2023-07-25

"பாஷா பூதம் "


"பாஷா  பூதம் "

--------------------------------------------------------------------

ருத்ரா 




நானா உன் கண்ணுக்கு 

தெரியவில்லை ?

இதோ பார்.

அவர் தன மூக்குப்பொடி 

டப்பியிலிருந்து 

கொரோனா மாதிரியான 

ஒரு வைரஸை 

எடுத்து வெளியில் போட்டார்.

ஒன்றுமே தெரியவில்லையே..

சரி சரி 

அந்த தொலை நோக்கி வழியாய் பார்.



 

2023-07-08

கள்ளி வனம்




நீலக்கத்தாழை இன் படமாக இருக்கக்கூடும்



கள்ளி வனம்

___________________________________

சொற்கீரன்



அந்த தூணில் 

கள்ளி அடர்ந்து கிளைத்து

முட்களின் கூந்தலில்

கண்ணுக்குத்தெரியாத ஒரு

ரோஜாவைக்காட்டி

என்னை வதைத்துக்கொண்டே

இருக்கிறது

கடந்த நாற்பது ஐம்பது

ஆண்டுகளாய்.

அதில் "ஜான் கீட்ஸின்"

கவிதை வரிகள் கலவரப்படுத்திக்கொண்டே

இருக்கிறது.

"ஸ்வீட்டெஸ்ட் ம்யூசிக் இன் தி

சேடெஸ்ட் தாட்ஸ்"

அம்பதுகளில் தேன்குரலை பிழிந்து தரும் 

ஜிக்கி அவர்களின் 

பாடல்களின் அம்புப்படுக்கையில்

இனிமையில் திகட்டும் 

அதை விட இனிமையான ஒரு 

துயரம் 

நெய்து கொண்டே இருக்கும்.

கள்ளியே!

முள்ளைக்காட்டி நீ

தள்ளி தள்ளி போனாலும்

என் அனிச்சத்தின் மலர் மெத்தை

நீயே தான்.

விரல் தட்டும் கவிதைக்குள்

ரத்தமாய் சொட்டினாலும்

வான நினைப்புகளின் 

ஊற்று அது.


________________________________________________


"இதோ ஒரு பிக் பேங்க்"

 "இதோ ஒரு பிக் பேங்க்"

_______________________________________________

காஸ்மால‌ஜிஸ்ட்.


கைபேசி என்று

இந்த உலகத்தையே பிய்த்து

நம் உள்ளங்கையில் கொடுத்து

நம் கண்ணையும் காதையும்

அதில் கட்டிப்போட்டார்கள்.

இப்போது

நாய்க்குட்டி அது தான்.

அதனுடைய 

கண் முளைக்காத அறிவு முளைக்காத‌

ஆண்ட்ராய்டுக்குட்டிகளே நாம்.

சிகரம் வைத்தாற்போல்

நம் கபாலத்தையும் கழற்றி

நம் கையில் வைத்துவிட்டார்கள்.

மூளைகளின் மூளைக்குள் குருத்துவிடும்

மூளைகள் எல்லாம்

நம் விரலிடுக்குகளில்

நசுங்கிக்கிடக்கிறது.

ஐயோ.

அவசரம் முடுக்குகிறது.

எப்படி ஒண்ணுக்குப்போவது ?

இதோ

அந்த சாட்பாட்டிடும் தான்

அல்காரிதம் கேட்டிருக்கிறேன்.

அது

ஆல்பா நியூமரிக்கலிலும்

இன்னும்

ஃபூரியர் ட்ரான்ஸ்ஃபார்ம்களிலும்

மில்லியன் க்யூபிட்டுகளில்

கேட் திறக்கிறது

வரி வரியாய் அந்த சமன்பாடுகள் வழியே...

அதோ அந்த‌

ஜேம்ஸ்வெப் வேறு குறுக்கிட்டு

எங்கோ அழைத்துக்கொண்டு

போய்விட்டது.

ப்ராக்ஸிமா எக்சோபிளானட்டில்

ஏதோ 

ஒரு கட்டணமில்லாத கழிப்பிடத்துக்கு

கொண்டு வந்து விட்டது.

அதற்குள் இதோ..இதோ

என் "பிளாடரில் பிக் பேங்க்"


___________________________________________________________‍




2023-07-06

செங்கோடி.

 


படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.




செங்கோடி.

___________________________________


தம்பி...

நீ இல்லாமல் நான்

தவித்து தான் போனேன்.

எண்பது முடிந்தது என்று

தோரணம் கட்டி

எனக்கு விழா எடுத்தார்கள்.

நீ

ஓடி ஆடி நின்று

ஆள் அம்புகளாய் பரபரத்து

முறுவல்கள் தூவி கல கலப்பு 

ஊட்டுவாயே.

அந்த வெறுமை வலிக்கத்தான் செய்கிறது.

இப்போது என் அகராதியில் 

அந்த கல்லிடைக்குறிச்சி என்னும்

கவிதை கந்தலாகி

மண்ணுக்குள் கிடக்கிறது.

தாமிரபரணியும் கன்னடியன் கால்வாயும்

தன் பச்சை மரகத பளிங்கு விரிப்பை 

தினமும் பாய்போல்

விரித்து சுருட்டி மடக்கி

மீண்டும் 

சுருட்டி விரித்து மடக்கி

நமக்கு 

வாழ்க்கையின் பசும்புல் பனித்துளிகளை

மாலையாக கோர்த்து தந்து

களிப்பூட்டியது தான்

இன்னும் இன்னும் நினைவுக்குளியலாய்

இருக்கிறது.

நம் சொத்து

இந்த நினைவுகள் மட்டுமே.

தம்பி நீ

என் கனவு அல்ல.

என் நனவு அல்ல.

நிழலும் அல்ல.

நிஜமும் அல்ல.

இந்த கால‌த்தின் குமிழிகள்

நம்மை ஏமாற்றமுடியாது.

நீ நான் என்ற இலக்கண பிம்பங்கள்

உடைந்த‌

அன்பின் உள்ளுணர்வு மட்டுமே

இப்போது நம்மிடம்.


அன்புடன் உன் அண்ணன்

இசக்கி பரமசிவன்.


___________________________________________________

2023-07-01

விரட்டிக்கொண்டிருக்கிறது.

 விரட்டிக்கொண்டிருக்கிறது

________________________________________________

சேயோன்.

 

கோழி சாப்ஸ் சால்னாக்கடையோர‌

குப்பைகளாய்

பிய்த்துப்போட்ட‌

அந்த கோழிச்சிறகுகளின் 

பதிவுகளும் பின்னூட்டங்களும்

மலிந்து போன‌

முகநூல் தேசங்கள்

எங்கும் எங்கும்.

போதாதற்கு செயற்கை மூளையின்

காக்காய் வலிப்பு நியூரோன்களின்

குவியல்களில்

இங்கு எல்லாமே மூழ்கிக்கிடக்கிறது.

இதில் மில்டனினின் 

பாரடைஸ் லாஸ்டை எங்கே தேட.

அந்த சாட்போட்டிடம் தான்

அதை விமர்சிக்கச்சொல்லிக்கேட்டேன்.

முழுக்கவிதையை அது 

ஒப்புவித்து விட்டு

பிதாவின் பரமண்டலத்தை

அருமையான சோப்புக்குமிழிகளாய்

ஆழமான அர்த்தங்களையும்

வெண்ணெய் தடவிக்கொடுத்தது.

உன் உள்ளத்தைப்போன்ற‌

அழகிய வேலைப்பாடுகள் அமைந்த

கல்லறை உனக்கு

வேறு எங்கும் இல்லை.

ஆம்

நீ வாழ்ந்து கோண்டே

அதில் சமாதி ஆகிக்கொள்.

இந்த பரமண்டலத்தையும் அக மண்டலத்தையும்

உன் சிந்தனையின் கூரிய விரல்களின்

தடவல் எனும் ப்ரெய்லி மொழியில்

எல்லாம் அறிந்து விடு.

மிச்சமே இல்லாமல் எல்லாவற்றையும் 

அறிந்து கொள்.

சைத்தானும் தேவனும் 

இந்த வார்த்தைகளை உனக்கு

வடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

அந்த ஏ ஐ யின் திறன் ஆய்வு

ஏதோ ஒரு நீண்ட பிசாசுவின்

மூச்சுத்துடிப்புகளாய்...

ஆம்

என்னை விரட்டி விரட்டி அடிக்கிறது.

எல்லா புராணங்களும் கடவுள்களும்

உனக்கு இப்படித்தான்

காக்டெயில் பிம்பங்களை

சுழற்றி சுழற்றிக்காட்டும்.

பாவ புண்ணிய நரக சொர்க்க‌

ஐஸ் துண்டுகள் அதில்

அழகாய் மிதந்து கொண்டிருக்கின்றன.

போதுமா?

போதுமா?

.........

போதுமா?

சேட் பாட் என்னை விரட்டிக்கொண்டிருக்கிறது.


__________________________________________________

சேயோன்.





அம்பாசமுத்திரத்திலிருந்து....

 அம்பாசமுத்திரத்திலிருந்து....

_________________________________________செங்கீரன்.


ஏன் பிறந்தாய் மகனே

என்று பாகப்பிரிவினையில் 

சிவாஜி பாடும் பாட்டை அன்று

அம்பாசமுத்திரம் கல்யாணி டாக்கீஸ்

எனும் ஓலைக்கொட்டகையில் 

பார்த்து கேட்டு உருகிய போது

சிவாஜியின் நடிப்பில் மட்டும் தான்

ஒன்றியிருந்தேன்.

ஆனால் இன்று

வயதுகளின் அம்பது அறுபது எழுபது

என்று பிலிம் ரீல்களின் ஓட்டம் 

கடைசிமுனை வரைக்கும்

பட படவென்று 

நுரை தள்ளிக்கொண்டிருக்கிறது.

இன்று அந்த தொட்டிலில்

கிடப்பது

மனிதக்குஞ்சு அல்ல‌

ஒரு யுகப்பிரளயம்

கையையும் காலையும் ஆட்டி

உதைத்துக்கொண்டிருப்பது போல்

ஒரு உணர்வு 

சவ்வுடு பரவலாய்

இறந்த காலத்தையும் பிறக்கப்போகும்

காலத்தையும் முடிச்சுப்போடுகிறது.

மக்கள் வெள்ளமாய் திரண்டு எழுந்து

எதோ ஒரு நிழலைபிடித்து

கையில் வைத்துக்கொண்டு

கணக்கு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மை நழுவி எங்கோ போய்விட்டது.

கடவுள்களை கழுவி கழுவி ஊற்றி

துடைத்து துடைத்துப்பார்த்துக்கொண்டே

இருக்கிறார்கள்.

உண்மை எப்போதோ கழுவேற்றப்பட்டுவிட்டது.

மனிதனுக்கும் அவன் மண்ணின் வாசனைக்கும்

சேர்த்தே 

அநீதியும் அதர்மமும் இழைக்கப்பட்டுக்கொண்டே

இருக்கின்றன.

சாதிகள் அடுக்கு அடுக்காய்

சீட்டுக்கட்டு போல் இருக்கின்றன.

ஒரு சீட்டு இன்னொரு சீட்டை வெட்டிக்கொண்டு

ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மதம் எனும் கொடூரமான பொய்மை

ரத்தம் சொட்ட சொட்ட‌

கண்ணுக்குத்தெரியாத அந்த வெட்டரிவாளை

ஓங்கி ஓங்கி வீசிக்கொண்டே இருக்கின்றது.

அறிவுக்கு முரணான

அறமே இல்லாத நடப்புகளை

மக்களின் மேல் பாரமேற்றி

அவர்கள் புழுக்களாய் நசுக்கப்படுகிறார்கள்.

அப்பட்டமான ஒரு அம்மணம் ஆதிக்கம் ஆகி

அங்கே கோலோச்சுகிறது.

அதோ இன்னும் அந்த‌

"ஏன் பிறந்தாய் மகனே" பாடல் தான்

தேய்ந்து மாய்ந்து தீனமாய் கேட்கிறது.

கனவுகளின் முரட்டுத்தனமான கொம்புமுனைகள்

அதோ கொஞ்சம் கொஞ்சமாய் சிலிர்க்கின்றன.

நீதியின் கூர்மை ஒரு கோரைப்பல் போல‌

அந்த துணித்தொட்டிலை கிழித்துக்கொண்டு

திமிறுகிறது.

தூண் மட்டும் அல்ல.துரும்பு மட்டும் மல்ல.

சாத்திரங்களின்

இந்த மயானப்புகை மண்டிய காற்றையும் கூட‌

அது பிளக்கிறது.

மின்னல் இழைகள் குடல்கள் போல‌

தொங்குகின்றன.

அங்கே எல்லாம் கிழிபடுகிறது.

அநீதி அரங்கேற்றங்களின் 

வெறும் ஏஜெண்டுகள் தான் நாங்கள் 

என்று அம்பலப்பட்டுப்போன‌

பிரகலாதன்கள் கூட

அங்கே நார் நாராய் கிழிபடுகிறார்கள்.

ஏன் பிறந்தாய் மகனே என்ற பாட்டு

நின்று விட்டது.

சிங்கங்களின் உறுமல்கள் 

அந்த தொட்டிலை கந்தலாக்கிக்கொண்டு

எரிமலைகளின் பூபாளங்களை

அங்கே மீட்டிக்கொண்டிருக்கின்றன.


______________________________________________________________