2024-05-30

மான் தோலை விட்டு ....

 தியானம்

__________________________________________

கல்லாடன்.


கண்ணை மூடிக்கொண்டாய்.

மூக்குத்துளைகளை

விரற்பிடிக்குள்

பிடித்து பிடித்து

வீணை மீட்டினாய்.

ஏதோ குண்டலினி அண்டலினி என்று

ஸ்லோகங்களை அடுக்கிக்கொண்டு

சிதைகளை அடுக்கிக்கொள்ளாமல்

ஒரு உள் தகனத்துக்கு

தயார் ஆகினாய்.

எங்கோ

பில்லியன் ஒளியாண்டுகள் தூரம்

தாண்டி நிற்கும்

அந்த பரஞ்சோதியைக்கூட‌

கொக்கிப்போட்டு

இழுத்துக்கொள்ளலாம் என்றெல்லாம்

சொற்பொழிவுகளை தயார் செய்து

எழுத்திக்கொடுத்த‌

அந்த பி ஹெச் டி காரர்களின்

காகிதங்களும் கையில் ரெடி தான்.

இதுவும் ஆத்மீகத்தின் 

ஒரு குவாண்டம் என்டாங்கில்மென்ட் தான்

என்று பரபரப்போடு கூறுவாய்.

வாயில் ஈ நுழைவது தெரியாமல்

கேட்பவர்கள் உறைந்து போவார்கள்.

சொற்களின் குடலையெல்லாம்

உருவியெடுத்து

பொய்மை மசாலாக்கள் சேர்த்து

அவதார ஆவேசங்களோடு

சுடச் சுட அப்புறம்

நீ பிதற்றும்

சொல்லாடல்களை

ஒத்திகை பார்க்கும்

உள் அரங்கக்கூடாரத்தில் மூடிக்கொண்டு

முனகிக்கொண்டிருக்கிறாய்

சத்தங்கள் எல்லாம் வெந்து அவிந்து போன‌

நிலையில்...

நீ என்ன சொல்ல வருகிறாய்?

நீ இன்னும் உன் ஓர்மைக்குள்

பிடித்துக்கொள்ளவே இல்லையே.

நான் இல்லை இல்லை என்று

எத்தனையோ முறைகள்

மவுனமாய் உனக்குச்சொல்லியும்

அந்த இல்லாத உண்மையை 

நீ இன்னும் 

தேடவே இல்லையே.

மீண்டும் மீண்டும்

பொய்மை வலை பின்னி

இந்த வெறுமையை பிடித்து விட்டேன்

என்று

பாஷ்யங்களின் எக்காளம் ஊதுவதற்கு

கன்னம் புடைத்து

கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தது போதும்.

முதலையிடம் கடன் வாங்கிய கண்ணீரை

முதலையிடமே கொடுத்து விட்டு

எழுந்து போ...

ஒரு கேளா ஒலி எனும் ஒரு அல்ட்ரா சானிக்ஸ்ல்

கடவுள் 

விரட்டியது உணர்ந்து

மான் தோலை விட்டு 

அவர் எழுந்துகொள்கிறார்.


________________________________________________________________




No comments: