2022-09-02

புழுக்கூடு உடைந்தது.

 புழுக்கூடு உடைந்தது.

______________________



கடவுள் 

ஒரு சுகமான தலையணை.

சூரியக்கதிர்கள்

மயில்பீலிகளாய் வந்து

சன்னல் கம்பிகளை

முத்தமிட்டு

என் முகத்திலும் 

அது நிழலாடும்போது

புரிகிறது

இரவெல்லாம் அந்த தலையணையில்

பள்ளம் விழுந்து

என்னோடு புரண்டு கொண்டிருந்தது

கடவுள் தான் என்று.

இவ்வளவு காலம் இப்படியிருந்த‌

தலையணையின் பள்ளத்தாக்கில்

ஒரு நாள் திடீரென்று

ரோஜாக்களின் மழை?

அதில் கிளு கிளுப்பாய்

சிரிப்பொலிகள்.

ஓ!

இது அவள்.

அந்த பேருந்து நிறுத்தத்தில்

அவள் விட்டுச்சென்ற கைக்குட்டை.

கடவுள் கட கடவென்று சிரித்தார்.

நண்பா!

இது நான் செய்த புதிய ஏற்பாடு.

அந்த பழைய ஏற்பாடு போதும்.

தலையணயில் ஒரு ஈடன் தோட்டம்

உனக்கு 

ஒரு புதிய பூவை வீசியிருக்கிறது.

மகரந்தங்கள் பரிமாறிக்கொள்ளட்டும்.

இந்த மூளியான வெளியிலிருந்து

நான் எறிந்த மலர்களின் ஏணி இது.

உயிர்ப்பூவின் நாளம் 

அறுபடுவதற்கு நீ அனுப்பப்படவில்லை.

மகிழ்ச்சியாய் இரு.

மனிதம் எனும் முதல் குமிழிப்பூ

அதிலிருந்து தான்

இதழ் விடுகிறது.

புழுக்கூடு உடைந்தது.

வண்ணச்சிறகுகள் வானம் நிரவட்டும்.

போய் வருகிறேன்.

இப்போது தலையணை மறைந்து போனது.

கனவு மேகங்களின் 

பஞ்சடைத்த தலையண தான்

எப்போதும்.

அவள் சிரிப்பில் புல்லரித்துப்போய்...

புரண்டு கொண்டிருக்கிறேன்.

சூரியன் சுள்ளென்று கடித்தான்

கட்டெறும்பு போல்


____________________________________________________

ருத்ரா



No comments: