2022-09-21

அவனே தான் அவன்.

 அவனே தான் அவன்.

________________________________________

ருத்ரா


விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து

கண்டு பிடித்திருக்கிறார்கள்.

நம் உலகில் எத்தனை எறும்புகள் உள்ளன?

என்று.

இரண்டு போட்டு அதன் பின்னே

பதினாறு முட்டைகள் போட்டுக்கொள்ளுங்கள்.

அத்தனை எறும்புகளா?

சுறுசுறுப்பு. 

வாழ்கையில் வரிசை முறைகள்

வகுத்துக்கொள்ளும் அறிவு.

நினைத்தால் இந்த உலகத்தையே

வாயில் கவ்விக்கொண்டுக்

கிளம்பிவிடும் உறுதி..

இதெல்லாம் நம்மை 

மலைக்க வைக்கிறது.

இயற்கை இந்த மண்ணையே

ஒரு பரிசோதனைக்கூடம் ஆக்கி

பல உயிர்களை ஆக்கி

அப்புறம் அழித்து

ஏதோ ஒரு உண்மையை

கிண்டி கிழங்கு எடுக்க விரும்புகிறது.

டைனோஸார் எனும் 

உயிர் வடிவங்களை

ஆக்கிப்பார்த்த அதன் வரலாறும்

அவை அழிக்கப்பட்ட விதமும்

ஒரு உண்மையை வீசி எறிந்திருக்கிறது.

இன்று "ஹல்க்" எனும் ஹாலிவுட் படைப்பை

நாம் பார்த்திருக்கிறோம்.

ஆம்.இயற்கை தன்னையே

அப்படி ஒரு கதாநாயகனாக‌

படைத்துக்கொண்டு வாழ வேண்டும்

என்ற கனவைத்தான்

டைனோசார் மூலம் காட்டியிருக்கிறது.

போதும் இந்த விளையாட்டு என்று

பெரும் விண்கல் மற்றும்

பெருமழை பனியுகம் மூலம்

அதை கலைத்துவிட்டது.

உடலை பெரிதாக்கி பூதமாக்கி

வாழ்வதை விட‌

அறிவின் திரட்சியான‌

மூளையை பல்மடங்கு நுட்பமாக்கி

அதைக்கொண்டு 

மனிதர்களைப்படைத்துப்பார்ப்போமே

என்ற பரிசோதனையில்

இறங்கி இருக்கிறது இயற்கை.

அந்த மூளை அதற்குள்

பல பில்லியன் மடங்கு நுட்பங்களை

உருவாக்கிக்கொண்டு விட்டது.

மூளையே ஒரு செயற்கை மூளையை

உருவாக்கி

இந்த பிரபஞ்சங்களையெல்லாம்

தனக்குள் விழுங்கிக்கொண்டுவிடும்

போலிருக்கிறது.

இயற்கையின் இயற்கை இது.

அதன் உள்குத்து அதற்கே தெரியும்.

விஞ்ஞானத்தின் விஞ்ஞானமே 

அஞ்ஞானம் தான்.

என்ன?

ஆம்!

அறிந்துகொள்ளப்படவேண்டியது

பெரும்பிழம்பாய்

அறிவின் முன்

வழி மறித்து அல்லது வழி கொடுத்து

விளையாட்டு காட்டிக்கொண்டிருக்கிறது.

மனிதனின் காலடிச்சுவடுகளில்

தன் காலடிச்சுவடுகளையும் 

பதித்துக்கொண்டு

ஒருவன் பின் தொடர்கிறான்.

பின் தொடர்வது யார்?

கடவுள் தான்.

தான் படைத்த பிரபஞ்சத்தை

அறிந்து பார்க்க ஒரு மூளை வேண்டுமே.

அது மனிதனிடம் தானே இருக்கிறது.

அட! நான் தான் அந்த‌

டி என் ஏ ,ஆர் என் ஏ எனும் 

புதிர்களின் முறுக்குச்சங்கிலியை 

வீசியெறிந்தேன்.

அந்த புதிர்களின் புதிர்களுக்குள்ளும்

கணித சமன்பாடுகள் கண்டவன்

மனிதன் அல்லவா?

விட்டால் "கடவுளையே"

வைரஸ் ஆக்கி வலம் வர 

வைத்து விடுவானே அவன்!

மனிதனின் பயணமும்

அவன் முன்னே இருக்கும்

எல்லையில்லாமல் நீண்டுகிடக்கும்

கால் சுவடுகளை ஒட்டியே தான்

தொடர்கிறது.

அவை அவனுக்கு அறிவு.

அவன் பின்னே கடந்து சென்ற‌

கால் சுவடுகளும் அறிவே தான்.

அறிவு என்பதற்கும்

ஒரு ஓர்மை உண்டு.

அறிவும் அறியாமையும் சமம் ஆகும்

ஒற்றைப்புள்ளி ஒன்று உண்டு.

அந்த சிங்குலாரிடி

பெருவெடிப்பா? கருந்துளையா?

அகற்சியா? ஈர்ப்பா?

இதை இறைவன் அறிந்து கொள்ள‌

மனிதனை பின் தொடர்கிறான்.

மனிதனும் இன்னொரு

பெரு மனிதனைப் பின்தொடர்கிறான்.

மனிதன் கடவுளை கற்பனை செய்தபின்

மீண்டும் தான் பின் தொடர்வது ஒரு இறைவன்

என்று கற்பனை செய்து

அந்த அறிவை 

அவனே கொச்சைப்படுத்திக்கொள்வதை

அவன் விரும்பவில்லை.

ஏனேனில் 

மனிதனும் அறிவும் சமம் ஆகும்

ஒற்றைப்புள்ளியும் அவனே தான்.

அவனே தான் அவன்.


________________________________________________




2 comments:

KILLERGEE Devakottai said...

அருமையான சிந்தனையோட்டம்...

ruthraavinkavithaikal.blogspot.com said...

மிக்க நன்றி.