ஒன்றுமில்லை
______________________________________________
கல்லாடன்.
விரீர் என்று
வீடு திறந்து கிடந்தது.
நாள் பட்ட தூசிகளின் படலம்
ஏதோ ஒரு அழுக்கு கம்பளம்
விரித்தாற்போல் கட்டி தட்டியிருந்தது.
பொருட்கள் வைத்தது வைத்தபடியே
இருந்தன.
அப்போது தான் ஹேங்கரில் மாட்டிய
சட்டை சரியாக மாட்டாமல்
ஒரு பிணம் போல் தொங்கிக்கிடந்தது.
ஒலி அடங்கிய வீட்டில்
இனம் தெரியாத செவிப்புலன்கள் நழுவிய
கிரீச்சுகள் கேட்டன.
சுவர்க்கோழிகளும் கூப்பிட்டன.
யாரும் வீட்டில் இல்லை.
மவுனம் என்ற அரக்கன்
மவுனமாக அந்த சோபாவில்
உட்கார்ந்தது போல் இருந்தது.
பீரோக்கள் கூட திறக்கப்படவில்லை.
உடைக்கப்படவில்லை.
அந்த குடும்பத்தவர்களின்
புகைப்படங்கள் சுவர் முழுவதும்
அப்பிக்கிடந்தன.
எல்லோரும் அங்கே கூடி அமர்ந்து
சள சளப்பது போல்
ஒரு பிம்பம் அல்லது நிழல்.
புழக்கடைக் கதவுகளும் திறந்தே கிடந்தன.
படுக்கை அறையில்
தலையணைகள் மட்டுமே
கட்டிப்புரண்டு கிடந்தன.
சன்னல்கள் இமைவிரிய
முண்டைக்கண் துருத்தி
எட்டிப்பார்ப்பது போல்
திறந்தே கிடந்தன.
நாலைந்து ஊசிக்குருவிகள்
சிரிச் சிரிச் என்று
ஒரு இனிமையை
இசை அமைத்துக் கொண்டிருந்தன.
காய்கறிகள் இறைந்து கிடந்தன.
அரிசி டப்பா சீனி பாட்டில்
காப்பிப் பொடி பாட்டில் எல்லாம்
மவுனமாய்
கொலு வைத்துக்கொண்டிருந்தன.
கிருஷ்ணன்
மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு
கோபிகைகளின் புடவைகளை
சுருட்டி வைத்துக்கொள்ள
கோபிகைகள் நீர் மட்டத்தில்
அமிழ்ந்தும் அமிழாமலும்
கைகள் உயர்த்திய படியே
ஆனால் ஒரு நிசப்தமான
நிலையில் நின்று கொண்டிருப்பதாய்
ரவிவர்மா வரைந்திருப்பாரே
அது தான்
அங்கே உருவெளித்தோற்றம்
காட்டியது.
ஒரு சர்வாதிகாரம்
இப்படித்தான்
ஜனநாயகத்தை
சுருட்டி வைத்துக் கொண்டு
போக்கு காட்டுமோ?
என்ன நடந்தது?
அந்த வீட்டில்.
அருகில் விசாரித்ததில் ஒன்றுமே
தெரியவில்லை.
ஆனால்
மனிதம் எனும் மாண்பு
அங்கு தோலுரிந்து துகிலுரிந்து
எல்லாம் இழந்து ஒரு கொடூரத்தீயை
எரிய விட்டுக்கொண்டிருக்கிறது
என்பது மட்டும்
கிராஃபிக்ஸாய்
காட்டிக்கொண்டே இருக்கிறது.
எல்லாம் முடிந்த காட்சியா?
இனிமேல் தான்
எல்லாம் துவங்கப்போகிறது
என்ற காட்சியா?
அரசியல் வக்கிரங்கள்
என்னென்னவோ "ஹோலோ கிராஃபிக்ஸ்"
காட்டலாம்.
போகட்டும்.
ஒன்றுமில்லை.
அங்கே ஏலியன்கள் இருக்கின்றன
என்று சொல்லிக்கொள்வோம்.
___________________________________________________________
No comments:
Post a Comment