2023-07-01

அம்பாசமுத்திரத்திலிருந்து....

 அம்பாசமுத்திரத்திலிருந்து....

_________________________________________செங்கீரன்.


ஏன் பிறந்தாய் மகனே

என்று பாகப்பிரிவினையில் 

சிவாஜி பாடும் பாட்டை அன்று

அம்பாசமுத்திரம் கல்யாணி டாக்கீஸ்

எனும் ஓலைக்கொட்டகையில் 

பார்த்து கேட்டு உருகிய போது

சிவாஜியின் நடிப்பில் மட்டும் தான்

ஒன்றியிருந்தேன்.

ஆனால் இன்று

வயதுகளின் அம்பது அறுபது எழுபது

என்று பிலிம் ரீல்களின் ஓட்டம் 

கடைசிமுனை வரைக்கும்

பட படவென்று 

நுரை தள்ளிக்கொண்டிருக்கிறது.

இன்று அந்த தொட்டிலில்

கிடப்பது

மனிதக்குஞ்சு அல்ல‌

ஒரு யுகப்பிரளயம்

கையையும் காலையும் ஆட்டி

உதைத்துக்கொண்டிருப்பது போல்

ஒரு உணர்வு 

சவ்வுடு பரவலாய்

இறந்த காலத்தையும் பிறக்கப்போகும்

காலத்தையும் முடிச்சுப்போடுகிறது.

மக்கள் வெள்ளமாய் திரண்டு எழுந்து

எதோ ஒரு நிழலைபிடித்து

கையில் வைத்துக்கொண்டு

கணக்கு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மை நழுவி எங்கோ போய்விட்டது.

கடவுள்களை கழுவி கழுவி ஊற்றி

துடைத்து துடைத்துப்பார்த்துக்கொண்டே

இருக்கிறார்கள்.

உண்மை எப்போதோ கழுவேற்றப்பட்டுவிட்டது.

மனிதனுக்கும் அவன் மண்ணின் வாசனைக்கும்

சேர்த்தே 

அநீதியும் அதர்மமும் இழைக்கப்பட்டுக்கொண்டே

இருக்கின்றன.

சாதிகள் அடுக்கு அடுக்காய்

சீட்டுக்கட்டு போல் இருக்கின்றன.

ஒரு சீட்டு இன்னொரு சீட்டை வெட்டிக்கொண்டு

ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மதம் எனும் கொடூரமான பொய்மை

ரத்தம் சொட்ட சொட்ட‌

கண்ணுக்குத்தெரியாத அந்த வெட்டரிவாளை

ஓங்கி ஓங்கி வீசிக்கொண்டே இருக்கின்றது.

அறிவுக்கு முரணான

அறமே இல்லாத நடப்புகளை

மக்களின் மேல் பாரமேற்றி

அவர்கள் புழுக்களாய் நசுக்கப்படுகிறார்கள்.

அப்பட்டமான ஒரு அம்மணம் ஆதிக்கம் ஆகி

அங்கே கோலோச்சுகிறது.

அதோ இன்னும் அந்த‌

"ஏன் பிறந்தாய் மகனே" பாடல் தான்

தேய்ந்து மாய்ந்து தீனமாய் கேட்கிறது.

கனவுகளின் முரட்டுத்தனமான கொம்புமுனைகள்

அதோ கொஞ்சம் கொஞ்சமாய் சிலிர்க்கின்றன.

நீதியின் கூர்மை ஒரு கோரைப்பல் போல‌

அந்த துணித்தொட்டிலை கிழித்துக்கொண்டு

திமிறுகிறது.

தூண் மட்டும் அல்ல.துரும்பு மட்டும் மல்ல.

சாத்திரங்களின்

இந்த மயானப்புகை மண்டிய காற்றையும் கூட‌

அது பிளக்கிறது.

மின்னல் இழைகள் குடல்கள் போல‌

தொங்குகின்றன.

அங்கே எல்லாம் கிழிபடுகிறது.

அநீதி அரங்கேற்றங்களின் 

வெறும் ஏஜெண்டுகள் தான் நாங்கள் 

என்று அம்பலப்பட்டுப்போன‌

பிரகலாதன்கள் கூட

அங்கே நார் நாராய் கிழிபடுகிறார்கள்.

ஏன் பிறந்தாய் மகனே என்ற பாட்டு

நின்று விட்டது.

சிங்கங்களின் உறுமல்கள் 

அந்த தொட்டிலை கந்தலாக்கிக்கொண்டு

எரிமலைகளின் பூபாளங்களை

அங்கே மீட்டிக்கொண்டிருக்கின்றன.


______________________________________________________________


 



No comments: