2014-09-07

சில்லென்று















சில்லென்று
====================================ருத்ரா


சில்லென்று சிரிக்கும் இந்த‌
புல்லின் சிரிப்பை உணர்.
உன் மன நெருப்பு மடிந்து போகும்.
உன்னை தக தக வென‌
உள்ளே எரியவைக்கும் அந்த‌
நரம்புக்கூட்டம் முறுக்கி இசைக்க வைக்கும்
முகாரிகளுக்கு
உன் மாணிக்க செவிகளை தீனியாக்காதே.
அச்சம் எனும் வெடிகுண்டுகளை
உன் மீது பொழிந்து
உன்னைத் தரை மட்டம் ஆக்கத்துடிக்கும்
அந்த நினைப்புகளை
பொடிப் பொடியாக்க முந்திக்கொள்.
இல்லாவிட்டால்
எழில் மிகு ரோஜாக்கள் எல்லாம்
எருக்கம் பூக்காடாய்
உன் கண்களை மறைக்கும்.
பொறாமை வெடிக்கும்போது
ஆயிரம் அணுகுண்டுகள் கூட‌
தோற்றுப்போகும்.
விடிகின்ற அழகிய வானத்தை
நீயே ஹிரோஷிமா நாகசாகி ஆக்கிக்கொள்வதா?
அந்த நகரத்தின் பெயர்களை இன்னும்
உச்சரிப்பது கூட‌
மனித பரிமாணத்தை நோக்கி
நடக்க மறுக்கும்
அவநம்பிக்கையின் அவலடசணம் அது.
ஒவ்வொரு கணத்தையும்கூட‌
கோடியில் ஒரு பங்காய் உரித்துப்பார்க்கும்
நுட்பம்  தெரிந்த மனிதனே!
காலம் ஒரு காலன் என்று
கயிறுவீசும் பழங்கதைகளில்
நீ மக்கிப்போவதா?
ஒரு வளையல்பூச்சி வளைந்து நெளிந்து போகும்
துடிப்பின் அந்த சாணக்கியத்தை
உற்றுப்பார்!
வாழ்க்கையை வாழ்ந்துபார்க்க‌
உன‌க்கு சொற்பொழிவுகள் தேவை இல்லை.
அந்த குட்டிக்கதைகள்
வேண்டுமானால் நீ  அணைத்துக் கொண்டு
தூங்க சுகமாயிருக்கலாம்.
அந்த திண்டுகளில்
அடைக்கப்பட்டிருப்பவர்கள்
ஓசோக்களாயிருக்கலாம்
ஸென் புத்தர்களாயிருக்கலாம்.
வடிவேலு கவுண்டமணிகளாகக் கூட இருக்கலாம்
வாழ்க்கை நம்மை கடித்து சவைப்பதிலிருந்து
இந்த கடிஜோக்குகள் நம்மைக் காப்பாற்றலாம்.
கமெர்சியல் ப்ரேக் எனும்
இலவச கொசுக்கடிகளுடன்.
====================ருத்ரா
.

2014-09-06

சிறகுகளாய்

   
 
                                              1996ல் நான் கம்பியூட்டரில் வரைந்த ஓவியம்

சிறகுகளாய்
====================================ருத்ரா
கனவு விரிகிறது
சிறகுகளாய்.
என் பிம்பத்தில்
உன் இதயம் தேடுகிறேன்.
நுரைக்கீறல்களில்
கனவுப்படலம் கூட‌
ஓலம் இடுகிறது.
ஒரு முத்து உதிர்த்தால்
குறைந்தா போவாய்?
அன்றொரு நாள்
இதழ் பிரித்தாய்
சொல் அமுதம் கிடைக்குமென்று
கோடி தருணங்கள்
ஊசி மழைபெய்ய‌
காத்திருந்தேன்.
கல்லெறிந்து ஒரு சிற்றலையை தூவிவிட்டு
சென்று விட்டாயே.
பேயிரைச்சல் தேவையில்லை
சுநாமி என்று பெயர் சூட்ட.
நுள்ளிச்சென்ற உன் மௌனம் போதும்.
அது கடலையும் தூர்த்துவிட்டது.
வானத்தையும் குப்புறக்கவிழ்த்து விட்டது.
மட வாத்துக்கு
கொட்டாங்கச்சிக்குளம் கூட‌
கொந்தளிக்கும் கடல்கள்.

=============================================ருத்ரா.

 

2014-08-20

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் உயரம் கேட்டால்
இமயம் படுத்துக்கொள்ளும்
வயதுகள் கணக்கை மறந்து விட்டு
கை கோத்து இங்கு  ஆடும்
சினிமா என்னும் வானத்தில்
இருட்டுக்கு பெயரே வெளிச்சம்.
மின்மினிப பூச்சி காதலுக்கு
நிலவுகள் ஆயிரம் மூழ்கி விடும் .
இருட்டிக்கிடக்கும் வாழ்வு மட்டும்
மிச்சம் மிச்சம் இங்கு மிச்சம் .
இந்தியா தேடி கடல் முழுதும்
அலைந்தான் அலைந்தான்
கொலம்பஸ் அறிவோம் .
இந்தியா என்றால் இவ்வளவு தானா ?
நொந்தே போவான் நொடிந்தே போவான்
வெளிச்சம் வேண்டாம் இருட்டே போதும்
இதைத் தின்றே கிடப்போம்
வேறொன்றும் அறியோம் பராபரமே!


=================================
 

பசலை பூத்தே

me
 
 
 
பசலை பூத்தே
=====================================ருத்ரா
 
 
கதழ்பரி கலிமா அலரிதூஉய்
ஆறுபடுத்தாங்கு வேங்கை புரையும்
முன்னிய வெஞ்சுரம் இலஞ்சி வீழ்த்தும்
இன்னிய பலவின் முள்பசுங்காய்
மூசும் தும்பி அதிர்வினம் யாழ்க்கும்.
நெடுந்தேர் மணிநா நடுங்கி இமிழும்
ஓதையுண்பினும் ஓவா உறுபசி
உழல்படு வண்டினம் வெள்வெளி  ஆர்க்கும்.
நீள்மலைப்பாம்பின் அன்ன நெடுவேர்
தடுக்கும் மறிக்கும் எவன் கொல் செயினே.
பெரும்பணைத் தோளின் கடுப்ப விரையும்
துப்புநிலை அறியும் அதிர்கலிப் பொறிமா.
துவள்படும் நெஞ்சின் என் பொங்குதிரை ஈண்டு
அடு கிளர் அகலத்து அவன் உள் உள் தைக்கும்
அகவும் மஞ்ஞை என்னுள் அகவி
உருவும் என்னுயிர் மின்னல் மயிரிய‌
நார்ப்பூ தொடுக்கும் பசலை பூத்தே!
 

==================================
 

 

2014-07-06

பிரம்மத்தும்மல்





பிரம்மத்தும்மல்
=========================================ருத்ரா

"நானு"க்குள் பாதாளக்கரண்டியை
வீசியிருக்கிறேன்.
டாஸ்மாக்குக்குள் போய்
ஒரு குவாட்டர் கட்டிங்கில்
மனிதன் பீஸ் பீஸாய் ஆகி விடுகிறான்.
அங்கே ஊறுகாய் தொட்டுக்கிற‌
சமாச்சாரம் மாதிரி தான் இதுவும்.
ஆனா
இது ரமணா பட்டணம் பொடி.
"நான்" என்ற அந்த சொல்லின்
நமைச்சல் தாங்க முடியலே.
ஆத்மாவை இப்படி ரவை ரவையாய் ஆக்கி
அதிலும் "ஸ்ட்ரிங்" துடிப்பிழையாய் ஆக்கி
ஒரு ஹோலொகிராஃபிக் வெளியில்
குவ்வாண்டம் டெலிபோர்ஷன் மூலம்
எங்கு வேண்டுமானாலும்
போங்கள் வாங்கள்.
பெருமாளின் தொப்பூள்கொடி வழியாய் போய்
அந்த பிரம்மனை
கொஞ்சம் வெளியே அனுப்பிவைத்து
புதிய மனுஷாளை படைத்து விட்டு
அப்புறம் கிழே இறங்குங்காணும்.
இப்படியெல்லாம் தான்
ரிஷிகள் யோசித்தாள்
அந்த சோமச்செடியை நசுக்கிய‌
சாறை உறிஞ்சிய பிறகு.
அப்புறம் அவா சொல்றதுலே
பாதி பெரியவாள்.
பாதிக்கு மேலே பெரியார்வாள்.
உபநிஷதம் உபனிஷதம்னுட்டு
பொசுக்கு பொசுக்குன்னு
கூட்ஸ் வண்டி விடரேழே
பிரஹ்மம் ப்ரக்ஞான கனம்னு
ஒண்ணு வருது பாத்தேழோ
இதெ எங்க திருநெல்வெலிக்காரா
சொல்வா
"ஓர்மை"ன்னு.
பிரபஞ்சத்துக்கு ஒரு ஓர்மை உண்டு.
காலபரிமாணத்தை
தலைகீழ் வர்க்கத்துல கொண்டுபோய்
அதெ காணாம கரச்சுப்பிடுங்கோ
அப்போ
ப்ளாங்க் கான்ஸ்டாண்ட் காணாம போய்டும்.
ஆனா "ஆலன் குத்" விஞ்ஞானி சொல்றான்
அப்பொதான்
ஸ்கேல் எனும் அளவு
தாறுமாறாய் பூதாகாரமாய்
எக்ஸ்பொனென்ஷியல் உருப்பெருக்கம்
அடைகிறதாம்.
அது பிரபஞ்ச உட்கிடக்கை.
கருப்பொருள் உரிப்பொருள்
கரும்பொருள் எனும் டார்க் மேட்டராய்
ஈர்ப்புக்கு மல்லுகட்டுகிறது.
கூர்மையான அந்த ஓர்மை
மனிதன் கிழிந்த பாயில்
வாய் கோணி
வரட்டிமேல் படுக்கப்போகும் முன் கூட
குறிச்சொல் ஒலிக்குமாம்.
மனம் உடல் உயிர் வெளி ஈர்ப்பு
எல்லாம் திருக்கி முறுக்கி
பிசைந்த நாத்திக பிரசாதம் இது.
இதில்
நாராயாணனும் இல்லை.
சிவனும் இல்லை.
நியுரானும் பேர்யானும்
புணரும் நிகழ்ச்சியில்
கிராண்ட யூனிஃபிகேஷனில்
ஊளை நாயும்
உடுக்கை ஒலியும் ஒன்றிப்போகும்.
புரிகிறதா..

பி.ஹெச்டியும் இல்லை
ஒரு வெங்காயமும் இல்லை.
"நான் ஹோமோஜெனஸ் ஹைபர்ஜியாமெட்ரிக் ஃபங்ஷனுக்கு"
சூத்திரம் எழுதி வைத்து
உலகத்தையே தடலாடியாய் உருட்டித்தள்ளிவிட்டு
சுருட்டி மடக்கி படுத்துக்கொண்டு
வானத்தையே வெறித்த‌
நம் ராமானுஜனும் அந்த‌
"கருந்துளை"க்கு அப்பாலும்
தூண்டில் வீசி விளை யாடிய அற்புதங்கள்
நிறைய உண்டு போலும்
இந்த பட்டணம் பொடியில்!

சாமி என்னென்னமோ சொல்றாரே!
ஆமா
அது நாராயணயம் இல்லெ.
"நாஸா"யணம்.
நேத்து தான் சாமிஜி
பிலடெல்ஃபியாவுல லெச்சர் குடுத்துட்டு
நேரே இங்க வந்திருக்கார்.
நம்ம வூரு பத்தமடைக்காரரு தான்

புரிஞ்சுதுண்ணா
அதுக்கப்புறம்
அகத்தியன் அருவி
கல்யாணி தீர்த்தம் குடிக்கலாம் வாங்கோ.
கவிஞர் விக்கிரமாதித்தன்
அங்கே தான்
தலையை கைக்கு வச்சு
மல்லாக்கப்படுத்து
விண்வெளியில் இடுக்கி இடுக்கிப் பார்த்து
ஏதோ ஒரு "ஓரியனின்"
நாசிக்குள் மூக்குப்பொடியை
திணிச்சிட்டு
பிரம்மத்தும்மலுக்காக காத்திருக்கார்.
அவர்ட்ட மீதிய கலந்துக்கலாம்.

========================================================


இடிபாடுகள்.





இடிபாடுகள்.
=========================================ருத்ரா



சென்னையில்...
மவுலிபுரம்
மனித உயிர்களின்
மலிவுபுரம்
ஆகிப்போனது.

சிமிண்டும் கல்லும்
மணலும் கூட‌
தேர்தலில் நின்றால்
மந்திரி தான்.

அடுக்கு மாடியில்
ஒரு இடுக்கு தான்
இப்போதைய‌
இந்தியாவின் கனவு.

அதற்கே
டன் கணக்கில் அல்லவா
தேவைப்படுகிறது
கரன்ஸி.

பணவீக்கம்
பொருளாதாரவளர்ச்சி.
கட்டுமான பங்குகள்
குத்தாட்டம் போடுகின்றன‌
தினம் தினம்
டி.வி வாந்திகளில்.

"அதோ
கால் தெரிகிறது"
நெஞ்சு பிழியும் குரல்.
இன்னும்
நசுங்காமல் கொக்கரிக்கும்
"கருப்பு"அரக்கனின்
முக அடையாளம்
தெரியவில்லையே.

மானுடம் இங்கே
கூழாய்ப் போன சாந்தில்
மேஸ்திரியின் கூவல்.
"டேய்..
ஒழுங்காய் செங்கல்
அடுக்கு"
அந்த குரலின் பிணமும்
அங்கு தான்.

எல்லாம்
எலும்புக்குவியல்தான்.
இந்த காங்க்ரீட்டையும்
அடித்து நொறுக்கி எடுக்க‌
காண்ட்ராக்ட் தயார்.

காசு பணம் துட்டு டப்பு
என்று
கானாப்பாட்டு
இங்கு எல்லோருக்கும் குஷி.

முதலில்
பிணங்கள் தான் பிறக்கின்றன.
சம்பாதித்த பிறகு தான்
மனிதன்கள் பிறக்கிறான்கள்.

இடிபாடுகளையும்
நிமிண்டியெடுத்து
உயிர்மீட்கும் அந்த‌
இதயங்களில்
இந்தியாவின் ஈரப்பசை
இன்னும் இருக்கிறதே.

கோடி நமஸ்காரம் அதற்கு.

இரண்டு அடுக்குகள்
பூமியின்
இரைப்பைக்குள் என்றார்கள்.
மிச்ச அடுக்குகளில்
மனிதக்குப்பை போக‌
கொஞ்சம்
ஸ்டீலும் கப்பியும் தேறுமே!
காஸ்ட் அக்கவுண்டன்ட்
கணக்கு போட்டார்.
இன்சுரன்ஸும் சட்டமும்
தலையை பிய்த்துக்கொண்டது.

கிடக்கட்டும் விடுங்கள்.
இடிபாட்டுச் செய்தியின் அருகேயே
வழ வழ பேப்பரில்
மூவர்ண ஃபோட்டோ ஃபினிஷில்
விளம்பரம் வந்திருக்கிறது
படியுங்கள்.
டபிள் பெட் ட்ரிபிள் பாத்ரூம்..
ஃப்ளாட்
எழுபத்திஅஞ்சு லட்சம் தானாம்..

=======================================
07.07.2014ல் எழுதியது.








2014-06-28

"ஓலைக்கிளிக‌ள்"





"ஓலைக்கிளிக‌ள்"
==================================ருத்ரா இ.பரமசிவன்
(அன்னைய‌ர் தின‌ம்)....



அம்மா
உனக்கு ஒரு பரிசு வாங்க‌
கடை கடையாய்
ஏறி இறங்கினேன்.
என்ன வாங்குவது?

இறுதியாய்
கிரிஸ்டலில்
இதயம் வாங்கினேன்.
உள்ளே
பச்சை நரம்புகளில்
சிவப்புக்கடல்.
அந்த‌
உன் கருப்பையை
ஈரம் சொட்ட சொட்ட‌
என் கைப்பையில்
நான் திணித்துக்கொண்டேன்.

அந்த‌ ப‌த்துமாத‌ இருட்டுக்குள்
சூரிய‌ப்பிழ‌ம்பாய்
நான் உருப்பிடிக்க‌
நீ உன்னை
உலைக்க‌ள‌மாய்
காய்ச்சிக்கிட‌ந்த‌தை
எந்த‌ மெம‌ரி சிப்பில்
இட்டு வைக்க‌ முடியும்?
ம‌ல‌ட்டு டிஜிட‌ல் க‌ர்ப்பப்பையை
ம‌டிப்பொறியாய்
சும‌ந்து சும‌ந்து
ப‌ன்னாட்டுக‌ம்பெனியின்
ப‌ண‌ங்காட்டு க்யூபிகிள்க‌ளில்
வியூக‌ம் அமைத்துக்கிட‌க்கும்
வித்தைக‌ளில்
உன் ம‌க‌ள்
இந்த‌ உல‌க‌த்தையே
பாப்கார்னாய் கொறித்து
கொழித்து வாழ்கிறாள்.

அந்த ப‌தினைந்தாயிர‌ம் ரூபாய் கிரிஸ்ட‌ல்
அழ‌கான‌ ப‌ரிசு தான்.
என் கைப்பை
குலுங்கி குலுங்கி
வீடு நோக்கி வ‌ந்த‌து.

வ‌ரும் வ‌ழியில்
ஒரு பிளாட்பார‌த்தில்
ஒரு ந‌லிந்த‌ தாய்
தோளில்
துணித்தொட்டிலில்
சுருண்டுகிட‌க்கும்
குழ‌ந்தையை சும‌ந்துகொண்டு
வியாபார‌ம் செய்து கொண்டிருந்தாள்.
"அம்மா
இந்த‌ பொம்மையை வாங்கிக்கொள்ளுங்க‌ள்"
ஓலைக்கிலுகிலுப்பை.
ஓலைக்கிளிக‌ள்.
ஓலையில் கொண்டைச்சேவ‌ல்க‌ள்
அம்மா..அம்மா
ஐந்து ரூபாய்க்கு ரெண்டு
வாங்கிக்கொள்ளுங்க‌ள்.."

குழ‌ந்தையோ
அப்போது தான்
அரையும் குறையுமாய்
அவள் மார்பை
ச‌ப்பிப்பார்த்து ஏமாந்து
ப‌சி ம‌ய‌க்க‌த்தில்
க‌ண்மூடிக்கிட‌ந்த‌து..
"இந்த‌ ம‌ர‌ப்பாய்ச்சியையாவ‌து..
வாங்கிக்கொள்ளுங்க‌ள்
மூன்று ரூபாய் தான்..."

என்னால்
அவ‌ளைக்க‌ட‌ந்து போக‌முடிய‌வில்லை.
சிறுவ‌ய‌தில்
அம்மா வாங்கிக்கொடுத்த‌
அந்த‌ ஓலைக்கிளி
எழுப்பிய
கீச்சு மொழியின்
சி சி ப்ள‌ஸும்
ஊப்ஸும்
இப்போது தான் புரிந்த‌து.
பிர‌ச‌வ‌ வ‌லியில்
என் அம்மா குழ‌றிய‌
பைன‌ரி ஒலிப்பு அது..
"என் க‌ண்ணே
என் க‌ண்ணே"

அடுத்த‌ க‌ண‌ம்
அந்த‌ அம்மாள்
கையில் உள்ள‌
ஓலை உருவ‌ங்க‌ளை
எல்லாம்
அள்ளிக்கொண்டேன்
என் அம்மாவுக்கு.
கைப்பையில் இருந்து
ஆயிர‌ம் ரூபாய்க்க‌ட்டை
அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய்
அவ‌ள் கையில் திணித்து விட்டு
ந‌ட‌ந்து கொண்டே இருந்தேன்
"அம்மா
சில்ல‌றை இல்லையே.."
அவ‌ள் குர‌ல் என் காதுக‌ளில்
விழ‌வில்லை.

அவ‌ள் ஒரு தாய்.
அந்த‌ துணிச்சுருணையில் நான்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍========================================ருத்ரா
12 மே 2013

2014-06-27

பெண்ணே !

Rainbow-Hair-Technology-Woman-Wallpaper-1280x800.jpg
http://black-wallpapers.com/wallpapers/rainbow-hair-technology-woman-wallpaper/ WITH COURTESY



பெண்ணே !
===========================================ருத்ரா இ.பரமசிவன்

தண்டைகள் குலுங்க‌
கிளிந்தட்டு விளயாடிய போது
நினைத்திருந்தாயா?
கிளிச்சிறகுகளை கத்தரித்து விட்டு
கூண்டுக்குள் வைத்து
கூடி கும்மாளம்
அடித்துக்கொண்டிருப்பார்கள் என்று.
ஆனாலும் கிளியே பார்.
காலம் மாறிவிட்டது.
வயதுக்கு வந்து விட்டாய் என்று
உலக்கைக்கோடுகள் போட்டு
உன் உலகத்தை குறுக்கி வைத்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

குங்கும செப்புக்குள்
ஒரு மாளிகை கட்டி
உன்னை வைத்திருந்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

முரட்டுத் தாய் மாமன்களின்
மீசைக்கு நெய்தடவி
ஆசைக்கு தீனியாகி உன்னை
உறவு என்னும் கொட்டாங்கச்சிக்குள்
மடக்கி வைத்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

காதலாவது கத்தரிக்காயாவது என்று
வரதட்சிணையும் கழஞ்சுத்தங்கமும்
கொடுத்து வாங்கிவந்த கணவனுக்கு
கத்தரிக்காய் வதக்குவதும்
கறி சோறு ஆக்கிப்போடுவதுமே
உன் எல்லை என்று இருந்தவர்களும்
மாறித்தான் போனார்கள்.

பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
என்றவர்களும்
புதை குழிக்குப்போய்
ரொம்ப நாளாய் ஆச்சு.
அவர்களும் மாறித்தான் போனார்கள்.

இப்போது பார்.

மாட்டுச்சங்கிலியை நினவுபடுத்தும்
மாங்கல்யம்
சுவரில் ஆணியில்
தொங்குகிறது.

பந்தல் கெட்டிமேளம் மொய்களோடு
அத்தியாயத்தை முடித்துக்கொள்ள்ளும்
கல்யாணங்கள்
பதிவாளர் அலுவலகத்தில்
கையெழுத்துக்கு வந்தது.

பெண்ணே!
வளையல்களை மட்டும் குலுக்கி
கிளர்ச்சியூட்டும் உன் கையில்
விஸாவும் பாஸ்போர்ட்டும் அல்லவா இருக்கிறது.

உனக்கு எதற்கு இந்த‌
வேதமும் பிரம்மமும்
என்று ரகசியம் காத்தவர்கள்
உன் அறிவுச்சுடரில்
பிரம்மன்கள் எல்லாம்
அணைந்து போய் நின்ற ரகசியத்தை
இவர்கள் புரிந்து கொண்டார்கள்.

உன் அறிவுப்பெட்டகம் திறந்த போது
இந்த அஞ்சறைப்பெட்டிகளோடு
கம்பியூட்டர்களும் அல்லவா
திறந்து கொண்டுவிட்டன.
அதில் உன் சமையல் திறங்கண்டு
அடிமையாகின பலப்பல‌
பன்னாட்டுக்கம்பெனிகள்.

அம்மிக்கல் இருந்தபோது நீ அரைத்தாய்.
மிக்ஸி வந்த போது
இவனும் அரைக்கிறான்.
கிணரும் கல்லும் இருந்தபோது
நீயே எல்லாம் துவைத்தாய்.
வாஷிங் மெஷினில்
இன்று அவனும் துவைக்கிறான்.
அடுக்களையில் அன்று
பாத்திரங்கள் தேய்த்து தேய்த்து
மல்யுத்தம் புரிந்தாய்.
டிஷ் வாஷரில்
அள்ளிப்போடுகிறான் பாத்திரங்களை
இவனும் இன்று.
"டெம்பரேச்சர் ஆவன்"
குமிழ்கள் இருவரும் திருகலாம்.
சமையலும் கூட பொதுவுடைமை.

ஓ! பெண்ணே!
எந்திரமாய் இருந்தாய்.
எந்திரப்புரட்சியில்
எழுச்சி கொண்டாய்.

பெண்ணே!
நீ இவர்களுக்கு எந்திரமாய் இருந்தபோதும்
அறிவுக்கண் விழித்து
அதிர்ச்சி வைத்தியம் அளித்துவிட்டாயே.
இப்போது எந்திரங்களின் எந்திரங்களுக்கெல்லாம்
பொறி நுட்பம் எழுதத்தெரிந்த பிறகு
இந்த உலகம் கூட‌
உன் கால் கொலுசுவின்
ஒரு குண்டுமணிக்குள் தான்
குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

பெண்ணே! நீ வாழ்க!

2014-02-25

ருத்ரா இ.பரமசிவன்

வாசலில் ஒரு கோலம்

வாசலில் ஒரு கோலம்.........................ருத்ரா
=======================================

வாசலில் ஒரு புள்ளிமான்
தன் புள்ளிகளையெல்லாம்
உதிர்த்துவிட்டு சென்றதோ!
அவள்
விரல் வழியே
வாசல் எல்லாம்
மின்னலில் ஜாங்கிரிகள்.
லால்பாக்கும் கப்பன்பாக்கும்
பெங்களூரை விட்டு
பெயர்ந்து வந்தன‌
இங்கு பூக்களாக‌
இறைந்து கிடக்க.
மேகப்பஞ்சுகள் தூரிகைகள் ஆகி
வானவில் அக்ரிலிக் குழம்பை
சித்திரக்கொடிகளாய்
வாசலில் படர்ந்து கிடந்தன.
இதனுள்
என் இதயத்தை
அவள்
எங்கே வரைந்து வைத்திருக்கிறாள்?
அவள் கால் பதிந்த தடங்களில்
சிற்றெரும்புகளின் வியூகம்.
அவைகளுக்கு கூட‌
அவள் இனிய ஸ்பரிசம்.
என் இதய ஸ்பரிஸம்
இங்கே எங்கு துடிக்கிறது?
கோலம் முழுவதும்
என் சுவாசங்களால்
ஒற்றி யெடுத்தேன்.
எங்கே இதில்
அவள் அன்பின் வாசனை?
அங்கேயே நின்றேன்.
எவ்வளவு நேரம் நின்றேன்?
எனக்குத்தெரியவில்லை.
என் கால்களின் அடியில்
திடீரேன்று
உலுக்கல்
குலுங்கல்
குலுங்கியது பூமி மட்டும் அல்ல.
அண்டமே அதிர்ந்தது.
இலைச்சருகுகள் போல்
நட்சத்திரங்களின் இடிபாடுகள்.
"துடிப்பை இன்னுமா உணரவில்லை?"
இடையில்
லேமினேட் ஆகி
ஒரு துடிப்பில் அதிர்ந்து
படலமாய்க்கிடந்தேன்.
அவள் கவிதை படர்ந்த காகிதம் போல.
அவள் துடிப்பா அது?
ஆம்.எங்கள் துடிப்பு தான் அது.
ரிக்டர் ஸ்கேலில்
"பதினாறு"இருக்கும்.

=====================================ருத்ரா

காலம் என்றொரு கண்ணாடி

காலம் என்றொரு கண்ணாடி
==================================ருத்ரா


முகம் பார்க்கலாம்.
மூக்கு நுனியில் உள்ள‌
பருவை கிள்ளலாம்.
வடகலையோ தென்கலையோ
இல்லை வெண்ணீறோ
நெற்றியில் தீட்டிக்கொள்ளலாம்.
புருவமத்தியில்
குண்டலினியை குங்குமமாக‌
வைத்துக்கொள்ளலாம்.
சாய்ங்காலம் பார்க்கப்போகும்
காதலனுக்காக‌
இமைகளின் மயிர்க்கால்
ஒவ்வொன்றையும்
மின்னல் துரும்பு கொண்டு
மயக்கத்தின் மின்சாரப்பூச்சுகளால்
துடிப்புகளை
உயர்த்தலாம்.
இல்லையென்றால்
ஒட்டுப்பொட்டை அதன் பரப்பில் ஒட்டி
விதவையாய் கிடக்கும்
கண்ணாடியை
சுமங்கலி ஆக்கலாம்.
வயதுகளைப்பற்றி
கொஞ்சமும்
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்
வட்டச்செயலாளர்கள்
மீசையை துல்லியம் ஆக்கும்போது
ஆங்காங்கே தலை காட்டும்
"வெள்ளைய"ஆதிக்கம் கண்டு
வெகுண்டெழுந்து
அதற்கு கரி பூசலாம்
இல்லை
வேரோடு பிடுங்கி எறியலாம்.
இல்லை
நடுக்கூடத்தில்
ஆளுயரத்தில் மாட்டி
உள்ளே வருவோரின்
உச்சி முதல் உள்ளங்கால் வரையான‌
காக்காய்வலிப்பு நெளிப்புகளின்
பிம்பங்களை
வடிகட்டி வைத்துக்கொள்ளலாம்.
இருப்பினும்
இதற்கு
ரசம் போகலாம்.
சிறுபயல்கள்
சச்சின் இடத்தைப்பிடிக்க‌
பழகுகிறேன் என்று
கல் போன்று கெட்டித்த‌
கிரிக்கெட் பந்தால்
தூள் தூள் ஆகலாம்.
கண்ணாடித்தூள் எல்லாம்
கூட்டிப்பெருக்கிய பின்னும்
என் மடியில்
வடுக்களாய் கிடப்பது
கண்ணாடியின் பரிமாணங்களா?
காலத்தின் பரிணாமங்களா?

================================================ருத்ரா

வதம்

 


வதம்
========================================
ருத்ரா

தீபாவளியன்று அதிகாலை.
வடை சட்டியும் அடுப்புமாய் அம்மா.
கொடுவாய் ஓட‌
பல்லுகில்லு தேய்க்காம‌
கால்கள் அடுப்படிப்பக்கம்
இழுத்தன.
மிச்சம் இருந்த என் கொட்டாவி
அங்கே என் முகத்தை
நசுக்கிக் காட்டியது.
அதைப்பார்த்த என் அம்மாவுக்கு
மத்தாப்பூ பிரகாசம்.
"வடை திங்கிரியா..இந்தா."
சுடச்சுட தட்டில்
உளுந்த வடை மிளகுக்கண் துருத்தி
என்னைப்பார்த்தது.
ஆமை வடை
முதுகு இப்படித்தான் ஆமைக்கு
சொர சொர என்று
பருப்பு முண்டு கட்டி இருப்பது போல்
இருக்கும் போலிருக்கிறது.
எத்தனை தின்றேன் என்று தெரியவில்லை.
அம்மாவுக்கு எடுத்த‌
புது பட்டுச்சேலை இன்னும்
விளக்குமுன்னாலேயே
வைக்கப்படவில்லை.
ஆனால்
இப்போதே புதுப்பட்டு
உடுத்தியது போல்
பொலிவாக சிரித்தாள்.
நான் சாப்பிடுவதை
பார்ப்பது தானே அவளுக்கு தீபாவளி.
மற்ற நாட்களில்
பல் தேய்..குளி..
அப்புறம் தான் இட்லி என்பாள்.
அந்த கண்டிப்பில்
சுருண்டு கிடந்த
நரகாசுரன்களையெல்லாம்
இப்போ எங்கே காணோம்.
என் அம்மாவின் அன்பு
சுத்தம் எல்லாம் பார்க்காத‌
சுத்தமான அன்பு இன்றைக்கு..
"டமார்"
வெளியே லெட்சுமி வெடி.
காகிதக்குடல் சரிய‌
நரகாசுரன் வாசலில்
வாரி இறைந்து கிடந்தான்.