2022-11-28

கோடு

 கோடு

_________________________________

ருத்ரா




மூச்.

இதற்கு மேல் பேசாதே

எதையும் கேட்காதே

எதையும் பார்க்காதே

ஒரு குரல்

நம் பிடறிக்குப்பின்னே

நம்மை இழுத்து நிறுத்தியிருக்கிறது.

அறிவு என்பது

கோடுகளை உடைப்பது.

விளிம்புகளை கடப்பது.

வாசல்களை திறப்பது.

அச்சம் எனும்

துருப்பிடித்த பூட்டுகளை

அடித்து நொறுக்குவது.

முன்னே ஒரு குரல்

நம்மை ஈர்க்கிறது.

இருட்டுக்குள் 

மேலும் ஒரு இருட்டான‌

கோட்டை தாண்ட அஞ்சிய கால்கள்

முடமாகின.

விளிம்பு எனும் ஊசி முனையில்

நின்றுகொண்டு

விழாமல் நிற்கிறோம்

கையில் சிந்தனைச்சுடர் ஏந்தி.

ஒரு சிறுவன் வரைந்த‌

கோட்டுச்சித்திரமாய்

பிரபஞ்சங்கள்

மேல் அடுக்கிய‌

கோடி கோடி பிரபஞ்சங்கள்.

கோடு ஆவியாகி அகன்றது.

விளிம்பு எல்லாம் நம்

சொகுசு மாளிகை ஆனது.

நமக்கு விளக்கு ஏந்த

குட்டிச்சூரியன்கள்.

நியூகிளியர் ஃப்யூஷன் 

எனும் அறிவின் திறவுகோல்

இந்த இருட்டுப்பிழம்பையே

பழரசம் ஆக்கி நீட்டுகிறது.

மனிதனின்

துளியிலும் துளியாய்

இருக்கும் 

உந்து விசை

குவாண்டமாய்

கிரீடம் சூட்டிக்கொண்டிருக்கிறது.

மனித ஆற்றலின்

வர்ணமற்ற வர்ணத்துக்கா

பொய்மைப்புருசுகொண்டு

வர்ணம் தீட்ட வருகிறீர்கள்?

சோமச்செடி என்றாலும் 

கஞ்சாச்செடி என்றாலும்

போதை போதை தானே.

அது கடவுளின் குரல் என்று

உங்கள் மூலம் 

பாஷ்யங்களாய்

எங்களை ஏமாற்றியது எல்லாம்

புரிந்து கொண்டோம்.

அறிவே அகண்ட மானிடம்.

மற்றக்

குப்பைகள் எல்லாம் அகலட்டும்.


______________________________________________





நிழலாடு முன்றில்

 நிழலாடு முன்றில்

______________________________________________

சொற்கீரன்



வீட்டு முற்றத்து கிரில் 

வீட்டுக்குள்

சூரியனைக்கொண்டு

நிழலைக்கலந்து

பிக்காசோவை பிசைந்து

ஊற்றியிருந்தது.

கிரேக்கத்து அந்த அழகிய அரக்கி

கூந்தலின் ஒவ்வொரு இழையிலும்

பாம்புகளாய் நெளிந்து

சிரித்துக்கொண்டிருந்தாள்.

காற்றெல்லாம் நஞ்சு.

எப்படி நஞ்சு கூடவா அழகு?

ஆமாம் 

இரண்டும் ஒன்று தான்.

அது அரக்கர்களிடம் இருந்தால்

நஞ்சு.

தேவர்களிடம் இருந்தால் அது

அமுதம்.

என்ன ஒரு மோசமான கணிதம்?

சமன்பாட்டை மாற்றிவிடத்தான்

சிவன் எண்ணினான்.

அதை அவனே குடித்துக்கொண்டான்.

அப்படியும் 

பிதுங்கி வெளியே வழிந்தது

நான்கு வர்ணமாய்!

அது அவனுக்கு மட்டுமே தெரியும்.

தேவர்களே அரக்கர்கள் என்றும்.

அரக்கர்களே தேவர்கள் என்றும்.

அதை தெரிவிக்க‌

அதோ

அவன் உடுக்கை ஒலிகள்

துடிக்க துடிக்க‌

கேட்டுக்க்கொண்டே இருகின்றன.

மாலை வந்தது.

நிழல்கள் கரைந்தன.

சமநீதியற்ற அந்த‌

நிஜங்களின் முள் மண்டிய‌

தேசத்தில் 

கால்களின் ரத்தம் பீறிட பீறிட‌

அவன் ஆடிக்கொண்டே இருக்கிறான்

அந்த‌

"ஊர்த்துவ தாண்டத்தை"


_____________________________________________________


2022-11-19

பட்டினத்தாரும் கொண்டைவைத்த பம்பரமும்

 பட்டினத்தாரும் கொண்டைவைத்த பம்பரமும்

__________________________________________________

ருத்ரா


காதறுந்த ஊசியும் வாராது காண்

கடைவழிக்கே

வாழ்க்கையே ஒரு தத்துவம்.

இது வாழ்க்கையை 

கரடு முரடாய் பார்க்காத‌

தெருவில் பம்பரம் விளையாடும்

சிறுவர்களின் மகிழ்ச்சிக்குமிழி ஒன்று

மூச்சு விடும் தருணங்களின்

அடிவயிற்றுக்கடல்.

ஊசிமுனைக்காதில் ஒட்டகங்கள்

நுழையலாம்

பணக்காரர்களுக்கு சொர்க்கம் இல்லை.

ஏழைகளாக இருப்பதே

இறைவனுக்கு மிக அருகில் 

இருக்கும் இடம்.

இறைவன் என்றால் கொம்பு முளைத்தவனா என்ன?

இந்த இறுமாப்பு தான்

விடுதலை பெற்ற எண்ண ஒழுக்கு.

இறைவன் அருகே இருப்பவன் தான்

இப்படி பட்டவர்த்தமான மொழியில்

இறைவனை உற்றுப்பார்க்க முடியும்.

பணம் என்றால் இறைவன் தான்

என்ற‌

ஒரு மொழிபெயர்ப்பு இருக்கிறதே.

அதுவும் பெண் உருவில் அழகாகவே

இருக்கிறது.

பண மறுப்பு வாதம்

கடவுள் மறுப்பு வாதம் அல்ல.

எல்லோரும் 

மகிழ்ச்சியாய் இருப்பது.

எல்லோருக்குள்ளும்

கடவுள் இருப்பது

அல்லது

அப்படி எதுவுமே இல்லாமல்

ஒரே வெள்ளையாய் கருப்பாய்

இருப்பது.

இப்படி பம்பரம் விடுவது எல்லாம்

உருமா கட்டப்படும் அடையாளம் தான்.

கூடவே நடந்துவரும்

இன்னொரு மனிதனுக்கு

கோரைப்பல் கொம்பு இருப்பதாய்

பகைப்புகை எப்படி கிளம்புகிறது.

ஒரு குருட்டுத்தனம்

வெறித்தனம் ஆகி

கொழுந்து விடுகிறது.

ஏதோ ஒரு பயம் இருட்டாய்

அதுவே பயமுறுத்தும் நிழலாய்

விரிகிறது.

சரி போகட்டும் வெறும் நிழல் தானே!

அதை கொஞ்சம் உற்றுப்பார்ப்பதற்குள்

எத்தனை

ரத்த ஆறுகள்?

எத்தனை எத்தனை

கபாலக்குவியல்கள்?

மனிதப்பரிமாணம்

மனிதனை விட்டு கழன்று விடுகிறது.

அப்புறம்

வரலாறுகள் கூர்மை மழுங்கி

மூளியாகி விடுகின்றன.

மீண்டும் எப்போது

கண்ணைத்திறக்கும் 

வெளிச்சம் வரும்.

மண்டையில் வெறும் கொண்டை வைத்த‌

பம்பரங்கள்

இங்கே சுழன்றுகொண்டிருக்கின்றன.

நிற்கும் போது 

திசைகள் அழிந்து

சுழன்று கொண்டேயிருக்கின்றன.

_______________________________________________________



2022-11-15

பாடுங்கள் ஒரு பாட்டு.

 


பாடுங்கள் ஒரு பாட்டு.





உங்களுக்கு நான் 

எத்தனை தடவை தான் சொல்வது?

என்னைத்தேடி

கூட்டம் கூட்டமாய் வந்து

ஈசல் சிறகுகள் உதிர்த்து

மீண்டும் சிறகுகள் முளைத்து

மீண்டும் மீண்டும்

சிறகுகள் உதிர்த்து

என்னத்தைக்கண்டீர்கள்?

கல்லில் இறுகிக்கிடக்கும்

அந்த மூடத்தனத்தை தான்

எத்தனை 

தடவைகள் தான் குளிப்பாட்டுவீர்கள்?

அதிலும் நீங்கள் குடமுழுக்கு என்று

சொல்லிவிட்டால்..

அதெல்லாம் இல்லை..

அந்த நீச பாஷையெல்லாம் வேண்டாம்.

கும்பாபிஷேகம் என்றால் தான்

கர்மம் தொலையும்.

தீட்டு கழியும் 

என்பார்கள்.

நீங்களே

உங்கள் உழைப்பின் நரம்புகள்

தெறிக்க கட்டிய கோவில்கள்

நீங்கள் நுழைந்து விட்டதால்

எப்படிப்பாவப்படும்?

எப்படித்தீட்டுப்படும்?

அதை தூய்மைப்படுத்துவதாய்

சொல்லும் மந்திரங்கள்..

உங்களின் அடிமைச்சேறு

என்பதை 

எப்போது புரிந்து கொள்ளப்போகிறீர்கள்?

போதும் ஈசல் சிறகுகளே.

இந்த வானம் முழுதும் 

உங்கள் அறிவின் சிறகுகளால்

தூய்மைப்படுவது உங்களுக்கு

தெரியவில்லையா?

ஓ மனிதர்களே!

இறைவா என்று என்னை நோக்கி

நீங்கள் கைகள் குவித்தாலும்

உங்களிடம் தான் இருக்கிறது

என் அறிவின் பல்கலைக்கழகம் எல்லாம்.

இவர்களின் எச்சில் தெறிப்புகளை

என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

என்னைக்காப்பாற்றுங்கள்.

உங்கள் நெஞ்சில் 

மனித அன்பின் கூடு ஒன்றை

கட்டிக்கொள்ளுங்கள்.

அதில் அந்த‌ சிறகொலிகள்

உங்களை சிலிர்க்கச்செய்யட்டும்.

போதும்.

உங்கள் போலித்தனங்களுக்கு

போடுங்கள் ஒரு பூட்டு.

பாடுங்கள் ஒரு பாட்டு

மனித நேயத்துக்கு

பாடுங்கள் ஒரு பாட்டு.


____________________________________________________

ருத்ரா

2022-11-07

கொலுசுகள்

 கொலுசுகள்

_________________________________

ருத்ரா



அங்கே இங்கே போனாலும்

என்னோடு பேசுகிறாய்.

என்ன சொல்கிறாய் என்று

என்னைக் கேட்க விடாமல் 

அந்த ஒலிப்பிஞ்சுகளின்

இனிமையைக்கொண்டு

மூடிக்கொள்கிறாய்.

அதை கண்களாக்கிக்கொண்டு

என்னை நீ

துளைக்கின்றாய்.

ஏழெட்டு வானங்களையும் 

ஊடுருவிக்கொண்டு.

உன் வெண்ணைச்சிற்பக்

கால்கள் கொண்டு நடந்து நடந்து

என்னை செதுக்கிக்கொண்டே இருக்கிறாய்

அந்த ஒலி உளிகளைக்கொண்டு.


_______________________________________



2022-11-06

அழலேர் வாளின் ஒப்ப

 அழலேர் வாளின் ஒப்ப

_______________________________________

சொற்கீரன்.



அழலேர் வாளின் ஒப்ப செயலை நீளிலை

அம்தழை அசைஇயும் மின்னிடை பேர்த்தும்

வெண்குருகு வெரூஉய் அடைகரை நீங்க

பைம்புனாலாடி பயிர்முகம் ஆங்கு

உள் உள் நகைப்ப ஒசியிடைத் தளிர்மகள்

விழிகள் உண்ட நெடுங்குன்றம் அனையான்

மெய்விதிர்த்தனன் ஆங்கு துறை புக்கோர் வீ அலர்

இறைபு மட நெடு நாரை ஒலி ஆர்த்தன்ன

முல்லை இவர் மன்றும் எதிர்தந்து ஒலிக்கும்.


________________________________________________________________


அகநானூற்றுப்பாடல் 188 ன் அழகிய சொற்கள் சில கோர்த்து நான் எழுதியது இது.

அவள் தழையுடையும் மின்னல் இடையும் கருவிழியும் அவனை மயக்கின.அவர்களுக்கிடையே நடந்த சந்திப்பு ஊரார் காணும்படி அலர் தூற்றும் ஒலிகளால் மொய்த்துக்கொண்டது.இதைப்பற்றி நான் எழுதிய சங்க‌நடைச்செய்யுட் கவிதை இது.



பொழிப்புரை

_____________________________________________________‍‍_________________


தீக்கொழுந்து போன்ற வேலை ஒத்த  நீண்ட இலைகளை உடைய அசோக மரத்து அழகிய தழையினை ஆடையாக உடுத்தியும் அந்த அழகில் மின்னல் போன்ற இடை அசைந்து வரவும் அதில் அச்சம் கொண்ட வெண் குருகுகள் அந்த பசுமை செறிந்த ஆற்றின் கரையை விட்டு நீங்கவும் பசுமையும் குளுமையும் நிறைந்த நீராடலில் திளத்த அவள் அவனைக்கண்டதும் முகம் மலர்ச்சியுற்று அதனால் வெட்கமும் கொண்டு தனக்குள் மென் நகை புரிகின்றாள். மெல்லிய தளிர்களை ஆடையாய்  உடுத்தி குழைவு கொண்ட இடையுடன் நின்று அவனை நோக்கியதில் அவள் விழிகளால் அவன் உண்ணப்பட்டு விட்டான்.அவனும் உணர்ச்சியுள் ஆட்பட்டு நின்று விட்டான்.நெடுங்குன்றம் போல் நின்ற அவன் அவள் விழிகளில் வீழ்ந்து விட்ட இந்நிலையை அந்த ஆற்றங்கறைக்கு வந்தவர்கள் கண்டு விட்டனர்.இதனால் பற்றிக்கொண்ட அந்த ஊர்ப்பழி எனும் அலர் மெல்லிய சிறு சிறு பூக்கள் காற்றில் இறைவது போல் பரவிவிட்டது. மெல்லிய மடமை பொருந்திய நாரைகள் ஒலி கிளப்புவது போல் அங்கு ஒலிப்புகள் எழுந்தன.அவை முல்லை கொடி படர்ந்து நிற்கும் மன்றுகளிலும் பட்டு எதிரொலித்தன.


_________________________________________________________________சொற்கீரன்.

2022-11-02

குகை

 குகை 

______________________________________



தென்காசியிலிருது கொல்லத்துக்கு

ரயிலில் பயணம்.

ரயில் ஆரியன் காவு குகை வழிக்குள்

புகுந்து 

கொஞ்சம் இருட்டு சதையை

பிய்த்துக்கொண்டு

நம் மீது கொஞ்சம் சுவாரஸ்யமான‌

திகில் பூச்சு பூசி விட்டு

வெளிச்சத்துக்கு வந்தது.

"ஆர்யன்"என்பதில் அந்த "ஆர்"

தமிழின் ஆழம் நிறைந்த வேர்ச்சொல்.

சங்கத்தமிழின் எல்லா சொற்களிலும் 

ஒரு உயிர்ப்பொருள் பூசி நிற்கும்

தனிச்சொல் உரிச்சொல் அசைச்சொல்.

அது உலக மொழிகளிலும் வேர்பிடித்து

அப்புறம் 

கைபர் போலன் கணவாய் வழியே 

எப்படி இந்த "வெறி" பிடித்து

தமிழையே அரிக்கும் கரையான் ஆனது?

எப்படி இருப்பினும் 

வாழ்க அந்த தமிழ்க்கரையான்.

தமிழால் தமிழும் வீழும் என்பது

இது தானோ?

சேர நாடு கேரளநாடு ஆகி 

தமிழை நோக்கி அது ஒரு

ஏளனப்பார்வையை வீசுவதும்

ஒரு வேதனையான வேடிக்கை தான்.

அவர்களின் வரலாற்றுத்தடங்கள் 

நம் பதிற்றுப்பத்தில் பதிந்து கிடப்பது

ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே தெரியும்.

மலையை ஆளும் நம் மலையாளச்சேரன்

சமஸ்கிருத புகை மண்டிப்போனதால்

அவனுக்கு நாமே கூட மிலேச்சன் 

ஆகிப்போனோம்.

சரி.போதும்.

அந்த தலைவலிக்கு ஏதோ ஒரு 

ஆயின்ட்மென்ட் தடவி விட்டு

மடியில் கிடக்கும் நிகழ்கால‌

நேனோ செகண்டுகளுக்குள் 

படிவோமாக!

ரயிலின் ஊர்வில் என்

கனவுப்பொதிகளும் ஊர்கின்றன.

வெளியே பச்சைத்திட்டுகள் 

மரங்களின் பசுமைக்கொத்துகள்

குவியல் குவியலாய் தென்னைகள்

கூந்தலை சிலுப்பிக்கொண்டு

எங்களுக்கும் தலை வாரி 

பூ முடித்துவைத்துப்போங்களேன்

என்ற ஏக்கத்தை 

அசையும் சித்திரங்களாக்கின.

சின்ன சின்ன ஆறுகள்

பாம்புகளாய் நெளிந்து ஓடின.

அப்புறம்

அந்த தடக் தடக் ஒலி

தாலாட்ட 

ஒரு இனிமையான மௌனத்துள் 

மூழ்கினேன்.

வளைந்து வளைந்து

வளையல் பூச்சி மாதிரி

ரயில் பெட்டிகள் இழுத்துக்கொண்டு

நகர்ந்தன.

அந்த தண்டவாளங்களில்

சக்கரங்கள் மெல்லிதாய் 

சிணுங்கிய குரலில்

கண்ணுக்குத்தெரியாமல் 

அந்த கொலுசுகளை

ஒலித்துக்கொண்டிருக்கிறாளே

யார் அவள்?

_______________________________

ருத்ரா