"கல்பொரு சிறுநுரை..."
_____________________________
கல்லாடன்
அந்த பெருமூதாட்டி
நரம்பு விடைத்து
எலும்பு துறுத்தி
நடைபாதையில்
சுருண்டுகிடந்தாள்.
அருகில் போய் கேட்டதில்
சொன்னாள்
என் கூடு சிதைந்து
போனது.
எல்லாம் போனபின்
இங்கு தான்
என்
குறிஞ்சி முல்லை மருத நெய்தல்
பாலைத்திணைகள் எல்லாம்..
இவ்வளவு மூச்சும் ஒலியும்
சங்கத்திணைகளா?
வியப்புற்று வினவினேன்.
தமிழ் ஆசிரியையாய் இருந்து
"ஓய்வு"பெற்றும்
அவள் வாழ்க்கை இங்கே
கொண்டு வந்து விரட்டியிருக்கிறது.
பாட்டி என அழைக்க முனைந்த போதும்
அவரை
அம்மையே என்று விளித்துக்கேட்டேன்.
கன்னித்தமிழ் என்றாலும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டு ஆன
கிழவித்தமிழ் தானே..
அவர் குரல் சீறியது.
கிழமை என்பது உரிமையின் கனல்.
இந்த மண்ணின் கிழவிக்கு
இன்னும் கருப்பையில் நெருப்பை
மூட்டிக்கொண்டிருப்பது
அவள் "பகுதி விகுதி" உரிந்த
சொற்கூட்டமே.
அந்த சொற்கூட்டம்
இன்னும் ஆயிரமாயிரம்
சூரியப்பிஞ்சுகளை
தூவிக்கொண்டிருப்பது
உனக்குத்தெரியுமா?
எந்த சொற்கள் அம்மையே?
..கல்பொரு சிறுநுரை...
அவள் கண் குழியிலிருந்து
காலம் முழுதும் அவிந்து போன
ஒரு மூளி ஒலிப்பிழம்பிலிருந்து
தேனின் மெல்லருவி
கசிந்து கொண்டிருந்தது.
_________________________________
No comments:
Post a Comment