2014-02-25

ருத்ரா இ.பரமசிவன்

வாசலில் ஒரு கோலம்

வாசலில் ஒரு கோலம்.........................ருத்ரா
=======================================

வாசலில் ஒரு புள்ளிமான்
தன் புள்ளிகளையெல்லாம்
உதிர்த்துவிட்டு சென்றதோ!
அவள்
விரல் வழியே
வாசல் எல்லாம்
மின்னலில் ஜாங்கிரிகள்.
லால்பாக்கும் கப்பன்பாக்கும்
பெங்களூரை விட்டு
பெயர்ந்து வந்தன‌
இங்கு பூக்களாக‌
இறைந்து கிடக்க.
மேகப்பஞ்சுகள் தூரிகைகள் ஆகி
வானவில் அக்ரிலிக் குழம்பை
சித்திரக்கொடிகளாய்
வாசலில் படர்ந்து கிடந்தன.
இதனுள்
என் இதயத்தை
அவள்
எங்கே வரைந்து வைத்திருக்கிறாள்?
அவள் கால் பதிந்த தடங்களில்
சிற்றெரும்புகளின் வியூகம்.
அவைகளுக்கு கூட‌
அவள் இனிய ஸ்பரிசம்.
என் இதய ஸ்பரிஸம்
இங்கே எங்கு துடிக்கிறது?
கோலம் முழுவதும்
என் சுவாசங்களால்
ஒற்றி யெடுத்தேன்.
எங்கே இதில்
அவள் அன்பின் வாசனை?
அங்கேயே நின்றேன்.
எவ்வளவு நேரம் நின்றேன்?
எனக்குத்தெரியவில்லை.
என் கால்களின் அடியில்
திடீரேன்று
உலுக்கல்
குலுங்கல்
குலுங்கியது பூமி மட்டும் அல்ல.
அண்டமே அதிர்ந்தது.
இலைச்சருகுகள் போல்
நட்சத்திரங்களின் இடிபாடுகள்.
"துடிப்பை இன்னுமா உணரவில்லை?"
இடையில்
லேமினேட் ஆகி
ஒரு துடிப்பில் அதிர்ந்து
படலமாய்க்கிடந்தேன்.
அவள் கவிதை படர்ந்த காகிதம் போல.
அவள் துடிப்பா அது?
ஆம்.எங்கள் துடிப்பு தான் அது.
ரிக்டர் ஸ்கேலில்
"பதினாறு"இருக்கும்.

=====================================ருத்ரா

காலம் என்றொரு கண்ணாடி

காலம் என்றொரு கண்ணாடி
==================================ருத்ரா


முகம் பார்க்கலாம்.
மூக்கு நுனியில் உள்ள‌
பருவை கிள்ளலாம்.
வடகலையோ தென்கலையோ
இல்லை வெண்ணீறோ
நெற்றியில் தீட்டிக்கொள்ளலாம்.
புருவமத்தியில்
குண்டலினியை குங்குமமாக‌
வைத்துக்கொள்ளலாம்.
சாய்ங்காலம் பார்க்கப்போகும்
காதலனுக்காக‌
இமைகளின் மயிர்க்கால்
ஒவ்வொன்றையும்
மின்னல் துரும்பு கொண்டு
மயக்கத்தின் மின்சாரப்பூச்சுகளால்
துடிப்புகளை
உயர்த்தலாம்.
இல்லையென்றால்
ஒட்டுப்பொட்டை அதன் பரப்பில் ஒட்டி
விதவையாய் கிடக்கும்
கண்ணாடியை
சுமங்கலி ஆக்கலாம்.
வயதுகளைப்பற்றி
கொஞ்சமும்
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்
வட்டச்செயலாளர்கள்
மீசையை துல்லியம் ஆக்கும்போது
ஆங்காங்கே தலை காட்டும்
"வெள்ளைய"ஆதிக்கம் கண்டு
வெகுண்டெழுந்து
அதற்கு கரி பூசலாம்
இல்லை
வேரோடு பிடுங்கி எறியலாம்.
இல்லை
நடுக்கூடத்தில்
ஆளுயரத்தில் மாட்டி
உள்ளே வருவோரின்
உச்சி முதல் உள்ளங்கால் வரையான‌
காக்காய்வலிப்பு நெளிப்புகளின்
பிம்பங்களை
வடிகட்டி வைத்துக்கொள்ளலாம்.
இருப்பினும்
இதற்கு
ரசம் போகலாம்.
சிறுபயல்கள்
சச்சின் இடத்தைப்பிடிக்க‌
பழகுகிறேன் என்று
கல் போன்று கெட்டித்த‌
கிரிக்கெட் பந்தால்
தூள் தூள் ஆகலாம்.
கண்ணாடித்தூள் எல்லாம்
கூட்டிப்பெருக்கிய பின்னும்
என் மடியில்
வடுக்களாய் கிடப்பது
கண்ணாடியின் பரிமாணங்களா?
காலத்தின் பரிணாமங்களா?

================================================ருத்ரா

வதம்

 


வதம்
========================================
ருத்ரா

தீபாவளியன்று அதிகாலை.
வடை சட்டியும் அடுப்புமாய் அம்மா.
கொடுவாய் ஓட‌
பல்லுகில்லு தேய்க்காம‌
கால்கள் அடுப்படிப்பக்கம்
இழுத்தன.
மிச்சம் இருந்த என் கொட்டாவி
அங்கே என் முகத்தை
நசுக்கிக் காட்டியது.
அதைப்பார்த்த என் அம்மாவுக்கு
மத்தாப்பூ பிரகாசம்.
"வடை திங்கிரியா..இந்தா."
சுடச்சுட தட்டில்
உளுந்த வடை மிளகுக்கண் துருத்தி
என்னைப்பார்த்தது.
ஆமை வடை
முதுகு இப்படித்தான் ஆமைக்கு
சொர சொர என்று
பருப்பு முண்டு கட்டி இருப்பது போல்
இருக்கும் போலிருக்கிறது.
எத்தனை தின்றேன் என்று தெரியவில்லை.
அம்மாவுக்கு எடுத்த‌
புது பட்டுச்சேலை இன்னும்
விளக்குமுன்னாலேயே
வைக்கப்படவில்லை.
ஆனால்
இப்போதே புதுப்பட்டு
உடுத்தியது போல்
பொலிவாக சிரித்தாள்.
நான் சாப்பிடுவதை
பார்ப்பது தானே அவளுக்கு தீபாவளி.
மற்ற நாட்களில்
பல் தேய்..குளி..
அப்புறம் தான் இட்லி என்பாள்.
அந்த கண்டிப்பில்
சுருண்டு கிடந்த
நரகாசுரன்களையெல்லாம்
இப்போ எங்கே காணோம்.
என் அம்மாவின் அன்பு
சுத்தம் எல்லாம் பார்க்காத‌
சுத்தமான அன்பு இன்றைக்கு..
"டமார்"
வெளியே லெட்சுமி வெடி.
காகிதக்குடல் சரிய‌
நரகாசுரன் வாசலில்
வாரி இறைந்து கிடந்தான்.