாங்கள் கேட்கிறோம்.

இவர்களோ

வித விதமான

மசோதாக்களை அல்லவா

உன் "லம்போதர" வயிற்றுக்குள்

அடைத்து வைத்திருக்கிறார்கள்.

நாளை இனி

இந்த நாட்டுக்கு தேர்தலே

தேவையில்லை என்று

ஒரு மசோதாவை

அதில் ஒளித்து வைத்திருந்தால்

என்ன செய்வது?

விநாயகப்பெருமானே

நீ தான் 

எங்களைக் காப்பாற்ற வேண்டும்.

அன்று

மாமனிதர் திலகர் 

உன்னை வைத்து தானே

எங்களுக்கு

சுதந்திரம் வேண்டும் என்று

கர்ஜித்தார்.

அதே போல் நாங்களும்

உன்னை வைத்து தான்

இந்த ஜனநாயகத்தை

காப்பாற்ற வேண்டும்.

அப்பனே!

பிள்ளையாரப்பா!

உன் தும்பிக்கை 

ஒரு தும்பிக்கை அல்ல.

இந்த நாட்டு கோடிக்கணக்கான‌

மக்களின் 

கோடி கோடி நம்பிக்கைகளின்

மொத்த உருவகம் அது.

யானை என்றால் 

மதம் பிடிக்கத்தானே செய்யும்

என்று

இவர்கள் ஊற்றும்

செயற்கை மதநீர் கொண்டு

உன்னை

"மதம்"பிடிக்க விடாதே!

உன் அப்பா 

சொல்லியிருக்கிறார்

அன்பே சிவம் என்று.

அதுவே 

எல்லா மதங்களுக்கும்

அன்பு காட்டுவது

என்று தானே பொருள்.

அந்த "பரம்பொருளை" அறியாமல்

எல்லாவற்றிலும் பொருள் சம்பாதிக்க‌

இவர்கள்

ஒரு குத்தகை பாரதம் அல்லவா

நடத்துகிறார்கள்.

நாளை

உன்னையே

உலகத் தனியாருக்கு "பேட்டெண்ட்" போட்டு

பில்லியன் டாலர்களாய்

மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள்.

விநாயகப்பெருமானே!

எங்களைக் காப்பாற்ற‌

நீ உன்னை முதலில்

காப்பாற்றிக்கொள்.

சரணம் சரணம்

பிள்ளையாரப்பா

சரணம்!



___________________________________



2021-09-07

முற்றம்

 முற்றம்

____________________________ருத்ரா


அந்த கிரில்

நீல வானத்தை தைத்து

பூங்கொடி ஒன்றை

சூரிய ஒளியில் 

வழிய விட்டிருந்தது.

தரையில் தெரிந்த 

நிழற் பழங்களை

கொறிக்கத் துடித்தது 

ஒரு அணில்.

அதன் வால் தூரிகையிலிருந்து

எத்தனை பிக்காசோக்கள் 

அல்லது 

ரவி வர்மாக்கள்

அங்கே இழைந்து கிடந்தார்களோ?

அங்கே விழுந்து கிடந்த‌

கடிதம்

அதன் கூரிய பற்களில்

சுக்கல் சுக்கல் ஆகி

காற்றில் பரவிச்சிதறி

ஒடிவிட்டது.

அது அவளுக்கு

நான் எழுதிய கடிதம்.

எத்தனையாவது கடிதம்?

எனக்கே தெரியாது.

அவள் ஒன்றும் பதில் எழுதி

கிழித்துவிடப்போவதில்லை.

கிழித்து போட்டிருப்பவைகளுக்கும்

கண்க்கே இல்லை.

போகட்டும்.

அந்த மிளகுக்கண்களில்

உற்று உற்றுப்பார்த்து

வெடுக் வெடுக் என்று கடித்த‌...

அல்ல அல்ல‌

முத்தம் கொடுத்த அந்த 

அணிலுக்கு 

என் ஆயிரம் நன்றிகள்.

______________________________________





2021-09-06

வியப்பு

வியப்பு அடங்கவில்லை

__________________________________ருத்ரா


உன்னைப் பார்த்த‌

மின்னல் கணங்களை

என் தூரிகையில் கருவாக்கி

கோட்டோவியம் ஒன்று

வரைந்தேன்.

அழகு தான்.

அருமை தான்.

மீண்டும்

அதைப்பார்க்கும் போது

நான் திடுக்கிட்டேன்.

என் தொப்பூள் கொடியில்

நான் கொடி சுற்றிக் கிடந்தது

போல் அல்லவா

இருந்தது அது?

நீ தாயா?

அல்லது

ஒரு பெண்ணா?

முட்டாள்.

அன்பு எனும் பெருங்கடல்

தாய் எனும் 

அன்பின் 

முதல் உயிர் எழுத்தை தான் 

காட்டுகிறது.

உன் காதல் கோடு

அதிலிருந்து தானே

பெயர்த்து வரையப்பட்டிருக்கிறது.

உன் வண்ணங்களை வேண்டுமானால் 

இனி நீ தீட்டிக்கொள்.

சற்று நேரத்தில்

அங்கே வந்த அம்மா

அந்த ஓவியத்தை

உற்றுப்பார்த்துவிட்டுக் கேட்டாள்.


"ஏண்டா?

அழகாய்த்தான் இருக்கிறாள்.

எங்கேயடா இவளைச்சந்தித்தாய்?

அப்பாவைக்கூப்பிட்டுக்கொண்டு

இவள் வீட்டுக்கு

சென்று விட வேண்டியது தான்."

எனக்கு வியப்பு அடங்கவே இல்லை.

இப்போது

அவள் அந்த தொப்பூள் கொடியாய்...

என் முகத்தருகே

ஒரு பூங்கொடியாய்....

காற்றில் அசைகின்றாள்.


__________________________________________


2021-09-05

ஒரு வகுப்பு நடக்கிறது

 ஒரு வகுப்பு நடக்கிறது

________________________________ருத்ரா

(ஆசிரியர் தினக்கவிதை)



அந்த வகுப்புக்குள்

ஒன்றன் பின் ஒன்றாக‌

ஐந்து சிட்டுக்குருவிகள்

பறந்து வந்தன.

கிரீச் கிரீச் ஒலிகள்

வகுப்பு முழுதும் 

எதிரொலித்தன.

குருவிகள் சிறகடிக்கும் போது

மாணவர்களின் 

புத்தகங்களின் பக்கங்களும்

சிறகுகள் போல் படபடத்தன.

எல்லோருடைய கண்களின்

கருவிழிகளில் கூட‌

குருவிகளின் சிறிய பிம்பங்கள்

சிதறி ஓடின!

ஒரு குருவி அறை முழுதும்

வட்டம் அடித்துக்கொண்டே

இருந்தது.

இரண்டு குருவிகள்

ஒன்றின் சிறகை மற்றொன்று

கவ்விக்கொண்டே 

பறந்து பறந்து 

கிரீச் கிரீச் என்றன.

அது என்ன?

அது என்ன மொழி?

அது கலித்தொகையா?

குறுந்தொகையா?

ஒரு குருவி ஒற்றையாய்

அறையின் 

உத்திரத்து விளிம்பில் இருந்து

ஒலித்துக் கொண்டே இருந்தது.

வால் பகுதி

எதுகை மோனைகள் போல‌

அசைந்து கொண்டே இருந்தது.

ஒரு குருவி எச்சமிட்டது

சரியாக‌

ஆசிரியரின் தலையில்.

கொல் என்ற சிரிப்பலை 

வகுப்பு முழுவதும்.

அவரும் சிரித்துக்கொண்டே

துடைத்து விட்டுக்கொண்டார்.

வகுப்பு முடிந்ததாய் 

மணி ஒலி கேட்டது.

எல்லா குருவிகளும் வெளியேறின.

ஆசிரியர் சொன்னார்.

நான் எடுக்க நினைத்த வகுப்பை

இந்த குருவிகளே எடுத்துவிட்டன.

என்றார்.

எதைப்பற்றி அந்த வகுப்பு?

அது இது தான்.

"சுதந்திரம்"


______________________________________ருத்ரா.



2021-09-04

எங்கு போனார்?

எங்கு போனார்?

____________________________ருத்ரா


என்னை

லட்சம் ஸ்லோகங்களால்

குளிப்பாட்டுகிறாய்.

இன்னும் 

கும்பாபிஷேகம் என்று

என் மூக்குக்கும் முகத்துக்கும்

இன்னும் 

கோபுர பொம்மைகளுக்கும்

புதிதாய் வர்ணம் பூசுகிறாய்.

நீ கேட்கிறாய்.

நான் கொடுக்கிறேனா

என்று 

எனக்கே தெரியாது.

ஏதோ சந்து பொந்துகளுக்குள்

எல்லாம் புகுந்து

கரன்சிகளை அள்ளிக்கொள்கிறாய்.

உன் நாட்டில்

கோடி மக்கள்

எலும்புக்கூடுகளாய்

இற்றுக்கிடக்கும்போது

உனக்கு மட்டும்

இந்த கொழுப்பு மண்டலம்

எப்படி கிடைத்தது?

நான் கொடுத்தேனா?

எனக்குத்தெரியாது.

நான் தான் கொடுத்தேன்

என்று

உன் கொழுப்பு மலையைக் கிள்ளி

எனக்கு

நைவேத்யம் வைக்கிறாய்.

இது என்ன?

எனக்கு எதுவும் புரியவில்லை.

போதும்

உன் பாஷ்யங்களும்

பிரம்ம சூத்திரங்களும்.

ஒன்று செய்.

உன் வீட்டுப்பையன் படிக்கும்

எட்டாம் வகுப்பு 

விஞ்ஞானப் புத்தகம் 

ஒன்றை எனக்கு கொடு.

அறிவு வேட்கை கொழுந்து விட்டு

எரிய வேண்டிய நேரத்தில்

வெறும் 

நெய்யும் சுள்ளிகளும் குவித்து

தீயை எரித்து

நீ குளிர் காய்ந்தது போதும்.

அறிவைக் கொண்டு வா.

அழிவை அல்ல.

கடவுள் கதவைச்சாத்தி விட்டு

போயே போய் விட்டார்.

எங்கு போனார்?

கடவுளே! தெரிய வில்லையே!


____________________________________

2021-09-03

ஒரு ரோஜாவை....

 


ஒரு ரோஜாவை....

___________________________ருத்ரா


என்னை

இந்த முட்டுச்சந்தில்

கொண்டு வந்து நிறுத்திவிட்டாய்.

இந்த இணைய விரல் சொடுக்கல்களில்

சிக்கி விட்டேன்.

மறைந்தும் மறையாமலுமாய்

பளீரிட்ட உன்

சிரிப்பூவை வலைப்பூவாக்கி

பதிவுகள் இட்டுக்கொண்டே 

இருக்கிறேன்

கடலில் போட்ட கூழாங்கற்களைப்போல்.

தினமும்

கதை போல‌

சொற்களைக்கொண்டு

நீள நீளமாயும்

திமிரிய சுருள்களாகவும்

அனக்கொண்டாவைப்போல்

எழுதி எழுதி

அந்த சுட்டெரிக்கும் கனவை

விழுங்கத்துடிக்கிறேன்.

மடிப்பொறியும் கை பேசியும்

உன் உள்ளத்தின் 

மூலை முடுக்குகளைத்தேடித்தான்

ப்ரவுஸ் செய்து கொண்டிருக்கின்றன.

ஒரு வழியாய்

என் கல்லறையைக்

கட்டத்துவங்கிவிட்டேம்

இந்த‌

டிஜிடல் செங்கற்களைக்கொண்டு.

மெஷின் லேர்னிங் மூலம்

என் மூளைக்குள்

ஒரு புதிய செயற்கை மூளையை

பதியமிடப்போகிறேன்.

அந்த சிலிகான் சில்லுகளிலும்

கசியும் ரத்தத்தில்

ஊறிக்கிடப்பேன்.

மரணித்து மரணித்து

உயிர்த்துக்கொண்டே இருப்பேன்.

என்றைக்காவது

நான் எல்லாம் விறைத்த ரோபோவாய்

அபூர்வ ரசாயனக்கலவையின்

ஒரு உலோகத்தில்

ஒரு ரோஜாவை 

உன் முன் நீட்டுவேன்.


______________________________________

2021-09-02

பூச்செண்டுகள்

 பூச்செண்டுகள்

====================================================

ருத்ரா இ.பரமசிவன்





கண்ணீரும் கனவும் கொண்டு


துடைத்து வைத்த‌ பாதை.


விடியும்போது 


இப்படி 


வாசல் தெளித்துவைத்த பாதை.


நினவு நெளியல்களில்


நெய்த கோலங்கள்


இன்னும் விழவில்லை.


பறவைச்சிறகுகள்


நக்கிப்பார்த்து சொன்னது


"வானம் இனிக்கத்தான் செய்கிறது."


நம்பிக்கை


கசிவு வெளிச்சமாய்


விழுது இறக்குகிறது.


எதற்கு இந்த விடியல்?


அப்புறம்


எதற்கு மலையிடுக்கில்


அந்தி எனும்


ஒளி முடியல்?


புள்ளி வைத்து வைத்து


வாடிக்கையாக பால் ஊற்றும்


பால்காரி வைப்பாளே


அப்படி


இந்த வட்டச்சூரியன்களை


புள்ளி வைத்து வைத்து...


முடிக்கவே முடியாத ஒரு வாக்கியத்தை


முடக்க நினைக்கும்


நெஞ்சே!


அவன் வருவான்..


அவன் வருவான்..


போதும்!


ஒரு அடுகளம் நோக்கி


என்னை சங்கிலி கோர்த்து


இழுத்துக்கொண்டு


ஓடுவதெல்லாம் போதும்.


நீ சிரித்தாய்!


நானும் சிரித்தேன்!


அவ்வளவு தானே


அந்த இடைவெளிக்குள்


இத்தனை பிரபஞ்சங்களுமா


விழுங்கப்படவேண்டும்?


காலம் எனும்


நீள அகல ஆழங்கள்


போதும்..போதும்.


ஒரு கல்லறை கட்ட அல்லவா


ஓ காலமே


என் தோள்களில் வந்து


உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்.


உட்கார்ந்து கொள் கவலையில்லை!


கிழக்கு வயிறு


கிழிந்து கிழிந்து


போக்கு காட்டினாலும் கவலையில்லை!


எங்கள் சிரிப்புகள்


பிளந்து காட்டிய‌


அதோ அந்த பள்ளத்தாக்குகளில்


கிம்பர்லியின் வைரக்கிடங்குகள்


ஒரு நம்பிக்கையின் 


கதிர்ப் பூச்செண்டுகளை


அசைத்துக்கொண்டே இருக்கின்றன.



====================================================



நாம் படித்த பாடங்கள்

 நாம் படித்த பாடங்கள்

_____________________________ருத்ரா


ஈ மொய்த்த பண்டங்களை

தின்னாதே.

ஈ மொய்த்த பிண்டங்களை

பார்க்காதே.

முன்னது 

ரோட்டோர தின்பண்டங்கள்.

பின்னது

ரோட்டோர அனாதைப்பிணங்கள்.


_______________________________