2024-06-26

சிதறல்களாய்...திவலைகளாய்.

 சிதறல்களாய்...திவலைகளாய்.

._________________________________________‍



சருகுகள் சரசரத்தன.

அவற்றின் பச்சையங்கள் 

மக்கிய பின்னும்

மாயமாய் கொலுசுகள் கொண்டு

கிசுகிசுத்தன.

அந்த ஒலிச்சரங்கள்

யாருமற்ற அந்த மாந்தோப்பில்

உரையாடல்களை அரங்கேற்றுகின்றன.

இலைகள் ஈரம் இழந்து உலர்ந்த பின்

எப்படி இதயத்தின் ஈரம்

இங்கே சுருதி கூட்டுகிறது?

அவளா?

அவனா?

சொற்கள் பின்னி முடித்து

பூ வைத்துக்கொண்டது போல்..

கிளுகிளுப்பும்

வளையல் ஒலிகளும் தான்

அந்த சருகுகளில் 

சன்னல்கள் திறந்து காட்டின.

குயில்களின் குக்கூக்கள்

திடீரென்று

வானம் முழுவதையும் 

ஒலி பெருக்கியாக்கி...

அந்த ஓசைபிரளயத்தில்

அவர்கள் கடல்களாய் சுருண்டு எழுந்து..

சிதறல்களாய்

திவலைகளாய்

அங்கே

பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர்.


_____________________________________________________‍

அஞ்சிறைத்தும்பி.






2024-06-23

என்டாங்கில்மெண்ட்

 அதே கவலை தான்.

அதே அதே..எப்படி

என்ற 

மண்டைக்குடைச்சல்கள்.

"கண்ணொடு கண்ணிணை நோக்கியது..."

மட்டுமே நிகழ்ந்தது.

அப்புறம்

கோடி கோடி ...ஒளியாண்டுகள் தூரம்.

குவாண்டம் என்டாங்கில்மெண்ட்

என்று கணித சமன்பாடுகளை

நீட்டிக்கொண்டு

போக முடியவில்லை.

இதோ 

அந்த கண்களுக்கும்

இந்தக்கண்களுக்கும்

இடையே

அம்புகள்..ஈட்டிகள்

ரத்த அணுக்கள் ஒவ்வொன்றும்

ராட்சத கதாயுதங்களாய்

முரண்டு பிடித்துக்கொண்டு

இனிமையின் குருட்சேத்திரம்.

உனது வெற்றி எனது தோல்வி.

எனது வெற்றி உனது தோல்வி.

கீதைகள் எல்லாம்

சொற்கள் ஒடிந்து உடைசல்கள் ஆகின்.

கிருஷ்ணன்கள் கூட‌

எவண்டா இதை மேய்ப்பது என்று

மாடுகள் மேய்க்கப்போய் விட்டான்.

இனிய தேன்மழைக்குள்

அடர்மழையின் 

கொடும் போர்..போர்.

_____________________________________

அஞ்சிறைத்தும்பி.

 




2024-06-22

குடி மகனே குடி!

 குடி மகனே குடி!

__________________________________

ருத்ரா


தப்பில்லை.

உன் உள்நாக்கைக்கொண்டு

உரசி உரசி

இந்த வானக்கூரையை

இடித்துத்தள்ளு.

அப்புறம் வெட்டவெளிதானே

உன் கோவணம்.

உனக்குள் நொதித்த‌க் 

குமிழிகளையெல்லாம்

வேதங்கள் என்று சொல்லு.

புராணங்கள் என்று வாந்தியெடு.

இன்னும்

மனு சாஸ்திர மெத்தனாலையும்

கலக்கு கலக்கு 

என்று கலக்கிக்கொண்டே இரு.

மக்கள் என்று

மனித வெளிச்சங்கள் என்று

எதுவுமே

இங்கு மிச்சம் இருக்க வேண்டாம்.

புல் பூண்டுகள் மட்டும்

புருஷ சூக்தம் 

சொல்லிக்கொண்டிருக்கட்டும்.

போதையை வைத்துக்கிறுக்கியதெல்லாம்

புரிந்து கொள்ள மீண்டும்

போதையை ஏற்றிக்கொண்டாக வேண்டும்.

யாகத்தில் குதிரைமாமிசங்கள் மட்டும்

வெந்து கொண்டிருக்கட்டும்.

யாருக்கு இவை?

பிரம்மனுக்கா?

இங்கே எல்லாம் வெந்து வெந்து

தின்று தீர்க்கப்படும்

பிரம்மனையும் சேர்த்து தான்.

அப்படியும் 

பிதுங்கி வழியும் சமஸ்கிருத எச்சில்களில்

பிரம்மத்தை தேடி

அலைவதும் வீணே.

சோமச்செடியை நசுக்கிய‌

ரசத்தில் நுரைத்த‌

பொய்யே பிரம்மம்.

சரி தானே...

சஹநாவவது சஹநோ புனக்து..

சொல்லுங்கோ..சொல்லுங்கோ

நாழியாறது

நாலு ஆத்துக்கு போணுமோ 

இல்லியோ...


_______________________________________________________________










விடுங்கள் பிழைத்துப்போகட்டும்

 விடுங்கள் பிழைத்துப்போகட்டும்

___________________________________

"பேப்பரட்டீஸ்"




என்னத்தை எழுதுவது என்று

எழுதி முடித்து 

அதோ கசக்கி தூக்கி

எறிந்தாயிற்று.

எழுத்து எதையோ முட்டிக்கொண்டு

முரண்டிக்கொண்டு 

நிரடுகிறது இடறுகிறது..

முரண்படு முரண்படு

அப்போது தான் உன்னை எரிக்கும்

தீயை உணர்வாய்.

வேண்டாம் வேண்டாம் 

கன்னத்தில் போட்டுக்கொள்.

கண்களை மூடிக்கொள்...

உடன்பாடு என்று

சாக்கடைச்சேற்றை அள்ளிப்

பூசிக்கொள்.. 

இப்படி

கவிதைகளுக்கும் 

இலக்கியங்களுக்கும்

காகித கசக்கல்களுக்கும்

குப்பைத்தொட்டிகளுக்கும் இங்கு

பஞ்சமில்லை.

விடுங்கள் 

விருதுகள் பிழைத்துப்போகட்டும்.


_______________________________________________

அது யார் "பேபரட்டீஸ்" என்று கேட்கிறீர்களா?

அவன் பெயர் எழுதப்பட்ட காகிதங்களைக்கூட

சிந்திக்க வைத்தான் சாக்ரட்டீஸ்.

இன்று வெறும் பேப்பர்கள்தானே உலாவருகின்றன.

உலகம் மற்றும் உலக மானிடம் என்பது

எங்கே இருக்கிறது என்று

உற்று நோக்கவேண்டிய டெலஸ்கோப்புகள் தான்

நம் கண்டுபிடிப்புக்கு காத்திருக்கின்றன.

இந்த "பேப்பரட்டீஸும்" இப்படி ஒரு கனவு வாதியே.

___________________________________________________________








2024-06-21

விஷ சாராயம்.

 



விஷ சாராயம்.

___________________________________


பச்சையாகச்சொன்னால்

சமுதாய எதிரிகளின்

இச்சையான சொல் இதுவே தான்.

சில எக்காள ஊடகங்களின் 

ஊது குரல்களும் இதுவே தான்.

கூலி வர்க்கம் தானே

விடுங்கள்

ஏன் இந்த கூச்சல்?

வேர்வையின்

உப்புக்கரிக்கும் வர்க்கத்தின் மீது

உப்பரிகை வர்க்கத்தின் பார்வையும்

இது தானே.

கொச்சைப்படுத்தப்பட்ட‌

பொருளாதார சங்கிலிகளில்

நைந்தவனாய் நாயனாய்

கூளமாகிப்போனவனா மனிதன்?

அரசியல் என்றால் என்ன?

இதில் இன்னும் கொஞ்சம் கிக்

கிடைக்குமா?

என்று தேடிக்கொண்டே இருப்பவனா

இவன்?

ராமன் ஆண்டால் என்ன?

ராவணன் ஆண்டால் என்ன?

ஓட்டு அப்பங்கள்

பிய்த்து பிய்த்து

தின்று பார்த்தும்

"டிஜிட்டலில்" சுட்ட‌

அந்த அரை வேக்காடுகளின்

குடியாட்சிகளில் ருசியே இல்லை.

சோமக்கள்ளில் தான்

ஆயிரம் ரெண்டாயிரம் வருடங்களாய்

மந்திரங்கள் சொன்னோம்.

மெத்தனால் அங்கே எந்த‌

எத்தனால் கலக்கப்பட்டது?

வர்ணப்போதைகளில்

மனிதம் இங்கே

இன்னும் இன்னும்

பிணங்களே தான்.


______________________________________________

ருத்ரா.

2024-06-20

தவளைக்கல்

 


தவளைக்கல் எறிந்தது

போல் இருந்தது.

வட்டம் வட்டமாய் 

பளிங்குப் பரப்பில்

கவிதைகள் தோற்றுக்கிடந்தன.

அந்த அலைகள் யாவும்

விழிகள்...விழிகள்..

அவ்வளவு தூரத்துக்குப்போய்

மூழ்கிய போது

அந்த ஓட்டாஞ்சல்லி

கால்களை அகல விரித்து

தாவும் தவளையாய்

காட்சிக்குள் கரைந்தே போனது

மூச்சு இரைக்கும் துடிப்பு.

விழுங்கிய தருணங்களே

பிரசவித்து உயிர்த்தன.

மலைகளின் பின்னிருந்து

உதயமானது போல்...

எல்லாம் புதிது.

பெண்ணே!

உன் ஓரப்பார்வைக்குள்

இத்தனை ஏவுககணைக்களைக் 

கொண்டா அந்த‌

தவளைக்கல் எறிந்தாய்.

__________________________________________

அஞ்சிறைத்தும்பி.

தோட்டத்துக்குள்





என்னை

ஏன் எழுப்பினாய்?

எழுப்பியது அம்மா தான்.

பத்து மாதம் தூங்கி

என்னைத்தூங்கவிடாமல் 

பண்ணினாயேடா..

போதும் எழுந்திரு.

இந்த உலகம் ஒரு வினாடியில் கூட‌

சும்மா இருப்பதில்லை..

பையன் 

பெரிய ஆளாய் வரவேண்டும்

அவள் கவலை அவளுக்கு.

என் கவலையின் வண்ணத்திரைப்படம்

இப்போது தான்

கனவு ரீல் விட்டுக்கொண்டிருக்கிறது.

பட்டாம்பூச்சி தோட்டத்துக்குள்

நுழைந்து விட்டேன்.

கொத்து கொத்தாய் மில்லியன்களாய்

எத்தனை எத்தனை

அங்கே மொய்த்துக்கிடக்கின்றன.

அந்த ஒன்று எங்கே?

அந்த சிறகு ஓரத்தில்

ஒரு மச்சம் உண்டே...

தெரியவில்லை

அடுத்த கனவில் பார்ப்போம்.

போர்வயை சலிப்போடு

உதறினேன்.


_____________________________________________________‍

அஞ்சிறைத்தும்பி.

2024-06-19

இரைவனே இப்போது மிச்சம்.

 இறைவா! எங்கே இருக்கிறாய்?

_________________________________________

சொற்கீரன்.




இறைவனிடம்

என் மனம் திறந்து

அவன் மனம் திறந்து

பரிமாறிக்கொள்ளலாம் 

என்று பார்த்தால்

இவர்கள் மறைத்துக்கொண்டல்லவா

இருக்கிறார்கள்.

நான்கு திசைகளிலும் மறைத்து

நான் மறை என்றார்கள்.

சரி 

நீங்களே

மந்திரம் சொல்லிக்கொள்ளுங்கள்.

நாங்கள்

வெள்ளைக்காரன் சன்னல் வழியாக‌

பிரம்மத்தைப்பார்த்துக்கொள்ளுகிறோம்

என்றால்

அய்யோ

கடவுளையே தீட்டு ஆக்கிவிட்டார்களே

என்று 

கோர்ட்டுக்கே போய்

அரசியல் சாசனம் என்று

அட்டை மட்டும் போட்டுக்கொண்டிருக்கும்

அந்த மனு சாஸ்திரத்தையே

நம் தலையில் பாரம் ஏற்றினார்கள்.

கடவுளுக்கே அந்த அநீதி பொறுக்காமல்

இவர்கள் மீது அவர்

அம்பு விட்ட போது

அந்த பிரம்மத்துக்கே

பிரம்ம ஹத்தி தோஷம் வந்து விட்டதாய்

சம்ப்ரோக்ஷணம் செய்து

அந்த பிரம்மத்தை

அசுத்தத்தாலேயே

அபிஷேகம் செய்தார்கள்.

அவமானம் தாங்காமல்

பிரம்மம் எங்கோ போய்விட்டது.

பொருள் தொலைந்து போன‌

ஸ்லோகங்களை மட்டும் தான்

உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சூழ்ச்சிகளுக்கு

இரையாகிப்போன‌

இரைவனே இப்போது மிச்சம்.


______________________________________________



2024-06-18

எலியட்டுக்கு அது போதும்!

 எலியட்டுக்கு அது போதும்.

__________________________________________

சொற்கீரன்



பாழ்நிலங்கள் என்ற தலைப்பில்

டி எஸ் எலியட்

மனம் வெதும்பியிருக்கிறார்.

இந்த முட்காட்டில்

எந்த ரோஜாவுக்காக

நீங்கள் எலும்புக்குவியலாய்

நொறுங்கிக்கிடக்கிறீர்கள்?

சொற்கள் தானே

அவைகள் உளிகளா என்ன‌

என்று

அலட்சியமாக 

நீங்கள் 

கடந்து போய்க்கொண்டிருக்கலாம்.

ஆனால் அந்த சிற்பங்கள்

நம் மனத்துக்குள் எல்லாம்

ரத்தம் வடித்துக்கொண்டிருக்கிறதே..

இதோ இந்த உலகம்

இப்படித்தான் முடிந்து போகப்போகிறது

என்று...

ட்ரம்ஸ் அடிக்கிறானே!

அது அச்சமா?

நம்பிக்கையின் கருச்சிதைவா?

கனவுகளின்

காகிதக்கசக்கல்களா?

இன்று ஜேம்ஸ்வெப் தொலைநோக்கிகள்

நம் முதுகுத்தண்டில்

சில்லிட வைக்கும் கோட்பாடுகளை

ஊற்றிக்கொண்டே இருக்கிறது.

என் செந்தமிழ்த்தினவுகள்

அந்த செவ்வாய்க்கோளின்

கருப்புக்குழிக்குள்

நம் வேர்ப்பிடிப்புகள் 

இருக்கின்றன என்று

கட்டுரைகள் எழுத வெறியேற்றுகின்றன.

அசட்டு அறிவுகளின் அரிப்புகள்

எங்கெல்லாம் 

கரையான் புற்றுகளாய் 

வால்மீகிகளை

கருவுற்றிருக்கும் என்பதையும் 

சொல்ல முடிவதில்லை.

அவன் கூட தமிழ் இலக்கியத்தின்

மரவ மரத்தையும் (மரா மரங்கள்)

குரவ மரத்தையும் 

தழுவிக்கொண்டு ஓடி 

அம்பு விட்டிருக்கிறான்.

கவிஞன்

மனிதனை "உட்கூடு"அற்றவன்

என்று ஹால்லோ மென் என்றானே.

அண்டத்தின் அந்த கடைசி

சிவகாசி வெடி வெடிப்பதற்குள்

நீ 

சிரித்து விடு.

எலியட்டுக்கு அது போதும்!


_____________________________________________________

2024-06-12

முட்டுக்கொடுத்தவர்கள்

 கல்லாடன் கவிதைகள்

____________________________________________
12.06.2024


முட்டுக்கொடுத்தவர்கள் எல்லாம்
ஆகா ஓகோ என்கிற 
ஜனநாயகத்தூண்கள் அல்ல.
அந்தக்கட்டைக்கால்களையும்
குதிரைபேரம் செய்து
ஒரு சர்வாதிகார மிருகக்குட்டியை
எப்படி தன்
செல்ல பொமரேனியன் ஆக்கிக்கொள்ள முடியும்
என்பதில் கரை கண்டவர்கள் இவர்களே.
கறையாகிப்போனது
நம் ஜனநாயக எண்ணிக்கை கணக்குத்தான்.
"வார் ஃபார் பீஸ்"...
அமைதி அமர்த்திவைக்க போர் என்பார்கள்.
ஏன் அந்த விஷ்ணுவே ஒரு "பெனவெலண்ட் டிக்டேட்ட‌ராக"
அவதரித்து
இந்த ஜனநாயக விரோதிகளை
வதைத்துவிட்டு செல்லலாகாதா என்று
தினமும் விஷ்ணுசஹஸ்ரநாமம் சொல்பவர்கள்
ஏங்கி ஒரு அறிக்கை விடலாம்.
"மாமா...பேஷா செஞ்சுட்டாப் போறது..
கன்யாகுமரிலே பாத்தேளோ இல்லியோ..
இனி இந்த "தேசவிரோதிகள்" தலைகளையெல்லாம்
கொய்யாமல் விடாது என் விஷ்ணுச்சக்கரம்."
முதல் தலை அவருடையது தான்.
3வது முறையிலிருந்து இன்னும்
3000ஆவது வரைக்கும் இது தான்.
அரக்கர்கள் எல்லாம் ஓடி ஒளிந்தார்கள்.
ஏனென்றால்
தேவலோகமே மிகப்பெரும் கொடிய‌
அரக்கர்களையும் மிஞ்சிய‌
அரக்கர்களின் கூடாரம் ஆகிப்போனதால் தான்.
யூ ட்யூபுகளில்
இனிமேல் இந்த ஏமாற்றுவேலைகள் எல்லாம்
நடக்காது... 
அவர் சோலி முடிஞ்சுது
இவர் சோலி முடிஞ்சுது
என்று
"ஃபால்ஸ் ஹோப்" கொடுக்கும்
அறிவாளிப்பேச்சாளர்களே!
அதோ அந்த‌
காஞ்சுபோன புல் கூட‌
எழுந்து கொண்டு இனி பற்றிகொள்ளும்
என்கிற எதேனும் ஒரு 
இக்னிஷன் பாய்ண்ட்
புலப்படும் வரை இந்த‌
புலம்பல் காவியங்களுக்கு
முற்றுப்புள்ளி வையுங்கள்.
"விண்குழலின் புல்லாங்குழல்கள்"
விடியல்கள் தருவதில்லை.
__________________________________________________




______________________________________

2024-06-11

சொடக்கு எடுத்துக்கொண்டிருங்கள்.

சொடக்கு எடுத்துக்கொண்டிருங்கள்.

______________________________________

கல்லாடன்.




அழகான 

பெண்ணின் புகைப்படம்

ஒன்று போதும்.

அதில் சொற்களை

ஈ மொய்க்கவிட்டு

லைக்குகளை

ஆயிரக்கணக்கில் 

ஜி ஐ எஃப் பாப்கார்ன்ஸ்களின்

துள்ளல்களில் கோர்த்து

உன் முகச்சன்னல்களை

தினம் தினம் 

திறந்து மூடுகிறாய்.

இன்று 

பிறக்கும்போதே

இறந்து பிறப்பவை தான்

கவிதைகள் என‌

உலா வருகின்றன.

ஏன் ப்ரொ?

இத்தனை காழ்ப்பு?

தெரியவில்லை.

சொற்கள் என்றால்

வல்லினம் மெல்லினம் இடையினம்

இவற்றின்

"சுடிதார்" அலைப்பாய்ச்சல்கள் தானா?

இன்னும் இன்னும்

முறைத்த ஜீன்களின் கிழிசல்

பார்வைகள் தானா?

போதும்..போதும்

மண்டை கலங்கிய பெரிசுகளே

போய் உட்கார்ந்து

ஜனநாயகத்துக்கு

சொடக்கு எடுத்துக்கொண்டிருங்கள்.


___________________________________________________