சில்லென்று
====================================ருத்ரா
சில்லென்று சிரிக்கும் இந்த
புல்லின் சிரிப்பை உணர்.
உன் மன நெருப்பு மடிந்து போகும்.
உன்னை தக தக வென
உள்ளே எரியவைக்கும் அந்த
நரம்புக்கூட்டம் முறுக்கி இசைக்க வைக்கும்
முகாரிகளுக்கு
உன் மாணிக்க செவிகளை தீனியாக்காதே.
அச்சம் எனும் வெடிகுண்டுகளை
உன் மீது பொழிந்து
உன்னைத் தரை மட்டம் ஆக்கத்துடிக்கும்
அந்த நினைப்புகளை
பொடிப் பொடியாக்க முந்திக்கொள்.
இல்லாவிட்டால்
எழில் மிகு ரோஜாக்கள் எல்லாம்
எருக்கம் பூக்காடாய்
உன் கண்களை மறைக்கும்.
பொறாமை வெடிக்கும்போது
ஆயிரம் அணுகுண்டுகள் கூட
தோற்றுப்போகும்.
விடிகின்ற அழகிய வானத்தை
நீயே ஹிரோஷிமா நாகசாகி ஆக்கிக்கொள்வதா?
அந்த நகரத்தின் பெயர்களை இன்னும்
உச்சரிப்பது கூட
மனித பரிமாணத்தை நோக்கி
நடக்க மறுக்கும்
அவநம்பிக்கையின் அவலடசணம் அது.
ஒவ்வொரு கணத்தையும்கூட
கோடியில் ஒரு பங்காய் உரித்துப்பார்க்கும்
நுட்பம் தெரிந்த மனிதனே!
காலம் ஒரு காலன் என்று
கயிறுவீசும் பழங்கதைகளில்
நீ மக்கிப்போவதா?
ஒரு வளையல்பூச்சி வளைந்து நெளிந்து போகும்
துடிப்பின் அந்த சாணக்கியத்தை
உற்றுப்பார்!
வாழ்க்கையை வாழ்ந்துபார்க்க
உனக்கு சொற்பொழிவுகள் தேவை இல்லை.
அந்த குட்டிக்கதைகள்
வேண்டுமானால் நீ அணைத்துக் கொண்டு
தூங்க சுகமாயிருக்கலாம்.
அந்த திண்டுகளில்
அடைக்கப்பட்டிருப்பவர்கள்
ஓசோக்களாயிருக்கலாம்
ஸென் புத்தர்களாயிருக்கலாம்.
வடிவேலு கவுண்டமணிகளாகக் கூட இருக்கலாம்
வாழ்க்கை நம்மை கடித்து சவைப்பதிலிருந்து
இந்த கடிஜோக்குகள் நம்மைக் காப்பாற்றலாம்.
கமெர்சியல் ப்ரேக் எனும்
இலவச கொசுக்கடிகளுடன்.
====================ருத்ரா
.
No comments:
Post a Comment