வைராவி குளம்
_____________________________________
"வைராவி குளமா?"
முகநூலில் யாரோ தொட்டுக்
காட்டினார்கள்.
அம்பதுகளின்
அந்த வைர நினைவு
பளிச்சு களில்
இப்போதும்
சலவை செய்யப்பட்டு விடுகிறேன்.
எனது தந்தை வழி
அத்தை அவர்கள்
எங்கள் கல்லிடைக்குறிச்சி
குமாரர் கோவில் தெரு வீட்டுக்கு
வருவார்கள்.
எல அய்யா எசக்கி என்று
வாய் நிறைய
எங்கள் அப்பாவை
அழைத்துக்கொண்டே தான்
வருவார்கள்.
அந்த உற்சாகத்தை
அன்றைய
சிறு பயலாய் ஒரு தீபாவளி
மத்தாப்பூவை
"பொருத்தி"க்காட்டினால் தான்
புரியும்.
குடமுருட்டி சங்கரன் கோயில்
ஆடித்தவசு விழாவுக்கு போகும் போது
பெண்களின் கண்களை
கருவிழிகளாய்
பாதையெல்லாம் விழும்
கருநாவல் பழங்களோடு
அன்று உவமிக்கத்தெரியாத
பொடிப்பயலாய்
அந்த கன்னடியன்
கால்வாய்க்கரையோரம்
அம்மா இடுப்பில்
சுமந்துகொண்டு போகும்
கூட்டாஞ்சோற்றின் சூட்டை
மோப்பம் பிடித்துக்கொண்டே
சென்ற நாட்கள் இனி
சென்ற நாட்கள் தான்.
கோவிலுக்கு செல்லும் போது
கால்கள் அந்த
நீர் என்னும் பளிங்குப்பாயில்
அளைய அளைய
கால்களில் சரசரக்கும்
அத்தனை கூழாங்கற்களும்
என் வைரகற்கள் அல்லவா?
பற்பசையை
குழாயிலிருந்து
பிதுக்கிய பின் மீண்டும்
குழாய்க்குள் நுழைக்க முடியுமா?
ஏதோ படத்தில்
நாகேஷ் சொன்ன காமெடி இது.
அப்படி மீண்டும் அந்த
பாற்கடலை
நசுங்கிப்போன இந்த வாழ்க்கை
டியூபுக்குள்
அடைக்க முடியுமா?
வேண்டும்போதெல்லாம்
அந்த நினைவுகளின்
அமுதக்குழம்பை
சுவைக்கத்தான் முடியுமா?
நோஸ்டால்ஜிக்
எனும் பழம் நினைவோட்டம்
செறிந்த செர்ரி மரக்கூட்டங்களுக்குள்
நுழைந்து வருவது தான்
என் எழுத்துக்களில் அந்த
வைராவிக்குளம் தளும்பி நிற்பதாகக்
காட்டிக்கொண்டே இருக்கும்.
வைராவிகுளமே!
உனக்கு தலபுராணம் பாட
தெய்வங்கள் தேவையில்லை.
அந்த பச்சை வயல் விரிப்பும்
மணிமுத்தாறும் தாமிரபரணியும்
இழை ஊடி நெசவு செய்யும்
அந்த அற்புதமுமே போதும்.
அங்கு ஒரு நாள் வருவேன்.
எவனோ வானத்திலிருந்து இறங்கி
குதித்து வருவான்
என் ஓட்டை உடைசல்களோடு
வியாபாரம் செய்து கொள்ள.
போட்டு விடப்போகும்
இந்த உடம்புக்கூட்டுக்குள்
பாயும் பழம் நினைவுப்பாய்ச்சல்களை
புதுப்பித்துக்கொள்ள
நானும் ஒரு நாள்
வைராவி குளம் வருவேன்.
________________________________________________
ருத்ரா இ பரமசிவன்.
2 comments:
நினைவுகள் சங்கீதம்...
நன்றி நண்பரே! பழைய நினைவுகள் நிமிண்டிய யாழ் நரம்புகளின் அதிர்வுகள் இவை.
Post a Comment