2022-09-23

மணிமுத்தாறே!

 மணிமுத்தாறே!

_______________________________________________
ருத்ரா


அம்பதுகளின் என் நினைவுப்பரல்களில்
உன் மணிகளும் முத்துக்களும் தான்
என் சிறு வரலாற்றுப்புத்தகத்தில்
கிலுகிலுப்பையை ஆட்டி ஆட்டி
மகிழ்வு ஊட்டுகின்றன.
அந்த பாறைகள்
அந்த சிறு பாலங்கள்
பசுமையான மரக்கூட்டங்கள்
இவற்றின் பின்னணியில்
நீர்ச்சேலையை நெளியவிட்டுக்கொண்டு
ஓடுகின்ற
மணிமுத்தாறே!
அந்தக்காட்சிகள் இன்று
ஏதோ ஒரு வறட்சியின்
எலும்புக்கூடுகளாய்
சிதறிக்கிடக்கின்றனவே.
"கல்பொருது இற‌ங்கும்" உன் அருவி
உயிர்களை தின்னும்
கண்ணுக்குத்தெரியாத ஒரு அரக்கியாய்
காட்சியளிக்கும் நிகழ்வுகளும் உண்டு.
நீரில் வலை கட்டிய போதும்
சில மக்களின் உற்சாகம்
அதையும் மீறி அந்த நீருக்குள்
பலியாகிப்போன சோகங்களையும்
மறக்க இயலாது.
ஓ!
எங்கள் அழகிய மணிமுத்தாறே
உனக்கு வயது இல்லை.
மூப்பு இல்லை.
குன்றா எழில் கசியும் குன்றுகளுடம்
பச்சை உயிர் போர்த்த
உன் சீரிளமை எப்போதும்
புன்னகை சிந்தும்.
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலயமே
உன் ஒளிர்சிரிப்பை ஏந்திக்கொண்டு
நிற்பதாய்
நான் உணர்ந்திருக்கிறேன்.
எனது பள்ளி திலகர் வித்யாலம்
எனது "பைக்கூட்டையும் புத்தகங்களையும்"
அந்த வழியாய் நான் கடந்து செல்லும்போது
என் மீது செல்லமாய் வீசி எறிந்து
விளையாடுவதாயும் உணர்கிறேன்.
எனக்கு விவரம் தெரிந்து
நான் பார்த்த முதல் கோவில்
அந்த மணிமுத்தாறு அணைதானே.
ஓ மணிமுத்தாறே!
வயதுகளின் சுமையின் அடியில்
நசுங்கிக்கிடக்கும்
அந்த பட்டாம்பூச்சிச்சிறுவனை
மீண்டும் படபட‌த்துச் சிறகடிக்கச்செய்!
இதோ
உன்னைத்தேடித்தான்
வருகிறேன்.
__________________________________________________________


2 comments:

KILLERGEE Devakottai said...

நினைவுகள் சுகமானவை

ruthraavinkavithaikal.blogspot.com said...


ஆமாம்ஜி. வயது ஏற விடாமல் மனிதனை புதுபித்துக்கொண்டே இருப்பவை.