வதம்
========================================
ருத்ரா
தீபாவளியன்று அதிகாலை.
வடை சட்டியும் அடுப்புமாய் அம்மா.
கொடுவாய் ஓட
பல்லுகில்லு தேய்க்காம
கால்கள் அடுப்படிப்பக்கம்
இழுத்தன.
மிச்சம் இருந்த என் கொட்டாவி
அங்கே என் முகத்தை
நசுக்கிக் காட்டியது.
அதைப்பார்த்த என் அம்மாவுக்கு
மத்தாப்பூ பிரகாசம்.
"வடை திங்கிரியா..இந்தா."
சுடச்சுட தட்டில்
உளுந்த வடை மிளகுக்கண் துருத்தி
என்னைப்பார்த்தது.
ஆமை வடை
முதுகு இப்படித்தான் ஆமைக்கு
சொர சொர என்று
பருப்பு முண்டு கட்டி இருப்பது போல்
இருக்கும் போலிருக்கிறது.
எத்தனை தின்றேன் என்று தெரியவில்லை.
அம்மாவுக்கு எடுத்த
புது பட்டுச்சேலை இன்னும்
விளக்குமுன்னாலேயே
வைக்கப்படவில்லை.
ஆனால்
இப்போதே புதுப்பட்டு
உடுத்தியது போல்
பொலிவாக சிரித்தாள்.
நான் சாப்பிடுவதை
பார்ப்பது தானே அவளுக்கு தீபாவளி.
மற்ற நாட்களில்
பல் தேய்..குளி..
அப்புறம் தான் இட்லி என்பாள்.
அந்த கண்டிப்பில்
சுருண்டு கிடந்த
நரகாசுரன்களையெல்லாம்
இப்போ எங்கே காணோம்.
என் அம்மாவின் அன்பு
சுத்தம் எல்லாம் பார்க்காத
சுத்தமான அன்பு இன்றைக்கு..
"டமார்"
வெளியே லெட்சுமி வெடி.
காகிதக்குடல் சரிய
நரகாசுரன் வாசலில்
வாரி இறைந்து கிடந்தான்.
No comments:
Post a Comment