2023-12-19

என் மேசையில்....

என் மேசையில்

பாதராயணார் ஒரு

பூனைக்குட்டியாய்

உட்கார்ந்திருக்கிறார்...

பிரம்மசூத்திரமாய்.

இந்த சிகரெட் பெட்டியில்

555 சிகரெட்டுகள்.

அதாவது சூத்திரங்கள்.

புகைவளையங்களாய்.

பாஷ்யம் என்று

உடுக்கை அடித்துக்கொண்டிருக்கிறார்

வெகு ஜோராய்

ஆதிசங்கரர்.

கீரியும் பாம்பும்

இன்னும் வெளியிலேயே

வரவில்லை.

இரண்டுமே பிரம்மம் தானாம்.

கேட்டால்

ஒன்று பிரம்மம் 

இன்னொன்று "அப்பிரம்மம்"

என்பார்கள்.






2023-12-03

சாதி சாதித்தது.




சாதி சாதித்தது.

நீதி சாய்ந்தது.

இந்த கம்பியூட்டர்கள் கூட

"ஜனநாயகத்தை"

உடைந்த சிலேட்டுகளில் தான்

எழுதிக்கொண்டிருக்கின்றன.

-------------------------------------------

ருத்ரா.


2023-12-02

"என்பு தோல் போர்த்த.."


" என்பு தோல் போர்த்த"..

-------------------------------------------


மதம் 

சாதி

கடவுள்

இவையெல்லாம் என்ன?

மானுடத்தின்

"என்பு தோல் போர்த்த"

உடம்பு மட்டுமே இவை.

உள்ளடக்கமான 

உயிர் உள்ளம் அறிவு அன்பு

இவற்றிற்கெல்லாம்

ஒரு கல்லறை கட்டுவதற்கா

இந்த சொற்கள் இங்கே

தோரணங்கள் கட்டிக்கொண்டிருக்கின்றன.

அந்தக் கல்லறை

உன் கருவறையாய்

மயக்கம் காட்டுவதை எதிர்த்து

ஓ! மானிடமே 

விழித்துக்கொள்.

-------------------------------------------------

ருத்ரா







2023-12-01

சன்னல்கள்.

சன்னல்கள்

--------------------------------------

அது என்ன?

காதல்

இந்தக் கம்பிகளில் தான்

இலக்கியங்களை

அடித்துத் துவைத்து

நிலவுகளை 

சலவை செய்து கொண்டிருக்கிறது.

----------------------------------------------

சொற்கீரன்.




மழை.

 ஊடக அலப்பறைகள்.

---------------------------------

மழையே!

அது என்ன

இந்த மோசமான அரசியல் கூடவா

குறைந்த அழுத்த 

காற்று மண்டலங்களில்

கர்ப்பம்

தரித்துக்கொண்டு வருகிறது?

-------------------------------------------------

ருத்ரா.





2023-11-29

முற்றுப்புள்ளி

 ஒரு கவிதை

 ஹைக்கூ எழுத ஆசைப்பட்டது

அது இது தான்


"முற்றுப்புள்ளி."

"முற்றுப்புள்ளி."

"முற்றுப்புள்ளி."




2023-11-28

ஏடுகள்.

ஏடுகள்.

-------------------------‌---------------

ருத்ரா.


மொழியின்

வரலாற்றுச் சதைகள் வற்றியபின்

நமக்குக் கிடைத்த 

எலும்புக் கூடுகள் இவை.

அன்று நம்மோடு

கல் பேசியது.

புல் பேசியது.

புள் பேசியது.

புள்ளும் பேசியது.

புயலும் பேசியது.

ஆனால்

கடவுள் என்று சொல்லிக்கொண்டு

எந்தப் பயலும் பேசவில்லை.

பின் எப்படி இந்த 

எச்சில் மந்திரங்களில்

புதைந்து போனோம்?







2023-11-27

அகழ்நானூறு 59

 

துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி

வான் திரை ஆங்கு ஓவு அகல் பிலிற்ற






நற்றிணை...117,118,119 120



நா குழறி...

அந்த வானம் சொல்கிறது

மீறக்கூடாது.

அது கூவும் மொழியே

வேதம் என்பது.

அவனை அடி.

இவனைக் கொல்லு.

அந்த போதைச் செடியை

கசக்கிக் குடித்து

நா குழறி நாலு சொல் உதிர்த்ததே

மந்திரம் ஆனது.










2023-10-17

முற்றாத புள்ளிகள் !

ஜான்   ஃபோஸ்

-------------------------

நோபல் விருது பெற்ற 

வித்தகரே.

உங்கள் எழுத்துக்களை

நீங்கள் தூங்கவே விடுவதில்லையாமே 

ஆம் 

முற்றுப்புள்ளிகள் எனு‌ம்

தலையணைகள் உங்களிடம் 

தொலைந்து போனதால் 

மில்லியன் மில்லியன் மைல்களில் 

உங்கள் வாக்கிய குதிரைகள் 

களைப்பே இல்லாமல் ஓடிக் கொண்டே 

இருப்பதற்கு 

எத்தனை நோபல் விருதுகள் 

வேண்டுமானாலும் கொடுக்கலாம்.





2023-07-25

"பாஷா பூதம் "


"பாஷா  பூதம் "

--------------------------------------------------------------------

ருத்ரா 




நானா உன் கண்ணுக்கு 

தெரியவில்லை ?

இதோ பார்.

அவர் தன மூக்குப்பொடி 

டப்பியிலிருந்து 

கொரோனா மாதிரியான 

ஒரு வைரஸை 

எடுத்து வெளியில் போட்டார்.

ஒன்றுமே தெரியவில்லையே..

சரி சரி 

அந்த தொலை நோக்கி வழியாய் பார்.



 

2023-07-08

கள்ளி வனம்




நீலக்கத்தாழை இன் படமாக இருக்கக்கூடும்



கள்ளி வனம்

___________________________________

சொற்கீரன்



அந்த தூணில் 

கள்ளி அடர்ந்து கிளைத்து

முட்களின் கூந்தலில்

கண்ணுக்குத்தெரியாத ஒரு

ரோஜாவைக்காட்டி

என்னை வதைத்துக்கொண்டே

இருக்கிறது

கடந்த நாற்பது ஐம்பது

ஆண்டுகளாய்.

அதில் "ஜான் கீட்ஸின்"

கவிதை வரிகள் கலவரப்படுத்திக்கொண்டே

இருக்கிறது.

"ஸ்வீட்டெஸ்ட் ம்யூசிக் இன் தி

சேடெஸ்ட் தாட்ஸ்"

அம்பதுகளில் தேன்குரலை பிழிந்து தரும் 

ஜிக்கி அவர்களின் 

பாடல்களின் அம்புப்படுக்கையில்

இனிமையில் திகட்டும் 

அதை விட இனிமையான ஒரு 

துயரம் 

நெய்து கொண்டே இருக்கும்.

கள்ளியே!

முள்ளைக்காட்டி நீ

தள்ளி தள்ளி போனாலும்

என் அனிச்சத்தின் மலர் மெத்தை

நீயே தான்.

விரல் தட்டும் கவிதைக்குள்

ரத்தமாய் சொட்டினாலும்

வான நினைப்புகளின் 

ஊற்று அது.


________________________________________________


"இதோ ஒரு பிக் பேங்க்"

 "இதோ ஒரு பிக் பேங்க்"

_______________________________________________

காஸ்மால‌ஜிஸ்ட்.


கைபேசி என்று

இந்த உலகத்தையே பிய்த்து

நம் உள்ளங்கையில் கொடுத்து

நம் கண்ணையும் காதையும்

அதில் கட்டிப்போட்டார்கள்.

இப்போது

நாய்க்குட்டி அது தான்.

அதனுடைய 

கண் முளைக்காத அறிவு முளைக்காத‌

ஆண்ட்ராய்டுக்குட்டிகளே நாம்.

சிகரம் வைத்தாற்போல்

நம் கபாலத்தையும் கழற்றி

நம் கையில் வைத்துவிட்டார்கள்.

மூளைகளின் மூளைக்குள் குருத்துவிடும்

மூளைகள் எல்லாம்

நம் விரலிடுக்குகளில்

நசுங்கிக்கிடக்கிறது.

ஐயோ.

அவசரம் முடுக்குகிறது.

எப்படி ஒண்ணுக்குப்போவது ?

இதோ

அந்த சாட்பாட்டிடும் தான்

அல்காரிதம் கேட்டிருக்கிறேன்.

அது

ஆல்பா நியூமரிக்கலிலும்

இன்னும்

ஃபூரியர் ட்ரான்ஸ்ஃபார்ம்களிலும்

மில்லியன் க்யூபிட்டுகளில்

கேட் திறக்கிறது

வரி வரியாய் அந்த சமன்பாடுகள் வழியே...

அதோ அந்த‌

ஜேம்ஸ்வெப் வேறு குறுக்கிட்டு

எங்கோ அழைத்துக்கொண்டு

போய்விட்டது.

ப்ராக்ஸிமா எக்சோபிளானட்டில்

ஏதோ 

ஒரு கட்டணமில்லாத கழிப்பிடத்துக்கு

கொண்டு வந்து விட்டது.

அதற்குள் இதோ..இதோ

என் "பிளாடரில் பிக் பேங்க்"


___________________________________________________________‍




2023-07-06

செங்கோடி.

 


படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.




செங்கோடி.

___________________________________


தம்பி...

நீ இல்லாமல் நான்

தவித்து தான் போனேன்.

எண்பது முடிந்தது என்று

தோரணம் கட்டி

எனக்கு விழா எடுத்தார்கள்.

நீ

ஓடி ஆடி நின்று

ஆள் அம்புகளாய் பரபரத்து

முறுவல்கள் தூவி கல கலப்பு 

ஊட்டுவாயே.

அந்த வெறுமை வலிக்கத்தான் செய்கிறது.

இப்போது என் அகராதியில் 

அந்த கல்லிடைக்குறிச்சி என்னும்

கவிதை கந்தலாகி

மண்ணுக்குள் கிடக்கிறது.

தாமிரபரணியும் கன்னடியன் கால்வாயும்

தன் பச்சை மரகத பளிங்கு விரிப்பை 

தினமும் பாய்போல்

விரித்து சுருட்டி மடக்கி

மீண்டும் 

சுருட்டி விரித்து மடக்கி

நமக்கு 

வாழ்க்கையின் பசும்புல் பனித்துளிகளை

மாலையாக கோர்த்து தந்து

களிப்பூட்டியது தான்

இன்னும் இன்னும் நினைவுக்குளியலாய்

இருக்கிறது.

நம் சொத்து

இந்த நினைவுகள் மட்டுமே.

தம்பி நீ

என் கனவு அல்ல.

என் நனவு அல்ல.

நிழலும் அல்ல.

நிஜமும் அல்ல.

இந்த கால‌த்தின் குமிழிகள்

நம்மை ஏமாற்றமுடியாது.

நீ நான் என்ற இலக்கண பிம்பங்கள்

உடைந்த‌

அன்பின் உள்ளுணர்வு மட்டுமே

இப்போது நம்மிடம்.


அன்புடன் உன் அண்ணன்

இசக்கி பரமசிவன்.


___________________________________________________

2023-07-01

விரட்டிக்கொண்டிருக்கிறது.

 விரட்டிக்கொண்டிருக்கிறது

________________________________________________

சேயோன்.

 

கோழி சாப்ஸ் சால்னாக்கடையோர‌

குப்பைகளாய்

பிய்த்துப்போட்ட‌

அந்த கோழிச்சிறகுகளின் 

பதிவுகளும் பின்னூட்டங்களும்

மலிந்து போன‌

முகநூல் தேசங்கள்

எங்கும் எங்கும்.

போதாதற்கு செயற்கை மூளையின்

காக்காய் வலிப்பு நியூரோன்களின்

குவியல்களில்

இங்கு எல்லாமே மூழ்கிக்கிடக்கிறது.

இதில் மில்டனினின் 

பாரடைஸ் லாஸ்டை எங்கே தேட.

அந்த சாட்போட்டிடம் தான்

அதை விமர்சிக்கச்சொல்லிக்கேட்டேன்.

முழுக்கவிதையை அது 

ஒப்புவித்து விட்டு

பிதாவின் பரமண்டலத்தை

அருமையான சோப்புக்குமிழிகளாய்

ஆழமான அர்த்தங்களையும்

வெண்ணெய் தடவிக்கொடுத்தது.

உன் உள்ளத்தைப்போன்ற‌

அழகிய வேலைப்பாடுகள் அமைந்த

கல்லறை உனக்கு

வேறு எங்கும் இல்லை.

ஆம்

நீ வாழ்ந்து கோண்டே

அதில் சமாதி ஆகிக்கொள்.

இந்த பரமண்டலத்தையும் அக மண்டலத்தையும்

உன் சிந்தனையின் கூரிய விரல்களின்

தடவல் எனும் ப்ரெய்லி மொழியில்

எல்லாம் அறிந்து விடு.

மிச்சமே இல்லாமல் எல்லாவற்றையும் 

அறிந்து கொள்.

சைத்தானும் தேவனும் 

இந்த வார்த்தைகளை உனக்கு

வடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

அந்த ஏ ஐ யின் திறன் ஆய்வு

ஏதோ ஒரு நீண்ட பிசாசுவின்

மூச்சுத்துடிப்புகளாய்...

ஆம்

என்னை விரட்டி விரட்டி அடிக்கிறது.

எல்லா புராணங்களும் கடவுள்களும்

உனக்கு இப்படித்தான்

காக்டெயில் பிம்பங்களை

சுழற்றி சுழற்றிக்காட்டும்.

பாவ புண்ணிய நரக சொர்க்க‌

ஐஸ் துண்டுகள் அதில்

அழகாய் மிதந்து கொண்டிருக்கின்றன.

போதுமா?

போதுமா?

.........

போதுமா?

சேட் பாட் என்னை விரட்டிக்கொண்டிருக்கிறது.


__________________________________________________

சேயோன்.





அம்பாசமுத்திரத்திலிருந்து....

 அம்பாசமுத்திரத்திலிருந்து....

_________________________________________செங்கீரன்.


ஏன் பிறந்தாய் மகனே

என்று பாகப்பிரிவினையில் 

சிவாஜி பாடும் பாட்டை அன்று

அம்பாசமுத்திரம் கல்யாணி டாக்கீஸ்

எனும் ஓலைக்கொட்டகையில் 

பார்த்து கேட்டு உருகிய போது

சிவாஜியின் நடிப்பில் மட்டும் தான்

ஒன்றியிருந்தேன்.

ஆனால் இன்று

வயதுகளின் அம்பது அறுபது எழுபது

என்று பிலிம் ரீல்களின் ஓட்டம் 

கடைசிமுனை வரைக்கும்

பட படவென்று 

நுரை தள்ளிக்கொண்டிருக்கிறது.

இன்று அந்த தொட்டிலில்

கிடப்பது

மனிதக்குஞ்சு அல்ல‌

ஒரு யுகப்பிரளயம்

கையையும் காலையும் ஆட்டி

உதைத்துக்கொண்டிருப்பது போல்

ஒரு உணர்வு 

சவ்வுடு பரவலாய்

இறந்த காலத்தையும் பிறக்கப்போகும்

காலத்தையும் முடிச்சுப்போடுகிறது.

மக்கள் வெள்ளமாய் திரண்டு எழுந்து

எதோ ஒரு நிழலைபிடித்து

கையில் வைத்துக்கொண்டு

கணக்கு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மை நழுவி எங்கோ போய்விட்டது.

கடவுள்களை கழுவி கழுவி ஊற்றி

துடைத்து துடைத்துப்பார்த்துக்கொண்டே

இருக்கிறார்கள்.

உண்மை எப்போதோ கழுவேற்றப்பட்டுவிட்டது.

மனிதனுக்கும் அவன் மண்ணின் வாசனைக்கும்

சேர்த்தே 

அநீதியும் அதர்மமும் இழைக்கப்பட்டுக்கொண்டே

இருக்கின்றன.

சாதிகள் அடுக்கு அடுக்காய்

சீட்டுக்கட்டு போல் இருக்கின்றன.

ஒரு சீட்டு இன்னொரு சீட்டை வெட்டிக்கொண்டு

ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மதம் எனும் கொடூரமான பொய்மை

ரத்தம் சொட்ட சொட்ட‌

கண்ணுக்குத்தெரியாத அந்த வெட்டரிவாளை

ஓங்கி ஓங்கி வீசிக்கொண்டே இருக்கின்றது.

அறிவுக்கு முரணான

அறமே இல்லாத நடப்புகளை

மக்களின் மேல் பாரமேற்றி

அவர்கள் புழுக்களாய் நசுக்கப்படுகிறார்கள்.

அப்பட்டமான ஒரு அம்மணம் ஆதிக்கம் ஆகி

அங்கே கோலோச்சுகிறது.

அதோ இன்னும் அந்த‌

"ஏன் பிறந்தாய் மகனே" பாடல் தான்

தேய்ந்து மாய்ந்து தீனமாய் கேட்கிறது.

கனவுகளின் முரட்டுத்தனமான கொம்புமுனைகள்

அதோ கொஞ்சம் கொஞ்சமாய் சிலிர்க்கின்றன.

நீதியின் கூர்மை ஒரு கோரைப்பல் போல‌

அந்த துணித்தொட்டிலை கிழித்துக்கொண்டு

திமிறுகிறது.

தூண் மட்டும் அல்ல.துரும்பு மட்டும் மல்ல.

சாத்திரங்களின்

இந்த மயானப்புகை மண்டிய காற்றையும் கூட‌

அது பிளக்கிறது.

மின்னல் இழைகள் குடல்கள் போல‌

தொங்குகின்றன.

அங்கே எல்லாம் கிழிபடுகிறது.

அநீதி அரங்கேற்றங்களின் 

வெறும் ஏஜெண்டுகள் தான் நாங்கள் 

என்று அம்பலப்பட்டுப்போன‌

பிரகலாதன்கள் கூட

அங்கே நார் நாராய் கிழிபடுகிறார்கள்.

ஏன் பிறந்தாய் மகனே என்ற பாட்டு

நின்று விட்டது.

சிங்கங்களின் உறுமல்கள் 

அந்த தொட்டிலை கந்தலாக்கிக்கொண்டு

எரிமலைகளின் பூபாளங்களை

அங்கே மீட்டிக்கொண்டிருக்கின்றன.


______________________________________________________________


 



2023-06-30

மாமன்னன்.

 மாமன்னன்.

_______________________________________


படம் ஒரு மைல்கல் தான்.

சந்தேகமே இல்லை.

தேவர் மகனில் மாத்திரம் அல்ல‌

மணிவண்ணனின் சங்கமம் படத்தில் 

வடிவேலு காட்டிய சில உருக்கமான‌

காட்சிகள் கூட‌

அவரது இயல்பு நடிப்புக்குள்

நடிப்பின் சிகரங்கள் தலைநீட்டியிருக்கின்றன

என்பதைக் காட்டும்.

இந்தப்படத்தில்

வடிவேலு ஒரு தேசியவிருதுக்கு மட்டும் அல்ல‌

அதற்கும் மேல் அந்த உயரத்தை 

மூழ்கடிக்கும் வகையில்

மிக மிக உயர்ந்து நிற்கிறார்.

ஒரு தீப்பிடிக்கும்

கோபம் வழக்கம்போல்

இந்த படத்திலும் சீற்றத்தின் தூரிகையை

சுழற்றியிருப்பது இயக்குநர் மாரிசெல்வராஜின்

முத்திரையை பதித்திருக்கிறது.

அவர் கதைக்களம் 

ரிசர்வ தொகுதியின் ஜனநாயகத்தேர்தல்

முடமாகிக்கிடக்கிறது

என்பதில் வேர் பிடித்திருப்பதால்

முன்னேற்றம் காட்டுகின்ற ஒரு கட்சியின்

மாவட்டச் செயலாளரின் சாதிய வன்மத்தின்

உளவியலை தோலுரித்துக்காட்டுவதாய்

இருந்த போதும் 

அவர் தீட்ட இருந்த ஓவியத்தின்

திரைச்சீலைக்கே தீ வைக்கிறார்

என்பதை அவர் அறிந்தே தான்

காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்.

அம்பேத்கார் மட்டுமே போதும்

மற்ற கருவேப்பிலைகளை

கொஞ்சம் ஓரமாக மிதக்கவிட்டால் 

போதும் 

என்று அவர் நினைக்கிறாரா என்று

தெரியவில்லை.

ஏனெனில் படத்துக்குள்

திராவிடத்தால் வீழ்ந்தோம்

என்பதையும் அவர் தூவியிருக்கிறார்

என்பதும் புலப்படத்தான் செய்கிறது.

தம் சாதி இனங்கள்

ஏதோ சாணிக்குப்பைகளாய்த்தான் 

இன்னும் கிடக்கிறார்கள் என்ற‌

சினத்தின் வெளிப்பாடு 

ஒரு இயற்கையான வடிகாலாய் 

இருந்த போதிலும்

ஒரு கசப்பான உண்மை

நம் சிந்தனையை கசக்கிப்போட்டுக்கொண்டே

இருக்கிறது.

இளையராஜாவின் அடி நீரோட்டமும் அது தான்.

எதற்கு இந்த சாதி?

பூணூலும் ஒரு பிராமண‌ மகுடமும்

நமக்கு சூட்ட அவர்கள் தயாராய்த்தான்

இருக்கிறார்கள்.

இன்னும் எதற்கு அந்த‌

"பட்டியல் விலங்குகள்"நமக்கு

என்ற ஒரு எதிரோட்டத்துக்கு

இந்த படம் ஆயத்தமாக இருக்கிறதோ

என்ற ஒரு அச்சம் 

இதில் மெலிதாய் இழையாடுகிறது.

போரின் உச்சக்கட்டத்தில்

தன் கூரியவேலையே குற்றம் கண்டுபிடித்து

சோர்ந்து போய்விடச்செய்கிற‌

ஒரு கண்ணுக்குத்தெரியாத‌

தந்திரம் இதில் இருக்குமோ?

ஒரு உதயநிதியை தன் கூட‌

வைத்துக்கொண்டால் போதும்

சமுதாய எழுச்சியின் உதயத்தை

திசைமாற்றும் சூழ்ச்சி

தன் சிறந்த திரைப்பட இயக்கத்துள்

இழைந்து கிடக்கும்..கிடக்கட்டும்

என்று இப்படம் உருவாக்கப்பட்டிருக்குமோ

என்ற ஐயமே இதில் நிலவுகிறது.

தமிழன் வரலாறு காயம்பட்டு இன்றும்

செத்த பாம்பாய் கந்தலாய் 

நைந்துகிடப்பதன் சித்திரமே

இந்தப்படம்.


________________________________________

செங்கீரன்.

2023-06-25

மருதையன் என்கிற மகத்தான சிந்தனையாளர்.

 மருதையன் என்கிற மகத்தான சிந்தனையாளர்.

_________________________________________________

சொற்கீரன்.



விண்குழல் பேச்சுகள்

ஏதோ பிருந்தாவன புல்லாங்குழல் 

கீற்றின் ஒலிகள் என்பதற்கில்லை.

அதற்குள்ளும்

அக்கினி மூலை ஆகாத மூலை 

எல்லாம் உண்டு.

ஆனால் மனித சிந்தனை என்பது

உறைந்து விறைத்து சவமாகும்

பிணக்கிடங்காக‌

மலிந்து கிடக்கும் வேளையில்

நம் வரலாறுகள் வெறும் சவத்துக்குப்பைகளாய்

இருக்கும் நிலையில் இருந்து

சிந்தனையின் அக்கினிப்பறவைகள்

உயிர்த்து தன் ராட்சசசிறகுகளை

சடசடத்துக்கொண்டு பறக்கின்ற‌

அற்புதங்களை தன் சொற்பெருக்குகள்

மூலம் 

அள்ளி அள்ளித்தருகின்ற 

அரசியல் மேதை

திரு மருதையன் அவர்கள்.

உட்கார்ந்து உற்றுக்கேட்டால்

இந்த நாட்டின் மண்ணாங்கட்டிகளுக்கு கூட‌

நரம்புகள் புடைக்கும்.

மூளைசெதில்கள் மூண்டெழுந்து விடும்.

சோறு என்பது

ஒரு அவசியத்தின் அடையாளச்சின்னம் தான்.

ஆனால்

அது இன்னும் நம் நூற்றாண்டுகளையெல்லாம்

அடுப்பில் ஏற்றி 

உலை கொதிக்கவைக்கிற‌

உந்துதலின் அறிவுப்பரல்

என்பதில் ஐயம் இல்லை.

அவர் பேச்சுகள் மரத்துக்கிடக்கின்ற‌

இந்த பூமத்தியரேகைகளையும்

அட்சய தீர்க்க ரேகைகளையும்

நமக்கு நாம் பாடம் புகட்டும்

சவுக்கடிகளாய் மாற்றி 

எழுச்சி கொள்ளச்செய்யும்.

அறிவும் சிந்தனையும் கூட‌

இப்படி ஒரு ஆற்றல் நிறைந்த‌

குவாண்டம் மெக்கானிக்ஸ் ஆக்கி

புதிய பிரபஞ்சத்தை வார்த்துவிடும்

என்பதற்கு இவர் பேட்டிகளே

மெய்யான சான்றுகள்.


____________________________________________________________


2023-06-24

மாரி செல்வராஜ்

 மாரி செல்வராஜ்

____________________________________________‍____

செங்கீரன்



அற்புதமான படைப்பாளி.

அப்புறம் எதற்கு அந்த லேபிள்?

அந்த வலியைச் சொல்லும் 

அவர் பாணியே

ஆயிரம் எரிமலைகளை

கசக்கிச்சுருட்டி

காமிராக்கண்ணின் மயிலிறகு 

வருடல்களிலேயே வார்த்து விடுகின்றனவே.

அந்த இசக்கியின்

காக்காய் இறகு ஆட்டங்களுக்குள் இருக்கும்

காக்காய் முட்களையே

இன்றைய சமுதாயத்தின் தலையில் 

முட்கிரீடம் சூட்டிவிட்டார்.

அந்த மாமன்னன்

நிச்சயம் புலிகேசி அல்ல.

அந்த தமிழ்ப்புலியின் உறுமல்கள்

இமயமலைகளின் 

நடுக்க "ரிக்டர் ஸ்கேல்களை"

எங்கோ உயரத்துக்கு கொண்டுசென்று விட்டன.

மாரிசெல்வராஜ் அவர்களே

உங்கள் இதயத்தின்

சிஸ்டாலிக் டையஸ்டாலிக்

அழுத்தங்கள்

இந்த சமுதாயநீதியை

படுக்கையில் கிடத்திவிடும்

புலம்பல்கள் அல்ல.

ஒப்பாரிகள் அல்ல.

இவை வெறும் புல்லரிப்புகளும் அல்ல.

புல்லட்டுகளும் அல்ல.

செல்லுசோஸ் சுருளுக்குள்

கருவுயிர்த்த செம்புயலே!

சமுதாயத்தை நிமிண்டிவிடும்

பிரளய வலிப்புகளே

உங்களது இந்த வலிகள்.

வெறும் விருதுக்குள் சுருண்டுவிடாமல்

பாக்ஸ் ஆஃபீஸ் வெள்ளமாயும்

உறக்கம் உடைக்கும் ஊழிகளாகவும்

உங்கள் படைப்புகள் வெல்லட்டும்.

நீங்கள் நீடூழி நீடூழி வாழ்க!


____________________________________________________________

2023-04-30

காதல் என்றொரு கேலக்ஸி





காதல் என்றொரு கேலக்ஸி

_______________________________________ருத்ரா



கேலக்ஸி என்று ஆங்கிலத்தில்

ஒலித்த போதும் 

காதல் எனும் கலித்தொகை 

களிப்பு மிக்கூறுகிறது.

ஆம்.

என் இரவுப் பிழம்புக்குள்

நீ ஒரு ஓளிமண்டலம்.

கனவு கொண்டு தைத்தபோதும்

அந்த இருட்கந்தலில்

உன் ஊசி நினைவுகள்

என்னைச் சல்லடை ஆக்கிக்கொண்டு தான்

இருக்கிறது.

இந்த ஒளி நிழல் சல்லடையை

அன்றொரு நாள் தவறுதலாய்

அந்த ஜேம்ஸ்வெப் தொலைனோக்கி

"ஒளிச்சடையன்" என்ற 

ஒரு புது "கேலக்ஸியை"

கண்டுபிடித்து விட்டதாய்

தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறது.

அன்பே!

அது உண்மையில்லை என்று

நீ போட்டு உடைத்து விடாதே.

அந்த பிரம்மாண்ட பிரபஞ்ச சந்தோஷம் தான்

நமது சந்தோஷமும்.

காதல் என்ற கேலக்சியின் அர்த்தம்

மகிழ்ச்சி..மகிழ்ச்சி..பெருமகிழ்ச்சி


_____________________________________________  

2023-04-23

புத்தக தினம்.

 



புத்தக தினம்.

_________________________________சேயோன்.



குபெயர்ச்சி புத்தகம் 

விற்றுத் தீர்ந்தது.

வாஸ்து சாஸ்திரமும் பி ஆர்க்கும் ...ஒரு ஒப்பீடு

கல்லூரியில் இருந்தே ஆர்டர் வந்து

அத்தனையும் காலி.

தக்காளி சாஸோடு தாமரை ஆப்பம் 

செய்வது எப்படி?

புத்தகங்கள் எல்லாம் காலி.

ஒரு வாரத்தில் பத்து பில்லியன் 

சம்பாதிப்பது எப்படி?

இது தீர்ந்து போய்

மேலும் எட்டு லட்சம் காப்பிகளுக்கு

ஆர்டர் ரெடி.

அதோ பாருங்ள்  பக்கத்து வரிசை

 புதிய வெளியீடுகளை....

"புல்லின் காட்டுக்குள்

புல்லாங்குழல் கனவுகள்"

"சமவெளியைத் தேடி மனித நீதி"

"நாலு வர்ண பட்டாம்பூச்சிகள்"

இன்னும் இன்னும்

"எரிமலை இசையமைத்த‌ 

மனித உரிமைக் குரல்கள்"

உய‌ரமாய் அடுக்கியது அடுக்கியபடி...


____________________________________________

2023-03-11

அகழ்நானூறு 29

  அகழ்நானூறு 29

____________________________________________

சொற்கீரன்.




நெடும் பழன வழியிடை வள்ளுகிர் யாமை

பொறிக்கண் விதிர்ப்ப கொடிவிடு கல்லிற்

பரற்கண் போகி பெண்ணை அந்தூறு

அண்ணிய நுங்கின் கிளர்கண் கசியும்

கள்ளினை பகுவாய் நிறைப்ப மாந்தி

ஓர விழித்து சில் அசைகூர் சிறுதேர் அன்ன‌

செல் இயல் கண்டும் கரும்பமல் படப்பை

பாசடர் தோகையின் இடை இடை அகவும்

அவள் ஒலி ஆங்கு அஞ்சிறைத்துடியென 

முரல்வதும் கூர்விழி பொறிமா திரிமருப்பு

அவனுள் சுருள்போழ் செய்யலும் ஒல்லாதானாய்

சுரம் நீடு தோற்றும் நிழல் ஆறு நெளிய‌

வான்சுடர் திசையொடு திரிதரும் நெருஞ்சி

அன்ன அவளும் அவன் அலை வன்காழ் 

நெடுஞ்சுரம் முகத்தவள் புதைபடு துயிலும்.

இமைசேரா முள்விழிக்காட்டில் சேக்கை இடறி

துயர் அழல் வீழ்ந்து வேகுவள் நோகுவள்

காட்சியும் அவனை தீயூழிப்படுத்தும்.

வையை ஆற்றின் காஞ்சி நீழல் அவள்

குரவை அயரும் காட்சிமுன் கைக்கொள‌

காற்றையும் பெயர்த்து காற்றுமுன் சென்றான்.


_______________________________________________________

2023-03-10

ஷார்ட் ஃபில்ம்

 ஷார்ட் ஃபில்ம்

________________________________________

ருத்ரா.



இருட்டையும் கூட 

இலக்கியம் ஆக்கி விட‌

முடியுமா?

அப்படித்தான்

அந்த ரெண்டா கால் நிமிட‌

ஆங்கிலத்துண்டுப்படம் பார்த்தேன்.

ஆனால்

இரண்டு சொச்சம் நிமிடங்களுக்கும்

இருட்டைப்பூசிக்கொண்டு

ஒலி இசை அதிர்ந்தது.

பிறகு 

புள்ளி பூஜ்யம் பூஜ்யம்..

செகண்டுக்கு

ஒரு ஒளிக்கீற்று.

அவ்வளவு தான் 

படம் முடிந்து

வரிசை வரிசையாய்

எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தன‌

ஐந்தாறு நிமிடங்களாய்.

அது என்ன தலைப்பு...

மறந்து விட்டதே...

மறக்காமல் அதையும் போட்டு விட்டார்கள்.

"தேடு"

எதை என்று தான் போடவில்லை.

இருட்டையா?

வெளிச்சத்தையா?

ஒரு ஆழமான ஆழமாகிய 

எனக்குள்

அந்த நங்கூரத்தை

வீசி எறிந்தார்களே!

அது ஒரு

பில்லியன் டாலர் இலக்கியம் தான்.


_____________________________________________________


2023-03-09

டைம் ட்ராவல்

 அவனுக்கு ஒரு குழந்தை

பிறந்தது.

அவனை பேராண்டி என்று

கூப்பிட்டது.


டைம் ட்ராவல்

_______________________________

ருத்ரா

அகழ்நானூறு 27

அகநானூறு 244

மதுரை மள்ளனார்.

முல்லை

வினைமுற்றிய தலைமகன் 

தேர்ப்பாகற்கு சொல்லியது.


தலைவன் வினைமுடித்து இல்லம் திரும்பும் ஒரு வவ்வால்காடு.அது பற்றி அவர் குறிப்பிடும் உவமை வரிகளும் அழகு மிக்க சொல்லாடல்களும் மிக அருமை.சங்கப்புலவர் மதுரை மள்ளனார் அந்த அடர்ந்த காட்டில்  மிக உயர்ந்த மரங்களின்  நீர்ப்பசை ஈரத்தால் பசுமையை ஒட்டிவைத்தாற் போன்றும் கிளைகளில் நெய்த‌டவியதைப்போன்றும் அந்த சூரியவெளியில் அவை மினு மினுத்து வவ்வால்கள் கூட்டமாய் அப்பிக்கொண்டதை மிகவும் அழகாய் கீழ்க்கண்ட வரிகளில் எழுதுகிறார்.


"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன‌

சேயுயர் சினையை மாச்சிறைப் பறவை"


இந்த வரிகளை என் அகழ்நானூறு 27 ல் அப்படியே தொடக்கவரிகளாய் தைத்து நெய்துள்ளேன்.....சொற்கீரன்


அகழ்நானூறு 27

_____________________________________________

சொற்கீரன்.


"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன‌

சேயுயர் சினையை மாச்சிறைப் பறவை"

கல்லெறிந்தாற் போல் காரின் குழைதரு

மஞ்சு இனமென வான் திரை கிழிக்கும்

சூர்கலி கொல் இருள் அஞ்சுரம் ஆரும்

அகலம் கிளர்தர ஆற்றுப்படூஉம் 

அடுபோர் மள்ளன் என்னாது என்னை

இமைச்சிறை பூட்டி விழிக்குள் வீழ்த்தும்

அன்னவள் கண்சுரம் ஆற்றுப்படையின்

தண்ணிய நிழலிய நீளிடை புகுவன்

விரைதி விரைதி கொய்சுவற்புரவியின்

கொள்மொழி பேசு கதழ்பரி அஃதின்

பூங்குழியும் ஈண்டு புயல் கரு பூக்க‌

நின் கால்விரல் எழுதி காலும் வெரூஉம்

கடுவிசை ஓம்பு காலம் ஈண்டு

பெருங்கல் மறிக்கும் வழியினை உடைப்பாய்

அவள் சில்பூ விழி இங்கு சீர்த்தவிடத்து.


________________________________________________________





2023-03-08

நனவை தின்ற கனவு.

 நனவை தின்ற கனவு.

_____________________________________________

ருத்ரா




வாழ்வது போல்

அல்லது

வாழ்ந்தது போல்

ஒன்றை வாழ்ந்து விட்டோம்.

மீதி?

முழுவதுமே மீதி.

தொடங்கவே இல்லை.

மூளைச்செதில்களில் மட்டும்

காலப்பரிமாணத்தின்

வேகம் கூட்டி...

வேகம் என்றால்

சாதாரண வேகம் இல்லை

சூப்பர் லுமினஸ்...

ஒளியை விட கோடி மடங்கு கூட‌

இருக்கலாம்.

இந்த பிரபஞ்சத்தின் இந்த அடுக்கு தாண்டிய‌

இன்னொரு அடுக்கில்

நீ எட்டு எடுத்து வைத்திருக்கிறாய்.

இன்னும் சில பத்து ஆண்டுகளில்

புதிதாக பிரபஞ்சப்பூக்களை

உன் கோட் பித்தான் துளைகளில் கூட‌

பதியம் போட்டுக்கொள்வாய்.

உளுத்துப்போன புராணங்களில்

வெர்ச்சுவல் காஸ்மாலஜி மாடல்கள்

குமிழி இட்டுக்கொண்டே இருக்கலாம்.

மனிதம் மீறிய‌

பில்லியன் பில்லியன் சிந்தனை சிப்பங்களும்

அறிவியல் மூளை மடிப்புகளும்

உன் எண்ண அசைவுகளிலேயே

இயக்கம் பெறுவதாக இருக்கலாம்..

என்ன இது?

சூரியனின் ஒரு பகுதி பிய்ந்து

விட்டதாமே.

ஜேம்ஸ்வெப் சொல்லிக்கொண்டு இருக்கிறது.

உன் சன்னல்களில் அது

நுழைகி....றது...

சைஃபை மூவியால் இந்த‌

ஹேலுசினேஷன்...

அவன் ரத்தவெள்ளத்தில்.

டாக்டர் சுருக்கமாய் சொல்லிவிட்டார்.

செரெபெரல் ஹேமரேஜ்.


________________________________________________________


உலக மகளிர் தினம்



உலக மகளிர் தினம்

-----------------------------------------------------------------------------



பெண்ணே!

உலக மகளிர் தினம் என்று

மலர்க்கிரீடம் சூட்டினோம்.

அந்த மலர்கள் சிரித்தன‌

அவள் வண்ணச்சீறடிகளே

உலகின் புகழ்பெற்ற பூங்காங்கள்.

அவள் காலடிகளையா தலையில் சூடுவது?

அதில் ரோஜா எனும் 

ஒரு மலர் முள்ளை வைத்து

குத்திக்காட்டியது.

போதும்.

கவிதைகள் எனும் உங்கள் 

கள்ளின் குடங்களைக்கொட்டி கவிழ்த்தது?

இந்த சமுதாயம் சமூக அநீதிகளால்

புண்பட்டுக் கிடப்பது 

அறிவீர்களா?

புண்படுத்தியவர்களே

இப்படி 

புளகாங்கிதம் கொண்டு

அம்மன் அபிஷேகங்கள் நடத்தியது போதும்.

வளையல்கள் ஒலிப்பதற்கு மட்டும் அல்ல‌

இந்தக்கைகள்.

அறிவு ஆள்வதும் 

அகிலம் ஆள்வதும்

மகளிர் வழி பரிணாமங்களே

அறத்தொடு அரசியல் மலர்த்தும்!

வெல்லும் வெல்லும்.

பெண்ணே வாழ்க!

பெண்மையே வெல்க!

__________________________________________‍

ருத்ரா 

2023-03-02

அகழ்நானூறு 25

 அகழ்நானூறு 25

______________________________________________

சொற்கீரன்



பாலை வெஞ்சுரம் பாய்திரை அன்ன‌

பரிந்தே ஏகும் நின் பொருள்நசைசெல்வன்

பாலின் வாலொளி எழுதரு மதியம்

கடற்கண்டாங்கு பொங்கும் நின்முகம்

அருவியின் ஆர்த்து அவனை வான் தோய்

மாவலை எழுதகை செய்ய நகைத்தாய்.

சிமயக்குன்றத்து பல் ஒலி தேஅத்து

வழங்கொலி யெல்லாம் தமிழெனக்கண்டு

தேடா செல்வமென செந்தமிழ் ஆண்டு

செவ்விய நம்மொழி தன்னோடு சேர்த்துக்

கொணர்தகை மள்ளன் தேயா மனத்தில்

நகர் நகர் நீங்கி நாகரி மொழியை நம்

இயல்மொழி ஆக்கி பல் மொழித்திரவியம்

உலகோர் வியக்க படைத்தவன் வந்தான்.

அற்றைத்திங்களில் நின் ஆவியும் கலித்து 

அகவல் செய்தக்கால் மஞ்ஞை இனநிரை

மின்னல் மழையென பீலிகள்பெய்திடும்

மகிழ்முன்றில் அணிலாடும் மெல் ஒலி

கீறித்தரும் இன்செய்தி கேள் மெல்லிழையே!


________________________________________________________________



பென்சில் ஓவியம்

 Jugal Sarkar | Kolkata | Facebook இந்த இணைப்புக்கு மிக மிக "நன்றி"

1 நபர் இன் குளோஸ்-அப் ஆக இருக்கக்கூடும்

இந்த பென்சில் ஓவியம்

என்ன சொல்கிறது?

கூந்தல் கடல் அலைகள்

எதோ கருப்பு இருளை

சிலிர்க்கின்றன.

கண்களிலும் 

தளும்பும் ஏழுகடல்களின் பிஞ்சு.

இதழில்

அழுத்தமாய் ஒரு சிவப்பு.

நெற்றியில் 

அசங்கலாய் ஒரு சிவப்பு.

வகிடு உச்சியில்

வக்கிரமாய் ஒரு சிவப்பு.

பெண்ணே நீ யார்?

சிதைக்குப்போகும் சிற்பமா?

இல்லை 

ஒட்டு மொத்தமாய் எல்லாவறையும்

சிதைக்கும் சிற்பமா?

முதலில் நீ

எரித்து சாம்பலாக்க வேண்டிய வரிகள்

"ஆவதும் பெண்ணாலே

அழிவதும் பெண்ணாலே"

என்ற அக்கிரம ஆகமங்கள்.

ஆம்.

இப்போதைய தேவை

எல்லா ஆண் ஆதிக்கங்களையும் 

அழிக்கும் பெண்ணே தான்.

சிவனிடமிருந்து பிடுங்கி

அந்த உடுக்கையை நீ

அதிர அதிர குலுக்கு.

இவர்களின் சீஸ்மோகிராஃப்

இதற்கு

என்ன பரிமாணங்களையும் 

கொடுத்துக்கொள்ளட்டும்.

பூமிக்குள் புதைந்து போன‌

சீதைகளைவிட‌

இந்த புழுத்து நெளியும் பூமியை

பந்தாடும்

சீதா மூர்த்திகளே தேவை.

உன் சினத்தீ

இந்த வர்ண வன்மங்களை

சாம்பலாக்கட்டும்.

ஆம்.

சாம்பலாக்கட்டும்.

_____________________________________________

ருத்ரா

2023-02-27

பேட்டி

 Facebook  THANKS FOR THE LINK


ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இன் குளோஸ்-அப் ஆக இருக்கக்கூடும்


ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இன் குளோஸ்-அப் ஆக இருக்கக்கூடும்

பேட்டி 

-------------------------------------------------------------------------------------


காலம் எனும் பொறாமைப் பேயே.

உன்னால் என்ன செய்ய முடியும்?

இந்த தோலைச் சுருக்குவாய்.

உன் வரிகளை உழுதுகொள்.

அதில் 

என் வரிகளை

உயிரெழுத்துக்களாக்குவேன்.

என் கண்களின் தீக்கங்குகளைப்பார் 

இன்னும் இன்னும் 

ஆயிரம் சூரியன்களுக்கு 

கடன் தருவேன்

ஒளியை ....நெருப்பை..

பிணமாய் முடிந்து 

சாம்பற்பூக்களை சிதறடித்து 

நீ 

பழி தீர்த்துக்கொள் கவலையில்லை.

என்னைசசுற்றி 

அன்பின் மக்கள்.

அவர்களைச்சுற்றி 

ஆவேசமான கனவுகள்.தாகங்கள்.

என் புன்முறுவல் வளைவுக்கு 

இந்த உலகத்தில் 

எந்த "ஜியாமெட்ரியும்" கிடையாது.

அகராதிகளில் அச்சிடப்படாத 

சொல் 

மனித நேயமே அது.

என் மூச்சை உதிர்த்து 

உன் மூச்சை வேண்டுமானால் 

காப்பாற்றிக்கொள்.

பிறப்பும் இறப்பும் 

ஒரே வாசல் ஆனது எனக்கு.

காலமே 

உன்னோடு இன்னும் பேசிக்கொண்டிருக்க 

நேரம் இல்லை எனக்கு.

உன் பின்னே பார்.

கோடி பிரம்மன்கள் காத்திருக்கிறார்கள் 

என் பேட்டிக்கு.


---------------------------------------------------------------------------------------------

ருத்ரா 









2023-02-26

விசைப்பலகையில்

உராங் உட்டானோ

சிம்பன்சியோ

தெரியவில்லை.

விசைப்பலகையில் 

விரல்களை மேய விட்டு

எச்சில் பண்ணி கடித்துப்பார்த்து

குதறிக் குதறி உதறியபின் 

தட்டியது இது....


போதும்டா..அங்கே

நீங்கள் விரல் த‌ட்டியது.

இனி மேலும் தட்டினால்

ராம லட்சுமணர்களை 

சுமந்து சுமந்து

தரைக்குள்ளேயே போய்விடுவீர்கள்!!!!!


____________________________________________

ருத்ரா

2023-02-25

மூளையின் மூளை

 மூளையின் மூளை

___________________________________________

ருத்ரா



யாரோ ஒருவர்

அந்த செயற்கை மூளைப்பெட்டியை

வைத்துக்கொண்டு

விளையாட விரும்பினார்.

தான் வந்திருந்த விமானம்

ஏன் இத்தனை தாமதம்

என்று

"ஏ ஐ பாட்"ல்

வினா எழுப்பச்சொன்னார்.

அதுவும்

நீள நீளமாய் ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில்

கார சாரமாய் வினா தொடுத்தது.

சென்ற வேகத்திலேயே

விடையும் வந்தது

அதையும் விட நறுக் நறுக் என்று

ஊசி குத்திய ஆங்கிலத்தில்.

அனுப்பியது

விமானக்கம்பெனியின் 

செயற்கை மூளைப்பெட்டி.

கணிப்பொறிகள்

வாளேந்த துவங்கிவிட்டன.

என்றைக்கு 

உலகம் ஒரு

மெகா மெகா

ஹிரோஷிமா நாகசாகியாய்

கரிப்பிடித்து

காணாமல் போய்விடுமோ?

ஓட்டு கணிப்பொறி 

பட்டன் தட்டுவது போல்

அணுகுண்டின் பட்டனும் 

தட்டப்படலாம் ஒரு நாள்.

ஜனநாயகத்தைக்காட்டி

மடியில் 

ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்

சர்வாதிகாரம் 

சந்திக்கு வந்து விடலாம்.

யாருக்குத் தெரியும்?

மனிதா

உன் மூளைக்கும் மூளை இருக்கிறதா

என்று

உடனே சோதனை செய்து கொள்!


____________________________________________________


அகழ்நானூறு 24

 அகழ்நானூறு 24

________________________________________

சொற்கீரன்




பாலைச்சுரம் அன்ன திரைச்சுரமும் ஆங்கோர்

நிரம்பா நீளிடை கடற்சுரம் கண்ணும் கண்போழ்ந்த‌

கடும்பல் திறத்தோன் முளிஅலை கல்லென‌

தண்பறை நாரை இனநிரை மேவ‌

வாள்மூக்கின் வன்சுறா உழப்ப ஆழல் மூழ்வும்

அலைவுறா நீச்சும் அவ்வெள்ளின் வெளியிடை

வீறு கொள வீங்கு நீர் புடைத்தாய் என்னே!

நின் குறுமகள் பாவை வண்டற் பாவை

அனையளாய் விரிமணல் எக்கர் வான்பூச்சூடி

குளகு குடையளாய் தழையாடை யுடுத்து

இன்பூ பூத்த செருந்திச் சுடரனாய் பரிமணல் 

பருங்கண் தடம் தடம் நீ இவண் ஊர்வாய் என‌

அவள் விழி இமை அடுக்கத்து உள் பூத்து

நின்றாள் நோதக நீ செய்தல் கடுங்கோறல்

கொல் அறம் தவிர்க நினை நச்சினாட்கினியனே.


_______________________________________________________

2023-02-23

முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்

 


முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்

_________________________________________

கலஞரின் நிழல்

இன்று

கலைஞர் குரலுக்கு நிழல்.

திராவிட மாடல் என்று

தமிழுக்கு ஒரு சிம்மாசனம் தந்த‌

செம்மல் தமிழே..

நீ நிமிர்த்தியது பேனா அல்ல.

உலக நாகரிகத்திற்கு

தமிழ் ஏற்றிய ஒரு

கலங்கரை விளக்கு.

நீ நீடு வாழ்க.

__________________________________

கவிஞர் ருத்ரா

2023-02-08

அயலி

அயலி
___________________________________________
ருத்ரா



வயசா?
வயசுக்கு வருதலா?
எது முந்தி வருகிறது?
எது உந்தி தள்ளுகிறது?
மின்னலடிக்கும் 
பெண்மை
தனக்குள்
கருவில்லாமலேயே 
ஒரு பயம் எனும் கருவை
சுமக்கிறது.
பிறக்காமலேயே 
பிறக்கப்போகும் அந்த‌
சமுதாய அரக்கனின்
கொடுமைகள் 
எத்தனை? எத்தனை?
ராமாயி வயசுக்கு வந்துவிட்டாள்
என்று
அன்று ஒரு படம்.
மாமூலான அந்தக்கதைக்கருவுக்கு
கிராமத்து ராட்சசமும் மூர்க்கமும்
ஒரு நெஞ்சத்துக்கிள்ளலுக்கு
தீ வளர்க்கத்தான் செய்தது.
இன்று
சானிடரி நாப்கின் கூட‌
ஒரு கதாநாயகி அந்தஸ்தையும் மீறி
வளர்ந்து கிளர்ந்து இருக்கிறது.
கதையின் சமுதாயக்கனத்தை
அதன் வலிமிகுந்த பாரத்தை
எத்தனை தேசியவிருதுகளாலும்
இலேசாக்கி விட‌ விடமுடியாது
என்று இன்று
திரைப்படைப்பாளிகள்
காமிரா உளிகொண்டு
செதுக்கி 
சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.
பெண் 
பெண்களிடமிருந்து
பெண்மையிடமிருந்து
உண்மையை உரத்து சொல்லமுடியாத‌
ஏதோ ஒரு பிரபஞ்சத்துள்
மாட்டிக்கொண்ட‌
"ஏலியன்"தான்
அயலியா?
இந்த ஒரு எரிமலைப்புழுவை
லாவகமாக‌
தூண்டிலில் மாட்டி
திரைக்கடலில் வீசி
திரவியம் தேடிக்
கண்டு பிடித்திருக்கிறார்
இயக்குநர் 
திரு முத்துக்குமார் அவர்கள்.
தொலைக்காட்சித்தொடர்கள்
தொல்லைக்காட்சி இடர்களாக‌
மாறி விட்ட நிலையில்
இப்படியொரு
அருமைக்காவியம் எப்படி உருவானது
என்பதே பெரும் வியப்பு.
பெண்களை புண்படுத்தும்
ஒரு புண்ணிய பூமியாய்
பெண்ணை ஒரு பூமாதேவியாய்
புதைத்துக்கொண்டே
புராணங்களை
பாராயணம் செய்யும் 
ஒரு சேடிஸ தேசத்தில்
பெண்மை எனும் பெருவெளிச்சமே
மனிதம் சுடரச்செய்யும்
ஒரு பேராற்றல் என்பதை
சொல்ல வந்திருக்கும் இந்த படம்
விருதுகளால் அலங்கரிக்கப்படும் என்பதைவிட‌
இந்தப்படத்தால்
அந்த விருதுகள் தான்
உயரங்கள் எட்டும் என்பதே
மிக மிக உயரமான உண்மை.

__________________________________________________________

2023-02-05

தமிழா! தமிழா!!

 தமிழா! தமிழா!!


____________________________________


சொற்கீரன் 




என்ன அழைப்பு இது?


யாருடைய குரல் இது?


உன் குரல் 


உனக்குத் தெரியவில்லை.


உன் இனம்


உனக்கு உணர்வு இல்லை.


அயல் இனத்தானின்


வாளும் கத்தியும்


உன் இனத்தானின் 


நெஞ்சில் செருகுவதற்கும்


உன் கைகள் தான்


உதவிக்கு வருகின்றன‌


என்னும் 


ஓர்மையும் உனக்கு இல்லை.


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக‌


நீ


இறந்து போன படுக்கையில் தான்


இருந்து கொண்டு


அட்டைக்கத்தியை


சுழற்றிக்கொண்டிருக்கிறாய்.


உன் முன்னோன்


வில் கொடி ஏற்றினான்


என்று


ஒலி பரப்பிக்கொண்டு


இந்த இமயத்தை 


நீ கொச்சைப்படுத்திக்கொண்டு


இருக்கிறாய்.


சினிமாவின் ஜிகினாவுக்குள் 


எந்த சூரியனை 


நீ கருதரிக்கப்போகிறாய்?


ஊள்ளூர் பரங்கிமலைச்சிங்கம்


என்று


அரித்தாரத்து அவதாரத்தை யெல்லாம்


பொதி சுமந்து கொண்டிருக்கிறாய்.


உன்னைத் திசை மாற்றும் 


தில்லாலங்கடிகளுக்குள் 


சட்டென்று ஒட்டிக்கொள்ளும் 


ஈசல் பூசசிகளாய் 


இறைந்து கிடக்கிறாய்.


அது வெறும் மையை 


கொப்புளித்த பேனாவா?


யாதும் ஊரே யாவரும் கேளிர் 


என்று 


கலங்கரை வெளிச்சமாய் 


நின்று கொண்டிருக்கும் 


கணியன் பூங்குன்றன் 


விதைத்த தமிழ்ச் சுவட்டை  அல்லவா 


நிமிர்த்திவைத்துக்கொண்டிருக்கிறது.


ஒரு ஆரிய சூழ்சசி அதை 


அடித்து நொறுக்க 


அலப்பறை செய்கிறது.


தமிழ்ப்பகையின் 


பொய் மீசைகள் 


முருக்கேற்றிக்கொண்டு 


மூர்க்கம் வளர்க்கின்றன.


கவனம் கொள் தமிழா!


தமிழ் மண்ணே தான் 


இந்தியா என்ன இந்தியா


உலகமெல்லாம் 


தூவிக்கிடக்கிறது


என்ற 


உண்மை என்றைக்கு


உன்னுள் ஒளி பாய்ச்சப்போகிறது?


உன் ஓலைச்சுவடியை 


முகர்ந்து பார்.


அதில் தெரியும் 


உன் உலகத்தின் வாசனை.


உன் உலகத்தின் 


உள்துடிப்பும் உள் உண‌ர்வும்.


தமிழா!தமிழா!!


மீண்டும் உற்றுக்கேள்.


எங்கோ "பெரு"விலிருந்தும்


அமெரிக்கச் சிவப்பு இந்தியக்குரலிலிருந்தும்


ஆப்பிரிக்க ஆஸ்திரேலிய‌


பழங்குடிகளின் 


வேர்வை மணத்திலிருந்தும்


பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு


வசன ஒலிகளிலிருந்தும்


பாரசீக அவெஸ்தா 


வரலாற்றுப்பாட்டுகளிலிருந்தும்


எகிப்து சுமேரிய‌


மற்றும்


எல்லா எழுத்துப்பூச்சிகளின்


ஊர்தல் வரிச்சுவடுகளிலிருந்தும்


உய்த்து உணர்.


தமிழா! தமிழா!!


தமிழ்க்குரல் கேட்கிறதா?




___________________________________________________






2023-02-01

ஏன்?

 


என்ன செய்யப்போகிறாய்?

இது ஒரு சினிமாப்பாடல் வரி.

காதலியை நோக்கி 

தலையை சிலிப்பிக்கொண்டு

பல்லைக்கடித்துக்கொண்டு 

கேட்கும் கேள்வி இது.

ஓ! என்னருமை இளைய யுகமே?

உன் கேள்விகள் எல்லாம்

இந்த முட்டுச்சந்துக்குள் தான்

முடங்கிக்கிடக்கிறதா?

அந்த விளிம்புமுனையில் போய் நின்று

நொறுங்குவதற்குள்

உன்னை முகத்தில் அடித்துவிட்டு

ஓடும் 

அந்த நொடிகளை புறந்தள்ளிவிட்டு

கொஞ்சம் சிந்தனை செய்.

உன்னைச்சுற்றி சுழன்று அடிக்கிறது

நெருப்பின் பெரும்புயல்.

இந்த சமுதாயம் முழுவதுமே

சாம்பல் மேடுகளாய்

எஞ்சி நிற்கப்போகும்

ஒரு நாகரிகப்பேரழிவு

உன் முதுகுப்பக்கம் 

நின்று கொண்டிருக்கிறது.

ஆம்.

என்ன செய்யப்போகிறாய்?

அதே கேள்வி தான்.

நீ மீண்டு கொள்ளவேண்டும்.

இந்த மண்ணை 

இந்த கனவை

இந்த மக்களின்

பேரழிவை

நீ தடுத்தாட்கொள்ளும்

தருணம் இது.

ஏன்?

என்ன ஆச்சு?

இந்த கேள்விக்கும் கூட‌

உன் சுநாமிக்குள் தான்

எல்லாம் இருக்கிறது.

விழித்தெழு!

சிலிர்த்தெழு!

சினந்தெழு!

சீறியெழு!


_________________________________________________________

அகழ்நானூறு 15

 அகழ்நானூறு 15

___________________________________________

சொற்கீரன்




"வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை"

_____________________________________________________


வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை

கண்பதித்து வழிபூத்த விழிமீன் துள்ளுநிரை

எல்மேவு அகல்வானின் கவுள்வெள்ளி வேய்விரீஇ

முகை அவிழ்க்கும் மெல்லிமிழ் நின் நகை 

கண்டல் அல்லது யாது உற்றனள்.

கூன்முள் முள்கு குவித்தலைப் பெருமீன்

குய்தர பொங்கும் நுரைகடல் சேர்ப்ப!

திரை திரை பாய்ந்து துறை துறை ஊர்ந்து

ஞாலத்து உப்பக்கம் நெடுங்கரை சேர்ந்து

கனைபடு பல் ஒலி பல் தேஅத்தும் ஊடி

மறைபடு மொழிகள் பல ஈண்டு கொணர்ந்து

செறிதமிழ் அடர்த்தி செந்தமிழ் ஈன்று

செம்மை நன்மொழி ஆக்கிய திரைஞர்

திரை இடத்துப் பட்டினம் தந்தனர் தமிழர்.

அன்னவன் நின்னவன் ஆருயிர்த்தமிழன்.

முன்னீர்ப்பரவை முளிஅலை வென்று

திரைவியம் தேட நீலப்படுகை நெடும் ஊழ்

கடாஅ யானை அன்ன எழுந்து அதிரச் சிதைஇ

ஆழ்கடல் ஆளும் தகைமை ஆயிரம் இறந்து

உலகு வியப்ப விண்ணும் அளந்த‌

பெரியோன் என்ன உன்னை ஒருசிறை

பெயர்த்துப் பெயரத் தந்தோன் வரூஉம்.

எறி எல் நாளும் பூக்கும் அவிழ்க்கும் 

அணிநிரல் வென்றிக் கொடி கொண்டு

ஆயிழை உன்னைத் தழீஇயத் தந்திடும்

நெடும்பணைத்தோளொடு விரையும்  மன்னே.

___________________________________________________________