2023-06-30

மாமன்னன்.

 மாமன்னன்.

_______________________________________


படம் ஒரு மைல்கல் தான்.

சந்தேகமே இல்லை.

தேவர் மகனில் மாத்திரம் அல்ல‌

மணிவண்ணனின் சங்கமம் படத்தில் 

வடிவேலு காட்டிய சில உருக்கமான‌

காட்சிகள் கூட‌

அவரது இயல்பு நடிப்புக்குள்

நடிப்பின் சிகரங்கள் தலைநீட்டியிருக்கின்றன

என்பதைக் காட்டும்.

இந்தப்படத்தில்

வடிவேலு ஒரு தேசியவிருதுக்கு மட்டும் அல்ல‌

அதற்கும் மேல் அந்த உயரத்தை 

மூழ்கடிக்கும் வகையில்

மிக மிக உயர்ந்து நிற்கிறார்.

ஒரு தீப்பிடிக்கும்

கோபம் வழக்கம்போல்

இந்த படத்திலும் சீற்றத்தின் தூரிகையை

சுழற்றியிருப்பது இயக்குநர் மாரிசெல்வராஜின்

முத்திரையை பதித்திருக்கிறது.

அவர் கதைக்களம் 

ரிசர்வ தொகுதியின் ஜனநாயகத்தேர்தல்

முடமாகிக்கிடக்கிறது

என்பதில் வேர் பிடித்திருப்பதால்

முன்னேற்றம் காட்டுகின்ற ஒரு கட்சியின்

மாவட்டச் செயலாளரின் சாதிய வன்மத்தின்

உளவியலை தோலுரித்துக்காட்டுவதாய்

இருந்த போதும் 

அவர் தீட்ட இருந்த ஓவியத்தின்

திரைச்சீலைக்கே தீ வைக்கிறார்

என்பதை அவர் அறிந்தே தான்

காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்.

அம்பேத்கார் மட்டுமே போதும்

மற்ற கருவேப்பிலைகளை

கொஞ்சம் ஓரமாக மிதக்கவிட்டால் 

போதும் 

என்று அவர் நினைக்கிறாரா என்று

தெரியவில்லை.

ஏனெனில் படத்துக்குள்

திராவிடத்தால் வீழ்ந்தோம்

என்பதையும் அவர் தூவியிருக்கிறார்

என்பதும் புலப்படத்தான் செய்கிறது.

தம் சாதி இனங்கள்

ஏதோ சாணிக்குப்பைகளாய்த்தான் 

இன்னும் கிடக்கிறார்கள் என்ற‌

சினத்தின் வெளிப்பாடு 

ஒரு இயற்கையான வடிகாலாய் 

இருந்த போதிலும்

ஒரு கசப்பான உண்மை

நம் சிந்தனையை கசக்கிப்போட்டுக்கொண்டே

இருக்கிறது.

இளையராஜாவின் அடி நீரோட்டமும் அது தான்.

எதற்கு இந்த சாதி?

பூணூலும் ஒரு பிராமண‌ மகுடமும்

நமக்கு சூட்ட அவர்கள் தயாராய்த்தான்

இருக்கிறார்கள்.

இன்னும் எதற்கு அந்த‌

"பட்டியல் விலங்குகள்"நமக்கு

என்ற ஒரு எதிரோட்டத்துக்கு

இந்த படம் ஆயத்தமாக இருக்கிறதோ

என்ற ஒரு அச்சம் 

இதில் மெலிதாய் இழையாடுகிறது.

போரின் உச்சக்கட்டத்தில்

தன் கூரியவேலையே குற்றம் கண்டுபிடித்து

சோர்ந்து போய்விடச்செய்கிற‌

ஒரு கண்ணுக்குத்தெரியாத‌

தந்திரம் இதில் இருக்குமோ?

ஒரு உதயநிதியை தன் கூட‌

வைத்துக்கொண்டால் போதும்

சமுதாய எழுச்சியின் உதயத்தை

திசைமாற்றும் சூழ்ச்சி

தன் சிறந்த திரைப்பட இயக்கத்துள்

இழைந்து கிடக்கும்..கிடக்கட்டும்

என்று இப்படம் உருவாக்கப்பட்டிருக்குமோ

என்ற ஐயமே இதில் நிலவுகிறது.

தமிழன் வரலாறு காயம்பட்டு இன்றும்

செத்த பாம்பாய் கந்தலாய் 

நைந்துகிடப்பதன் சித்திரமே

இந்தப்படம்.


________________________________________

செங்கீரன்.

2023-06-25

மருதையன் என்கிற மகத்தான சிந்தனையாளர்.

 மருதையன் என்கிற மகத்தான சிந்தனையாளர்.

_________________________________________________

சொற்கீரன்.



விண்குழல் பேச்சுகள்

ஏதோ பிருந்தாவன புல்லாங்குழல் 

கீற்றின் ஒலிகள் என்பதற்கில்லை.

அதற்குள்ளும்

அக்கினி மூலை ஆகாத மூலை 

எல்லாம் உண்டு.

ஆனால் மனித சிந்தனை என்பது

உறைந்து விறைத்து சவமாகும்

பிணக்கிடங்காக‌

மலிந்து கிடக்கும் வேளையில்

நம் வரலாறுகள் வெறும் சவத்துக்குப்பைகளாய்

இருக்கும் நிலையில் இருந்து

சிந்தனையின் அக்கினிப்பறவைகள்

உயிர்த்து தன் ராட்சசசிறகுகளை

சடசடத்துக்கொண்டு பறக்கின்ற‌

அற்புதங்களை தன் சொற்பெருக்குகள்

மூலம் 

அள்ளி அள்ளித்தருகின்ற 

அரசியல் மேதை

திரு மருதையன் அவர்கள்.

உட்கார்ந்து உற்றுக்கேட்டால்

இந்த நாட்டின் மண்ணாங்கட்டிகளுக்கு கூட‌

நரம்புகள் புடைக்கும்.

மூளைசெதில்கள் மூண்டெழுந்து விடும்.

சோறு என்பது

ஒரு அவசியத்தின் அடையாளச்சின்னம் தான்.

ஆனால்

அது இன்னும் நம் நூற்றாண்டுகளையெல்லாம்

அடுப்பில் ஏற்றி 

உலை கொதிக்கவைக்கிற‌

உந்துதலின் அறிவுப்பரல்

என்பதில் ஐயம் இல்லை.

அவர் பேச்சுகள் மரத்துக்கிடக்கின்ற‌

இந்த பூமத்தியரேகைகளையும்

அட்சய தீர்க்க ரேகைகளையும்

நமக்கு நாம் பாடம் புகட்டும்

சவுக்கடிகளாய் மாற்றி 

எழுச்சி கொள்ளச்செய்யும்.

அறிவும் சிந்தனையும் கூட‌

இப்படி ஒரு ஆற்றல் நிறைந்த‌

குவாண்டம் மெக்கானிக்ஸ் ஆக்கி

புதிய பிரபஞ்சத்தை வார்த்துவிடும்

என்பதற்கு இவர் பேட்டிகளே

மெய்யான சான்றுகள்.


____________________________________________________________


2023-06-24

மாரி செல்வராஜ்

 மாரி செல்வராஜ்

____________________________________________‍____

செங்கீரன்



அற்புதமான படைப்பாளி.

அப்புறம் எதற்கு அந்த லேபிள்?

அந்த வலியைச் சொல்லும் 

அவர் பாணியே

ஆயிரம் எரிமலைகளை

கசக்கிச்சுருட்டி

காமிராக்கண்ணின் மயிலிறகு 

வருடல்களிலேயே வார்த்து விடுகின்றனவே.

அந்த இசக்கியின்

காக்காய் இறகு ஆட்டங்களுக்குள் இருக்கும்

காக்காய் முட்களையே

இன்றைய சமுதாயத்தின் தலையில் 

முட்கிரீடம் சூட்டிவிட்டார்.

அந்த மாமன்னன்

நிச்சயம் புலிகேசி அல்ல.

அந்த தமிழ்ப்புலியின் உறுமல்கள்

இமயமலைகளின் 

நடுக்க "ரிக்டர் ஸ்கேல்களை"

எங்கோ உயரத்துக்கு கொண்டுசென்று விட்டன.

மாரிசெல்வராஜ் அவர்களே

உங்கள் இதயத்தின்

சிஸ்டாலிக் டையஸ்டாலிக்

அழுத்தங்கள்

இந்த சமுதாயநீதியை

படுக்கையில் கிடத்திவிடும்

புலம்பல்கள் அல்ல.

ஒப்பாரிகள் அல்ல.

இவை வெறும் புல்லரிப்புகளும் அல்ல.

புல்லட்டுகளும் அல்ல.

செல்லுசோஸ் சுருளுக்குள்

கருவுயிர்த்த செம்புயலே!

சமுதாயத்தை நிமிண்டிவிடும்

பிரளய வலிப்புகளே

உங்களது இந்த வலிகள்.

வெறும் விருதுக்குள் சுருண்டுவிடாமல்

பாக்ஸ் ஆஃபீஸ் வெள்ளமாயும்

உறக்கம் உடைக்கும் ஊழிகளாகவும்

உங்கள் படைப்புகள் வெல்லட்டும்.

நீங்கள் நீடூழி நீடூழி வாழ்க!


____________________________________________________________