2024-05-17

வார் ரூம்

வார் ரூம்

‍‍‍‍_____________________________________

கல்லாடன்

  


ஒரு முதுகெலும்பை

படைத்து வைத்துக் கொண்டு

நிமிர்ந்து நிற்பதாய்

டிங்கரிங் செய்து கொண்டிருக்கும்

முட்டாளே!

இப்போது பார்..

சைத்தான் கர்ஜித்தான்.

கடவுளை சவாலுக்கு அழைத்தான்.

மூளைக்குள் கடவுளாய் புகுந்து

பக்தியாய் சகதியாய் சாதிகளாய்

சாக்கடையாய் 

சிந்தனைகள் அற்ற 

முடை நாற்றமெடுத்த 

உலகம் ஆக்கினான்.

இறுதியில் நாடகம் முடிந்து

இருவரும் அந்த க்ரீன் ரூமுக்குள்

கை குலுக்கிக்கொண்டே

நுழைந்தார்கள்.

அறிவு கல்லறைக்குள் படுத்துக்கொண்டது.

மனிதம் மழுங்கிப்போனது.

மதம் தூவியது எங்கும்

மரணத்தின் விதைகளை.

______________________________________________


அகழ்நானூறு‍ 75"

 



அகழ்நானூறு‍  75"

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________________

சொற்கீரன்


(அகநானூறு பாடல் 186..புலவர் தெரியவில்லை)


கல்லூற்று கலித்தநீர் கவிழ்த்த கை

நீடு வாங்கி மருப்பு பொருதிற‌ங்கும்

மல்லல் மழகளிறு பிடி யுண்ண 

நீர் வார்க்கும் கற்சுரம் கனைகுரல்

தழல் சடை வெண்வெயில் ஞாயிற்றின்

நீடூழி முள்ளிய பரந்தலை ஒரு கண்

நிழல் பார்த்து ஏங்கி நடுக்குறும் ஆறும்

அடு கடாம் நீந்தல் யாவும் பொருட்டறன்று.

பொருள்வயின் தேட்டை பொரி பரல் இடற‌

பொலங்கிளர் அவள் முகத்து மைவிழி படுப்ப‌

ஓர்ந்து உய்த்து நீள் அத்தம் அவண் நண்ணி

வேனில் ஓதியும் நிறம் பெயர்த்து வெரீஇ

யாஅம் ஏறியபின் பாண்யாழ் ஆங்கு 

பாலை இன் பண் பனி இசைபருகிக்

கிடத்தலின் நயமும் நனி கண்டு ஏகும்

தலைவன் ஊரும் பொள்ளா வெள்ளிடை

அவள் செஞ்சீறடி பளிங்கின் தோற்றும்

கல்லென் ஆறும் அவன் களி கூட்டும்.


_________________________________________________________

மேட்ரிக்ஸ் (நிரல்கள்)

 




மேட்ரிக்ஸ்  (நிரல்கள்)

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________________

"கல்லாடன்"

‍‍‍‍‍‍‍

‍‍‍‍‍


ஒரு முட்டுச்சந்துக்குள்

நுழைந்து விட்டோமா?

செயற்க நுண்ணறிவு எனும் 

கூரிய முனை

குத்திக்கிழித்ததில்

அந்த "பிரம்மம்" எனும்

பேரண்டத்தின் பெரு அண்டம்

பிரசவித்து விட்டது.

அது பொய்மை எனும் மெய்மை

என்று புலப்படும் முன்

மனிதனின் ஆதிக்க வெறி

பல் வேறு தந்திரங்கள் கொண்டு

மூட முயல்கிறது.

ஆட்சி எந்திரங்களின்

கட கடத்த குரூர‌

பல் சக்கரங்களில்

அப்பாவித்தனமான‌

மனிதப்பூச்சிகள்

இரையாக்கப்படுகின்றன.

பல பல நூற்றாண்டுகளாய் 

ஊசிப்போன கருத்தோட்டங்களில்

தினம் தினம் சிலந்திவலைகள் 

பின்னப்படுகின்றன.

இங்கு நமது மூல‌

அறியல்களுக்கும்

அறிவீனங்களுக்கும்

மூலன் வியாசன் என்று தானே

சொல்லப்படுகிறது.

இந்த ஏ ஐ ஆயிரம் ஆயிரம் 

வியாசன்களை

படம் வரைந்து பாகம் குறித்துக்காட்டி

பிம்பங்களை கோடி கோடியாய்

குவித்து விடும் போலிருக்கிறதே.

இந்த கணினி யுகம்

முத்தி முத்தி 

மூக்கறுந்து போன‌

இவர்களின் கலியுகங்களின் 

எல்லாவற்றையும் கருச்சிதைய வைத்து

ஒரு புரட்சியின் 

விளிம்பில் நின்று கொண்டு

இன்னும் பல விளிம்புகளுக்கு போவேன்

என்றல்லவா

கொக்கரித்துக்கொண்டிருக்கிறது.

மூளை நியூரான்களுக்குள்

பயணித்து

கடவுள் எனும் அந்த‌

கானல் நீர்க்குதிரையை

செதில் செதிலாக 

செதுக்கி நமக்கு

டாய் ஸ்டோரி 

சொல்ல வந்து விட்டதே.

அறிவியல் கிளர்வின்

"மேட்ரிக்ஸ்" சரங்கள்

நிரல்களின்

மழை மழையாய் நம்

மொண்ணையான

மண் கோட்டைகளை எல்லாம்

அரித்துக்கொண்டு அடித்துக்கொண்டு

ஓடுகின்றன.

அறிவின்

மனிதம் கொண்டு சிந்திக்கும்

சமூகம் கொண்டு பிறப்பிக்கும்

நியாய சூரியன்களே இனி

இந்த இருட்டுப்பிண்டத்தை

கிழித்து

முளைத்து வரும்.


________________________________________________________









2024-05-12

அன்னையர் தினம்


அன்னையர் தினம்.


___________________________________________


ருத்ரா



என்னைக் கொண்டாட‌


இன்றைக்கு ஒரு தினம் மட்டும்


போதுமா?


மகளே


மகனே


ரீல்ஸில் ஆடி ஆடி


நிறைய லைக்குகள் அள்ளுவீர்களே


எனக்காக


அந்த கைபேசிச் சன்னல்களில் வரும்


சொர்க்கத்தினவுகள்


பலி கொடுக்கப்படுவதை


நான் விரும்பவே இல்லை.


அன்று என்றைக்கு உன்னை


மசக்கையில் ஓங்கரித்தேனோ


அந்த ஓங்காரம் தானே


என் பிரம்மம்.


இந்த வலி


பல கோடி வருடங்களாய் 


பின்னிய சங்கிலியில் செய்யப்பட்டது.


இதன் ஆதாரம் சேதாரம்


எல்லாமே இந்த "பொன் வலி" தான்.


இப்படி 


வலித்தும் அந்த வலியை மறைத்தும்


மாயம் செய்யும் 


பிரம்மையை போர்த்திக்கொண்டவளே


பெண் எனப்பட்டவள்.


பொன்னே!மணியே!


என்று நான் ஒலிப்பதெல்லாம்


எந்த அட்சைய த்ரிதியைகளின்


விளம்பர தூசி துரும்புகளாலும்


மாசு பட முடியாதது.


கண்ணே!


உன்னை பிரசவித்து வலித்து


அதை அரங்கேற்றும் காட்சிகள் 


இருக்கட்டும்.


ஆனால் 


உன்னைப் பிறக்காமலேயே


தத்து எடுத்ததையே


உன்னைப் பிறப்பித்ததாய்


புல்லரித்து 


அன்பின் பிழம்பாய் தன் மீது 


பூசிக்கொண்டு...அப்புறம்


ஒரு பிரிவின் போது


துடி துடித்துக்கதறும்


"பானுமதி" அவர்களின் "அன்னை" அவதாரம்


நடிப்பு என்று


கொச்சைப்படுத்தப்படுவதே


வலிகளுக்குள் பொறுக்க முடியாத‌


வலியாகும்.


ஒரு உண்மையான 


அன்னையர் தினம்


அந்த சினிமாக்காட்சி ஒன்றே


என்றென்றைக்கும் 


போதும்!


ஒரு அன்னை


த‌ன் குழந்தைக்காக தவிக்கும்


தவிப்பை விட‌


பிறர் குழந்தையை தன் குழந்தையாய்


நினைத்து தவிக்கும் தாயின் தவிப்பு 


ஆயிரம் கோவில்களுக்கு சமம்!


_______________________________________________

2024-05-11

மகனே...

 



மனிதனே

என்று

கடவுள் முணுமுணுப்போடு

அரை மனதாய் கூப்பிட்டார்.

மனிதனின் கூகிள்முன்

அவரது மழுவாயுதம் சூலாயுதம்

எல்லாம்

மடங்கிக்கொள்ளுமே

என்ற தயக்கம் தான்.

இருப்பினும்

அவர் தானே கோடி கோடி

பிரபஞ்சங்களின் கரு.

பரவாயில்லை இந்த விளையாட்டு யுத்தம்

என்று

மெல்லிதாய் "மகனே" என்றார்.

இப்போது தான்

அந்த ஜெல்லி போர்த்த கூகிள்குழம்பு

அவருக்கு வழி விட்டது.

நுழைந்து விட்டார்

நுங்கு போல் குழைந்து கிடக்கும்

அந்த மனிதனின் முரட்டுப்பாறைக்குள்.

மகனே

உன்னிடம் கேட்கிறேன்

அந்த ஞானப்பழத்தை என்னிடம் 

கொடுத்து விடு.

உன் சிந்தனைகளால்

உன் அறிவுக்கூர்மையால் 

எச்சில் படுத்தப்பட்டதைக் கேட்கிறேன்.

மனிதனை மனிதனாகவே படைக்க‌

உன் "அல்காரிதங்களை"க்கொண்டு

அலங்காரம் செய்யப்பட்ட 

அந்த‌

ஞானப்பழத்தையே கேட்கிறேன்.


______________________________________________________



ஞானப்பழத்தை...

 



மனிதனே


என்று


கடவுள் முணுமுணுப்போடு


அரை மனதாய் கூப்பிட்டார்.


மனிதனின் கூகிள்முன்


அவரது மழுவாயுதம் சூலாயுதம்


எல்லாம்


மடங்கிக்கொள்ளுமே


என்ற தயக்கம் தான்.


இருப்பினும்


அவர் தானே கோடி கோடி


பிரபஞ்சங்களின் கரு.


பரவாயில்லை இந்த விளையாட்டு யுத்தம்


என்று


மெல்லிதாய் "மகனே" என்றார்.


இப்போது தான்


அந்த ஜெல்லி போர்த்த கூகிள்குழம்பு


அவருக்கு வழி விட்டது.


நுழைந்து விட்டார்


நுங்கு போல் குழைந்து கிடக்கும்


அந்த மனிதனின் முரட்டுப்பாறைக்குள்.


மகனே


உன்னிடம் கேட்கிறேன்


என் ஞானப்பழத்தை என்னிடம் 


கொடுத்து விடு.


கடவுள் குழைந்தார் கெஞ்சினார்.


சரி வாங்கிக்கொள்ளுங்கள்.


டேடா சையன்ஸ் டிகிரி ஏதாவது


வைத்திருக்கிறீர்களா?


அப்படியென்றால்....


அப்போது தான் சாட் ஜி பி டி..ஏ ஐ


எல்லாம் புரியும்.


கடவுளுக்கு மிஞ்சியா கம்பியூட்டர்கள்?



முணு முணுப்பு வாதிகள்


மூச்சடைத்துப்போய் தான் நிற்கிறார்கள்.


கடவுளின் நரம்பு முடிச்சுகள் எல்லாம்


பை க்யூபிட் கேட்களில்


ஃபூரியர் உருமாற்றங்களில் 


கோர்த்துக்கிடப்பது வியப்பு அலைகளில்


விரிந்து கிடக்கிறது.


இருப்பினும்


பிள்ளை விளையாட்டு 


தொடர்ந்தது...


தொடர்கிறது...


தொடர்ந்து கொண்டிருக்கிறது...


சாதி மத சாக்கடைக்குள் 


சப்பளாக்கட்டைகள் வீழ்ந்து கிடக்கின்றன.


"பொன்னார் மேனியனே...


புலித்தோலை அரைக்கசைத்து..."


இசைப்பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறது.


_____________________________________________________________‍



தூங்கப்போனார்...

 தூங்கப்போனார்...

_______________________________________

ருத்ரா



என்ன‌

என்னைக்

கண்டு பிடித்து விட்டாயா இல்லையா?

இன்னும் இல்லை.

உனக்கு ஆயிரம் பெயர் சூட்டி

அழகு பார்ப்பதிலேயே

எல்லாம் முடிந்து விட்டது

என்று 

பிரசாதம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

அப்படியா?

அந்த பிரசாதம் தான் என்ன என்றாவது

தெரிந்து கொண்டாயா?

அதைப்பற்றி என்ன?

எல்லாம் 

சர்க்கரைப்பொங்கலும் புளியோதரையுமாய்

ருசிக்கத்தானே செய்கிறது!

சரி சரி..

என்னைக்கண்டு பிடித்து விட்டாயா

இல்லையா?

அதற்குள் 

அவர் ஸ்லோகங்களால்

திணறடிக்க ஆரம்பித்து விட்டார்.

தன்னைப்பற்றி 

தானே இன்னும் 

ஒரு கணித சமன்பாட்டுக்குள்

வர முடியவில்லையே

என்ற ஏக்கமே

அந்த "எம்பெருமானுக்கு".

அர்ச்சனைச்சீட்டுக்குள் அடங்கி

கோத்திரங்களுக்குள்

சுருங்கிக்கிடக்கிறார்கள்

இந்த "ஜனங்கள்" என்ற‌

ஒரு கவலை மட்டுமே கடவுளுக்கு.

நாமக்கல் நாமகிரித்தாயார் மூலம்

அந்த 

புள்ளாண்டன் ராமானுஜனுக்கு

ஆயிரக்கணக்காய் ஓதிய‌

கணக்குத்தேற்றங்களுக்கு

உலகத்து கணித விஞ்ஞானிகளும்

மோடுலர் ஃபார்ம்

என்று ஒரு துப்பு கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இந்த சுண்டல்வாதிகள் இருக்கட்டும்

அந்த அறிவு தளும்பிய மெண்டல் வாதிகள்

நிச்சயம் 

என்னைக்கண்டுபிடித்துவிடுவார்கள்.

ராமானுஜனின்

மாக் தீட்டா ஃபன்க்ஷன் எனும் நூலேணியில் 

அவர்கள் ஏறத்துவங்கி விட்டார்கள்.

அவர்கள் வழி தனி வழி.

என்னை இல்லைவே இல்லை

என்று சாதித்து தான் 

என்னை அடையாளப்படுத்துவார்கள்.

அறிவின் அடையாளமே

கற்பனை அடையாளங்களையெல்லாம்

அழித்து புறந்தள்ளி

உண்மைக்குள் புகுவது தானே.

இவர்கள் புளுகி புளுகி

புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கட்டும்.

எனக்கு அவர்களே கடவுள்.

நிச்சயம் என்னை அவர்களின் கோயில் உள்ளே

ஒளி கூட்டி உட்கார்த்தி வைத்து

இந்த இருட்டுப்பிண்டங்களிலிருந்து

விடுவித்து விடுவார்கள்.

கடவுள் நிம்மதியாகத்

தூங்கப்போனார்.


________________________________________________________________





2024-05-10

பொறி

பொறி
----------------------------------------------

நாள் என ஒன்று போல் காட்டி
உயிர் ஈரும் 
வாள் மீது தான்
உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.
திமிங்கிலத்தின் முதுகின் மீதே
குட்டித்தீவு என்று
டூர் போய்க் கொண்டிருக்கிறோம்.
அதெல்லாம் சரி.
தேர்தல் காலத்தில்
உங்களுக்கு எச்சில் ஊற வைத்து
இனம் தெரியாத 
ஒரு மசால்வடையைச் செருகி
உங்களைக் கவ்விப் பிடிக்கும்
அந்த  எலிப்பொறி தான்
உலகத்து நவீன கணிப்பொறி
என்று
பட்டன் தட்டிக் கொண்ருக்கிறீர்களே
எப்போது
விழித்துக்கொள்ளப் போகிறீர்கள்?
---------------------------------------------
ருத்ரா.

டாஸ்மாக்

 

டாஸ்மாக்

____________________________________________

செங்கீரன்



தமிழனே!

நீ இப்படி நுரைத்து நொதித்து

பாட்டிலுக்குள்

கல்லறை கட்டிக்கொண்டிருப்பதே

போதும் 

என்று கிடந்தால்

அந்த வடவன் 

சிந்துபாத் கிழவனாக‌

உன் தோள்மீது 

சவாரி செய்து கொண்டிருக்கும்

அவலத்தை 

எப்போது உணரப்போகிறாய்.

நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய்

"வெள்ளைக்காலர்" யுகத்துக்கு

பரிணாமம் அடைந்து கொண்டிருக்கிறாய்

என்று.

வெற்றுத்தமிழ் பேசும்

பல்கலைக்கழகத் தாழ்வாரங்கள்

தமிழை உலகம் போற்ற வைக்கும் 

பணியில் 

இன்னும் தொய்ந்து தான் கிடக்கின்றன.

உன் 

நரம்புக்கணுக்களில்

தமிழ் தான் 

எரிமலைக்குழம்பை

பாய்ச்சிக்கொண்டிருக்க வேண்டும்.

நீயோ

குத்தாட்டக்குப்பைகளிலும்

சினிமா மாயையின்

காக்காவலிப்பு நுரைதள்ளும் 

மூடச்சீற்றங்களிலும் தான்

முடங்கிக்கிடக்கிறாய்.

உன் உயிர் மூச்சில்

தமிழின் மின்சாரம் பாய்ந்து

கொண்டிருக்கவேண்டும்.

வடவனின் சூழ்ச்சிச்சாக்கடைகள்

உன்னை

மத போதைகளின் 

ஆபாசக்கிடங்குகளில்

தள்ளிவிடும் முன்

ஓ தமிழா!

வீறு கொண்டு எழு!

தமிழ் 

வாழ்க வாழ்க வாழ்கவே!

___________________________________________


2024-05-09

சோம்னாம்புலிசம்

 சோம்னாம்புலிசம்

_________________________________________

ருத்ரா.


தூக்கத்தில் நடக்கின்ற 

வியாதி தான்

நமக்கு.

எழுபத்திஐந்து சொச்சம் வருடமாய்

அலைந்து திரிந்தும் 

தூங்குகின்றோம்.

அடிமாடுகளாய் அந்த‌

நாலுவர்ணத்தை

மூணு வர்ணமென்று

அசைபோட்டு அசை போட்டு

தூங்கிக்கொண்டு தான் இருக்கிறோம்.

அடிமைத்தனம் கெட்டியான

விலங்குகளை 

சுதந்திரம் என்று

அர்த்தம் எழுதி எழுதி

தூங்கிக்கொண்டு தான் இருக்கிறோம்.

கடவுள் கைநிறைய வைத்திருக்கும்

அபினிப்புராணங்களில்

அமிழ்ந்து கிடந்து

தூங்கிக்கொண்டிருக்கிறோம்.

மனிதனுக்கு மனிதன் 

வாழ்வதற்கு கிடைக்கும் 

உரிமைகள் எல்லாம்

கந்தல்களாய் கிடக்கும் 

கனவுச்சதைகளில் போர்த்துக்கொண்டு

தூங்கிக்கொண்டு தான் 

இருக்கிறோம்.

ஓட்டு எந்திரம் 

நம்மையே பட்டன்கள் ஆக்கி

அமுக்கிக்கொண்டிருக்கும்

ஓர்மையும் இன்றி

கூர்மை மழுங்கிப்போன‌

சமூகநீதிகளால்

அடைபட்டு 

ஆனாலும் தூங்கிக்கொண்டிருக்கிறோம்.

கனவில் கழுவேற்றப்படுகிறோம்.

நனவில் பிய்ந்து கிடக்கிறோம்.

ஆனாலும்

தூங்கிக்கொண்டு தான் இருக்கிறோம்

துருப்பிடித்த நூற்றாண்டுகளின்

வரலாற்று ரணங்களோடு...


_______________________________________________


2024-05-08

"கல்பொரு சிறுநுரை..."

"கல்பொரு சிறுநுரை..." _____________________________ கல்லாடன் அந்த பெருமூதாட்டி நரம்பு விடைத்து எலும்பு துறுத்தி நடைபாதையில் சுருண்டுகிடந்தாள். அருகில் போய் கேட்டதில் சொன்னாள் என் கூடு சிதைந்து போனது. எல்லாம் போனபின் இங்கு தான் என் குறிஞ்சி முல்லை மருத நெய்தல் பாலைத்திணைகள் எல்லாம்.. இவ்வளவு மூச்சும் ஒலியும் சங்கத்திணைகளா? வியப்புற்று வினவினேன். தமிழ் ஆசிரியையாய் இருந்து "ஓய்வு"பெற்றும் அவள் வாழ்க்கை இங்கே கொண்டு வந்து விரட்டியிருக்கிறது. பாட்டி என அழைக்க முனைந்த போதும் அவரை அம்மையே என்று விளித்துக்கேட்டேன். கன்னித்தமிழ் என்றாலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு ஆன‌ கிழவித்தமிழ் தானே.. அவர் குரல் சீறியது. கிழமை என்பது உரிமையின் கனல். இந்த மண்ணின் கிழவிக்கு இன்னும் கருப்பையில் நெருப்பை மூட்டிக்கொண்டிருப்பது அவள் "பகுதி விகுதி" உரிந்த‌ சொற்கூட்டமே. அந்த சொற்கூட்டம் இன்னும் ஆயிரமாயிரம் சூரியப்பிஞ்சுகளை தூவிக்கொண்டிருப்பது உனக்குத்தெரியுமா? எந்த சொற்கள் அம்மையே? ..கல்பொரு சிறுநுரை... அவள் கண் குழியிலிருந்து காலம் முழுதும் அவிந்து போன‌ ஒரு மூளி ஒலிப்பிழம்பிலிருந்து தேனின் மெல்லருவி கசிந்து கொண்டிருந்தது. _________________________________

2024-05-07

சுஜாதாவின் விசைப்பலகை

 



சுஜாதாவின் விசைப்பலகை


______________________________________________ருத்ரா






சுஜாதாவின் "யாகம்"

________________________________



"என் கையைப் பின்பக்கத்தில் கட்டினாள்."அழைத்துச் செல்லுங்கள்" என்றாள்.


ஆறு பேர் என்னை நெருங்கினார்கள்."






சுஜாதாவின் "யாகம்" சிறுகதை இப்படி முடிகிறது.




அப்புறம் நம் விஷுவலைசேஷனில்


எல்லாம் தெரிகிறது.


எல்லாம் புரிகிறது.


ஒரு வீட்டுக்கு ஒருவனை பலிகொடு.


ஒரு ஊருக்கு நாலு பேரை பலிகொடு.


ஒரு நாட்டுக்கு


ஆயிரம் ஆயிரமாய் பலி கொடு.


பிரம்மம் எனும் ஆர்கசம் எனும் பேரின்பம்


அப்போது தான் உச்சம் பெரும்.


வேத ஸ்லோகங்களின் 


அடி அமிலம் 


இப்படித்தான் 


மனிதனோடு சேர்த்து 


சமூகத்தை எரிக்கிறது.


எரிக்கிறதை


புனிதமாகச்சொன்னால் "யாகம் அல்லது யக்ஞம்".


கோத்ராவும் புல்வாமாவும்


அப்படித்தான் என்று


பத்திரிகைகள் எழுதலாம்.


வேதங்கள் காற்றின் ஒலிகள்.


அது மனித நாக்குகளில் வருடப்படும்போதே


அபவுர்ஷம் என்பதிலிருந்து


புருஷம் ஆகி தீட்டு ஆகிவிடுகிறது.


அப்புறம் எதற்கு இந்த‌


புருஷ சூக்தங்களும்


வர்ணாசிரமங்களும்?


சுஜாதா 


(அவர் பூணூலில் இருந்தால்)


இப்படி எழுதுவது


ஒரு எழுத்தின் நேர்மையின் நெருப்பாகத்தான்


இருப்பதாக நமக்கெல்லாம்


சிலிர்க்கிறது.


ஆரியம் திராவிடம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்


இன்னும் வடமொழிகளும் கூட‌


ஃபிஸிக்ஸின் "க்ராண்ட் யுனிஃபிகேஷன்" போல்


ஒரு புள்ளியில் நிலைகுத்துகிற வேலையை 


சுஜாதா அவர்கள் செய்திருப்பார்.


இப்போதும் கணிமொழிக்குள்


தமிழின் ஒரு சங்கப்பலகையை


தோண்டியெடுக்கும் தமிழ் அறிவு ஜீவிகள்


செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


சுஜாதாவின் எழுத்துக்குள்


நம் தமிழ் தொன்மையின் ஃபாசில்கள் கூட‌


உறங்கிக்கொண்டிருக்கலாம்.


வேதத்தை அகழ்வாராய்ச்சி செய்தால்


தமிழ் எனும் அந்த ராட்சச டினோசார்களின்


எலும்பு மிச்சங்கள் கிடைக்கலாம்.


பக்கங்களை சேர்த்துக்கொண்டே


கடைசி அட்டைக்கு காத்திருக்காமல்


ஆயிரம் ஆயிரம் பக்கங்களை 


அடுக்கிக்கொண்டே போகும்


அசுர புத்தகம் சுஜாதா.


அத்தனையிலும் அறிவுத்தேனின் 


இனிப்புகள் பிலிற்றும்


இன்ப அனுபவங்கள்.


அவர் எழுத்துக்களுக்குள் நுழைந்து


ஒரு ஹிக்ஸ் போசானின்


செக்ஸ் கலைடோஸ்கோப்பை


அதாவது 


("கப்ளிங்க் கான்ஸ்டன்ட்டும்


ஃபெய்ன்மன் டையாகிராம்ஸ்ம்")


சுழற்றி சுழற்றி


படித்துப்பார்க்க ஆசை.


சுஜாதாவின் விசைப்பலகைக்கு


பல கைகள் உண்டு.




____________________________________________________________________

2024-05-04

அகழ்நானூறு-71

 அகழ்நானூறு 71

-------------------------------------

சொற்கீரன்.



எல்வளை ஊர்தரு 

மெலி இறை நோக்கி

பீலி பெய் வருடல்

பொய் மழை தூஉய்

அவன் வரல் எதிர்க்கும்