பாடுங்கள் ஒரு பாட்டு.
உங்களுக்கு நான்
எத்தனை தடவை தான் சொல்வது?
என்னைத்தேடி
கூட்டம் கூட்டமாய் வந்து
ஈசல் சிறகுகள் உதிர்த்து
மீண்டும் சிறகுகள் முளைத்து
மீண்டும் மீண்டும்
சிறகுகள் உதிர்த்து
என்னத்தைக்கண்டீர்கள்?
கல்லில் இறுகிக்கிடக்கும்
அந்த மூடத்தனத்தை தான்
எத்தனை
தடவைகள் தான் குளிப்பாட்டுவீர்கள்?
அதிலும் நீங்கள் குடமுழுக்கு என்று
சொல்லிவிட்டால்..
அதெல்லாம் இல்லை..
அந்த நீச பாஷையெல்லாம் வேண்டாம்.
கும்பாபிஷேகம் என்றால் தான்
கர்மம் தொலையும்.
தீட்டு கழியும்
என்பார்கள்.
நீங்களே
உங்கள் உழைப்பின் நரம்புகள்
தெறிக்க கட்டிய கோவில்கள்
நீங்கள் நுழைந்து விட்டதால்
எப்படிப்பாவப்படும்?
எப்படித்தீட்டுப்படும்?
அதை தூய்மைப்படுத்துவதாய்
சொல்லும் மந்திரங்கள்..
உங்களின் அடிமைச்சேறு
என்பதை
எப்போது புரிந்து கொள்ளப்போகிறீர்கள்?
போதும் ஈசல் சிறகுகளே.
இந்த வானம் முழுதும்
உங்கள் அறிவின் சிறகுகளால்
தூய்மைப்படுவது உங்களுக்கு
தெரியவில்லையா?
ஓ மனிதர்களே!
இறைவா என்று என்னை நோக்கி
நீங்கள் கைகள் குவித்தாலும்
உங்களிடம் தான் இருக்கிறது
என் அறிவின் பல்கலைக்கழகம் எல்லாம்.
இவர்களின் எச்சில் தெறிப்புகளை
என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
என்னைக்காப்பாற்றுங்கள்.
உங்கள் நெஞ்சில்
மனித அன்பின் கூடு ஒன்றை
கட்டிக்கொள்ளுங்கள்.
அதில் அந்த சிறகொலிகள்
உங்களை சிலிர்க்கச்செய்யட்டும்.
போதும்.
உங்கள் போலித்தனங்களுக்கு
போடுங்கள் ஒரு பூட்டு.
பாடுங்கள் ஒரு பாட்டு
மனித நேயத்துக்கு
பாடுங்கள் ஒரு பாட்டு.
____________________________________________________
ருத்ரா
No comments:
Post a Comment