2023-03-11

அகழ்நானூறு 29

  அகழ்நானூறு 29

____________________________________________

சொற்கீரன்.




நெடும் பழன வழியிடை வள்ளுகிர் யாமை

பொறிக்கண் விதிர்ப்ப கொடிவிடு கல்லிற்

பரற்கண் போகி பெண்ணை அந்தூறு

அண்ணிய நுங்கின் கிளர்கண் கசியும்

கள்ளினை பகுவாய் நிறைப்ப மாந்தி

ஓர விழித்து சில் அசைகூர் சிறுதேர் அன்ன‌

செல் இயல் கண்டும் கரும்பமல் படப்பை

பாசடர் தோகையின் இடை இடை அகவும்

அவள் ஒலி ஆங்கு அஞ்சிறைத்துடியென 

முரல்வதும் கூர்விழி பொறிமா திரிமருப்பு

அவனுள் சுருள்போழ் செய்யலும் ஒல்லாதானாய்

சுரம் நீடு தோற்றும் நிழல் ஆறு நெளிய‌

வான்சுடர் திசையொடு திரிதரும் நெருஞ்சி

அன்ன அவளும் அவன் அலை வன்காழ் 

நெடுஞ்சுரம் முகத்தவள் புதைபடு துயிலும்.

இமைசேரா முள்விழிக்காட்டில் சேக்கை இடறி

துயர் அழல் வீழ்ந்து வேகுவள் நோகுவள்

காட்சியும் அவனை தீயூழிப்படுத்தும்.

வையை ஆற்றின் காஞ்சி நீழல் அவள்

குரவை அயரும் காட்சிமுன் கைக்கொள‌

காற்றையும் பெயர்த்து காற்றுமுன் சென்றான்.


_______________________________________________________

2023-03-10

ஷார்ட் ஃபில்ம்

 ஷார்ட் ஃபில்ம்

________________________________________

ருத்ரா.



இருட்டையும் கூட 

இலக்கியம் ஆக்கி விட‌

முடியுமா?

அப்படித்தான்

அந்த ரெண்டா கால் நிமிட‌

ஆங்கிலத்துண்டுப்படம் பார்த்தேன்.

ஆனால்

இரண்டு சொச்சம் நிமிடங்களுக்கும்

இருட்டைப்பூசிக்கொண்டு

ஒலி இசை அதிர்ந்தது.

பிறகு 

புள்ளி பூஜ்யம் பூஜ்யம்..

செகண்டுக்கு

ஒரு ஒளிக்கீற்று.

அவ்வளவு தான் 

படம் முடிந்து

வரிசை வரிசையாய்

எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தன‌

ஐந்தாறு நிமிடங்களாய்.

அது என்ன தலைப்பு...

மறந்து விட்டதே...

மறக்காமல் அதையும் போட்டு விட்டார்கள்.

"தேடு"

எதை என்று தான் போடவில்லை.

இருட்டையா?

வெளிச்சத்தையா?

ஒரு ஆழமான ஆழமாகிய 

எனக்குள்

அந்த நங்கூரத்தை

வீசி எறிந்தார்களே!

அது ஒரு

பில்லியன் டாலர் இலக்கியம் தான்.


_____________________________________________________


2023-03-09

டைம் ட்ராவல்

 அவனுக்கு ஒரு குழந்தை

பிறந்தது.

அவனை பேராண்டி என்று

கூப்பிட்டது.


டைம் ட்ராவல்

_______________________________

ருத்ரா

அகழ்நானூறு 27

அகநானூறு 244

மதுரை மள்ளனார்.

முல்லை

வினைமுற்றிய தலைமகன் 

தேர்ப்பாகற்கு சொல்லியது.


தலைவன் வினைமுடித்து இல்லம் திரும்பும் ஒரு வவ்வால்காடு.அது பற்றி அவர் குறிப்பிடும் உவமை வரிகளும் அழகு மிக்க சொல்லாடல்களும் மிக அருமை.சங்கப்புலவர் மதுரை மள்ளனார் அந்த அடர்ந்த காட்டில்  மிக உயர்ந்த மரங்களின்  நீர்ப்பசை ஈரத்தால் பசுமையை ஒட்டிவைத்தாற் போன்றும் கிளைகளில் நெய்த‌டவியதைப்போன்றும் அந்த சூரியவெளியில் அவை மினு மினுத்து வவ்வால்கள் கூட்டமாய் அப்பிக்கொண்டதை மிகவும் அழகாய் கீழ்க்கண்ட வரிகளில் எழுதுகிறார்.


"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன‌

சேயுயர் சினையை மாச்சிறைப் பறவை"


இந்த வரிகளை என் அகழ்நானூறு 27 ல் அப்படியே தொடக்கவரிகளாய் தைத்து நெய்துள்ளேன்.....சொற்கீரன்


அகழ்நானூறு 27

_____________________________________________

சொற்கீரன்.


"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன‌

சேயுயர் சினையை மாச்சிறைப் பறவை"

கல்லெறிந்தாற் போல் காரின் குழைதரு

மஞ்சு இனமென வான் திரை கிழிக்கும்

சூர்கலி கொல் இருள் அஞ்சுரம் ஆரும்

அகலம் கிளர்தர ஆற்றுப்படூஉம் 

அடுபோர் மள்ளன் என்னாது என்னை

இமைச்சிறை பூட்டி விழிக்குள் வீழ்த்தும்

அன்னவள் கண்சுரம் ஆற்றுப்படையின்

தண்ணிய நிழலிய நீளிடை புகுவன்

விரைதி விரைதி கொய்சுவற்புரவியின்

கொள்மொழி பேசு கதழ்பரி அஃதின்

பூங்குழியும் ஈண்டு புயல் கரு பூக்க‌

நின் கால்விரல் எழுதி காலும் வெரூஉம்

கடுவிசை ஓம்பு காலம் ஈண்டு

பெருங்கல் மறிக்கும் வழியினை உடைப்பாய்

அவள் சில்பூ விழி இங்கு சீர்த்தவிடத்து.


________________________________________________________





2023-03-08

நனவை தின்ற கனவு.

 நனவை தின்ற கனவு.

_____________________________________________

ருத்ரா




வாழ்வது போல்

அல்லது

வாழ்ந்தது போல்

ஒன்றை வாழ்ந்து விட்டோம்.

மீதி?

முழுவதுமே மீதி.

தொடங்கவே இல்லை.

மூளைச்செதில்களில் மட்டும்

காலப்பரிமாணத்தின்

வேகம் கூட்டி...

வேகம் என்றால்

சாதாரண வேகம் இல்லை

சூப்பர் லுமினஸ்...

ஒளியை விட கோடி மடங்கு கூட‌

இருக்கலாம்.

இந்த பிரபஞ்சத்தின் இந்த அடுக்கு தாண்டிய‌

இன்னொரு அடுக்கில்

நீ எட்டு எடுத்து வைத்திருக்கிறாய்.

இன்னும் சில பத்து ஆண்டுகளில்

புதிதாக பிரபஞ்சப்பூக்களை

உன் கோட் பித்தான் துளைகளில் கூட‌

பதியம் போட்டுக்கொள்வாய்.

உளுத்துப்போன புராணங்களில்

வெர்ச்சுவல் காஸ்மாலஜி மாடல்கள்

குமிழி இட்டுக்கொண்டே இருக்கலாம்.

மனிதம் மீறிய‌

பில்லியன் பில்லியன் சிந்தனை சிப்பங்களும்

அறிவியல் மூளை மடிப்புகளும்

உன் எண்ண அசைவுகளிலேயே

இயக்கம் பெறுவதாக இருக்கலாம்..

என்ன இது?

சூரியனின் ஒரு பகுதி பிய்ந்து

விட்டதாமே.

ஜேம்ஸ்வெப் சொல்லிக்கொண்டு இருக்கிறது.

உன் சன்னல்களில் அது

நுழைகி....றது...

சைஃபை மூவியால் இந்த‌

ஹேலுசினேஷன்...

அவன் ரத்தவெள்ளத்தில்.

டாக்டர் சுருக்கமாய் சொல்லிவிட்டார்.

செரெபெரல் ஹேமரேஜ்.


________________________________________________________


உலக மகளிர் தினம்



உலக மகளிர் தினம்

-----------------------------------------------------------------------------



பெண்ணே!

உலக மகளிர் தினம் என்று

மலர்க்கிரீடம் சூட்டினோம்.

அந்த மலர்கள் சிரித்தன‌

அவள் வண்ணச்சீறடிகளே

உலகின் புகழ்பெற்ற பூங்காங்கள்.

அவள் காலடிகளையா தலையில் சூடுவது?

அதில் ரோஜா எனும் 

ஒரு மலர் முள்ளை வைத்து

குத்திக்காட்டியது.

போதும்.

கவிதைகள் எனும் உங்கள் 

கள்ளின் குடங்களைக்கொட்டி கவிழ்த்தது?

இந்த சமுதாயம் சமூக அநீதிகளால்

புண்பட்டுக் கிடப்பது 

அறிவீர்களா?

புண்படுத்தியவர்களே

இப்படி 

புளகாங்கிதம் கொண்டு

அம்மன் அபிஷேகங்கள் நடத்தியது போதும்.

வளையல்கள் ஒலிப்பதற்கு மட்டும் அல்ல‌

இந்தக்கைகள்.

அறிவு ஆள்வதும் 

அகிலம் ஆள்வதும்

மகளிர் வழி பரிணாமங்களே

அறத்தொடு அரசியல் மலர்த்தும்!

வெல்லும் வெல்லும்.

பெண்ணே வாழ்க!

பெண்மையே வெல்க!

__________________________________________‍

ருத்ரா 

2023-03-02

அகழ்நானூறு 25

 அகழ்நானூறு 25

______________________________________________

சொற்கீரன்



பாலை வெஞ்சுரம் பாய்திரை அன்ன‌

பரிந்தே ஏகும் நின் பொருள்நசைசெல்வன்

பாலின் வாலொளி எழுதரு மதியம்

கடற்கண்டாங்கு பொங்கும் நின்முகம்

அருவியின் ஆர்த்து அவனை வான் தோய்

மாவலை எழுதகை செய்ய நகைத்தாய்.

சிமயக்குன்றத்து பல் ஒலி தேஅத்து

வழங்கொலி யெல்லாம் தமிழெனக்கண்டு

தேடா செல்வமென செந்தமிழ் ஆண்டு

செவ்விய நம்மொழி தன்னோடு சேர்த்துக்

கொணர்தகை மள்ளன் தேயா மனத்தில்

நகர் நகர் நீங்கி நாகரி மொழியை நம்

இயல்மொழி ஆக்கி பல் மொழித்திரவியம்

உலகோர் வியக்க படைத்தவன் வந்தான்.

அற்றைத்திங்களில் நின் ஆவியும் கலித்து 

அகவல் செய்தக்கால் மஞ்ஞை இனநிரை

மின்னல் மழையென பீலிகள்பெய்திடும்

மகிழ்முன்றில் அணிலாடும் மெல் ஒலி

கீறித்தரும் இன்செய்தி கேள் மெல்லிழையே!


________________________________________________________________



பென்சில் ஓவியம்

 Jugal Sarkar | Kolkata | Facebook இந்த இணைப்புக்கு மிக மிக "நன்றி"

1 நபர் இன் குளோஸ்-அப் ஆக இருக்கக்கூடும்

இந்த பென்சில் ஓவியம்

என்ன சொல்கிறது?

கூந்தல் கடல் அலைகள்

எதோ கருப்பு இருளை

சிலிர்க்கின்றன.

கண்களிலும் 

தளும்பும் ஏழுகடல்களின் பிஞ்சு.

இதழில்

அழுத்தமாய் ஒரு சிவப்பு.

நெற்றியில் 

அசங்கலாய் ஒரு சிவப்பு.

வகிடு உச்சியில்

வக்கிரமாய் ஒரு சிவப்பு.

பெண்ணே நீ யார்?

சிதைக்குப்போகும் சிற்பமா?

இல்லை 

ஒட்டு மொத்தமாய் எல்லாவறையும்

சிதைக்கும் சிற்பமா?

முதலில் நீ

எரித்து சாம்பலாக்க வேண்டிய வரிகள்

"ஆவதும் பெண்ணாலே

அழிவதும் பெண்ணாலே"

என்ற அக்கிரம ஆகமங்கள்.

ஆம்.

இப்போதைய தேவை

எல்லா ஆண் ஆதிக்கங்களையும் 

அழிக்கும் பெண்ணே தான்.

சிவனிடமிருந்து பிடுங்கி

அந்த உடுக்கையை நீ

அதிர அதிர குலுக்கு.

இவர்களின் சீஸ்மோகிராஃப்

இதற்கு

என்ன பரிமாணங்களையும் 

கொடுத்துக்கொள்ளட்டும்.

பூமிக்குள் புதைந்து போன‌

சீதைகளைவிட‌

இந்த புழுத்து நெளியும் பூமியை

பந்தாடும்

சீதா மூர்த்திகளே தேவை.

உன் சினத்தீ

இந்த வர்ண வன்மங்களை

சாம்பலாக்கட்டும்.

ஆம்.

சாம்பலாக்கட்டும்.

_____________________________________________

ருத்ரா