எங்கு போனார்?
____________________________ருத்ரா
என்னை
லட்சம் ஸ்லோகங்களால்
குளிப்பாட்டுகிறாய்.
இன்னும்
கும்பாபிஷேகம் என்று
என் மூக்குக்கும் முகத்துக்கும்
இன்னும்
கோபுர பொம்மைகளுக்கும்
புதிதாய் வர்ணம் பூசுகிறாய்.
நீ கேட்கிறாய்.
நான் கொடுக்கிறேனா
என்று
எனக்கே தெரியாது.
ஏதோ சந்து பொந்துகளுக்குள்
எல்லாம் புகுந்து
கரன்சிகளை அள்ளிக்கொள்கிறாய்.
உன் நாட்டில்
கோடி மக்கள்
எலும்புக்கூடுகளாய்
இற்றுக்கிடக்கும்போது
உனக்கு மட்டும்
இந்த கொழுப்பு மண்டலம்
எப்படி கிடைத்தது?
நான் கொடுத்தேனா?
எனக்குத்தெரியாது.
நான் தான் கொடுத்தேன்
என்று
உன் கொழுப்பு மலையைக் கிள்ளி
எனக்கு
நைவேத்யம் வைக்கிறாய்.
இது என்ன?
எனக்கு எதுவும் புரியவில்லை.
போதும்
உன் பாஷ்யங்களும்
பிரம்ம சூத்திரங்களும்.
ஒன்று செய்.
உன் வீட்டுப்பையன் படிக்கும்
எட்டாம் வகுப்பு
விஞ்ஞானப் புத்தகம்
ஒன்றை எனக்கு கொடு.
அறிவு வேட்கை கொழுந்து விட்டு
எரிய வேண்டிய நேரத்தில்
வெறும்
நெய்யும் சுள்ளிகளும் குவித்து
தீயை எரித்து
நீ குளிர் காய்ந்தது போதும்.
அறிவைக் கொண்டு வா.
அழிவை அல்ல.
கடவுள் கதவைச்சாத்தி விட்டு
போயே போய் விட்டார்.
எங்கு போனார்?
கடவுளே! தெரிய வில்லையே!
____________________________________
No comments:
Post a Comment