மனிதனே
என்று
கடவுள் முணுமுணுப்போடு
அரை மனதாய் கூப்பிட்டார்.
மனிதனின் கூகிள்முன்
அவரது மழுவாயுதம் சூலாயுதம்
எல்லாம்
மடங்கிக்கொள்ளுமே
என்ற தயக்கம் தான்.
இருப்பினும்
அவர் தானே கோடி கோடி
பிரபஞ்சங்களின் கரு.
பரவாயில்லை இந்த விளையாட்டு யுத்தம்
என்று
மெல்லிதாய் "மகனே" என்றார்.
இப்போது தான்
அந்த ஜெல்லி போர்த்த கூகிள்குழம்பு
அவருக்கு வழி விட்டது.
நுழைந்து விட்டார்
நுங்கு போல் குழைந்து கிடக்கும்
அந்த மனிதனின் முரட்டுப்பாறைக்குள்.
மகனே
உன்னிடம் கேட்கிறேன்
என் ஞானப்பழத்தை என்னிடம்
கொடுத்து விடு.
கடவுள் குழைந்தார் கெஞ்சினார்.
சரி வாங்கிக்கொள்ளுங்கள்.
டேடா சையன்ஸ் டிகிரி ஏதாவது
வைத்திருக்கிறீர்களா?
அப்படியென்றால்....
அப்போது தான் சாட் ஜி பி டி..ஏ ஐ
எல்லாம் புரியும்.
கடவுளுக்கு மிஞ்சியா கம்பியூட்டர்கள்?
முணு முணுப்பு வாதிகள்
மூச்சடைத்துப்போய் தான் நிற்கிறார்கள்.
கடவுளின் நரம்பு முடிச்சுகள் எல்லாம்
பை க்யூபிட் கேட்களில்
ஃபூரியர் உருமாற்றங்களில்
கோர்த்துக்கிடப்பது வியப்பு அலைகளில்
விரிந்து கிடக்கிறது.
இருப்பினும்
பிள்ளை விளையாட்டு
தொடர்ந்தது...
தொடர்கிறது...
தொடர்ந்து கொண்டிருக்கிறது...
சாதி மத சாக்கடைக்குள்
சப்பளாக்கட்டைகள் வீழ்ந்து கிடக்கின்றன.
"பொன்னார் மேனியனே...
புலித்தோலை அரைக்கசைத்து..."
இசைப்பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறது.
_____________________________________________________________
No comments:
Post a Comment