தூங்கப்போனார்...
_______________________________________
ருத்ரா
என்ன
என்னைக்
கண்டு பிடித்து விட்டாயா இல்லையா?
இன்னும் இல்லை.
உனக்கு ஆயிரம் பெயர் சூட்டி
அழகு பார்ப்பதிலேயே
எல்லாம் முடிந்து விட்டது
என்று
பிரசாதம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
அப்படியா?
அந்த பிரசாதம் தான் என்ன என்றாவது
தெரிந்து கொண்டாயா?
அதைப்பற்றி என்ன?
எல்லாம்
சர்க்கரைப்பொங்கலும் புளியோதரையுமாய்
ருசிக்கத்தானே செய்கிறது!
சரி சரி..
என்னைக்கண்டு பிடித்து விட்டாயா
இல்லையா?
அதற்குள்
அவர் ஸ்லோகங்களால்
திணறடிக்க ஆரம்பித்து விட்டார்.
தன்னைப்பற்றி
தானே இன்னும்
ஒரு கணித சமன்பாட்டுக்குள்
வர முடியவில்லையே
என்ற ஏக்கமே
அந்த "எம்பெருமானுக்கு".
அர்ச்சனைச்சீட்டுக்குள் அடங்கி
கோத்திரங்களுக்குள்
சுருங்கிக்கிடக்கிறார்கள்
இந்த "ஜனங்கள்" என்ற
ஒரு கவலை மட்டுமே கடவுளுக்கு.
நாமக்கல் நாமகிரித்தாயார் மூலம்
அந்த
புள்ளாண்டன் ராமானுஜனுக்கு
ஆயிரக்கணக்காய் ஓதிய
கணக்குத்தேற்றங்களுக்கு
உலகத்து கணித விஞ்ஞானிகளும்
மோடுலர் ஃபார்ம்
என்று ஒரு துப்பு கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இந்த சுண்டல்வாதிகள் இருக்கட்டும்
அந்த அறிவு தளும்பிய மெண்டல் வாதிகள்
நிச்சயம்
என்னைக்கண்டுபிடித்துவிடுவார்கள்.
ராமானுஜனின்
மாக் தீட்டா ஃபன்க்ஷன் எனும் நூலேணியில்
அவர்கள் ஏறத்துவங்கி விட்டார்கள்.
அவர்கள் வழி தனி வழி.
என்னை இல்லைவே இல்லை
என்று சாதித்து தான்
என்னை அடையாளப்படுத்துவார்கள்.
அறிவின் அடையாளமே
கற்பனை அடையாளங்களையெல்லாம்
அழித்து புறந்தள்ளி
உண்மைக்குள் புகுவது தானே.
இவர்கள் புளுகி புளுகி
புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கட்டும்.
எனக்கு அவர்களே கடவுள்.
நிச்சயம் என்னை அவர்களின் கோயில் உள்ளே
ஒளி கூட்டி உட்கார்த்தி வைத்து
இந்த இருட்டுப்பிண்டங்களிலிருந்து
விடுவித்து விடுவார்கள்.
கடவுள் நிம்மதியாகத்
தூங்கப்போனார்.
________________________________________________________________
No comments:
Post a Comment