சன்னல் வழியே
-------------------------------------------------------------------------------
ருத்ரா
சன்னல் வழியே
ஒரு நீல சதுரமாய் வெட்டியெடுத்த
வானம் என் காதுகளில்
கிசு கிசுத்தது.
எங்கோ எதிலோ ஒரு
மாங்கிளையிலிருந்து
ஒரு மைனா
இந்த பிரபஞ்சத்தின்
ஜியாமெட்ரியின் கணித சூத்திரத்தை
சொல்லி சொல்லிகாட்டியது.
மனிதம் எனும்
அந்த மத்தாப்பு வெளிச்சத்தின்
வண்ணம் காட்டியது.
சாய்வு நாற்காலியின்
அரைப்படுக்கை நிலையிலும்
என் கனவுக்கு முதுகுத்தண்டு
இன்னும் முறியவில்லை.
அது ஏன்
தனி மனிதன் கூட்டமாகும்போது
வெறும் மந்தையாகின்றான்.?
ஈசல்கள் உதிர்த்த
இறக்கை குப்பைகளாகின்றான்?
"டப்" என்று ஒரு சத்தம்.
என்னவென்று சன்னல் வழியே நோக்கினேன்.
ஒரு காக்கை மின்சாரக்கம்பத்திலிருந்து
செத்து விழுந்தது.
மறுகணம்
ஒன்று ,இரண்டு ,மூன்று...என்று
காக்கைகளின் எண்ணிக்கை
வானத்தையே விழுங்கும் சமுத்திரம் ஆனது.
அது வெறும்
இந்து மகா சமுத்திரம் அல்ல.
இந்த மண்ணின் அடிவயிற்று
சீற்றங்களின் லாவாக்களின்
கருப்பு இறக்கைகளின் அலைவிரிப்புகள்.
போதும்
எங்களுக்கு கிளிகளும் மயில்களும் வேண்டாம்.
இந்தக்காக்கைசிறகுகளே வேண்டும்.
காக்கைச்சிறகின் அந்த சிவப்பு நந்தலாலாக்கள்
அணிவகுத்தால்
இந்த கடப்பாரைகளும் புல்டோசர்களும்
தவிடு பொடியாகும்.
-------------------------------------------------------------------------------------
1 comment:
அருமை மிகவும் இரசித்து படித்தேன் - கில்லர்ஜி
Post a Comment