2024-08-02

உன்னிடம் வாசித்துக்காட்ட‌..

 

உன்னிடம் வாசித்துக்காட்ட‌

________________________________________

கல்லாடன்.



இந்த கவிதையை 

உன்னிடம் வாசித்துக்காட்ட‌

மிக மிக ஆசை.

இதை படிக்கும் போது

அது உன் செவிகளில்

காட்சிகளை பூத்துச்சொரியுமா?

இந்த வானத்து சிமிழுக்குள்

உன்னை இன்னொரு வானமாக‌

காட்டி வியக்க வைக்குமா?

உன் ஒரு துளி முறுவலுக்குள்

எத்தனை ஆயிரம் வானப்படுதாக்களை

நான் சுருட்டி சுருட்டி 

விரித்திருப்பேன்.

ஒவ்வொரு எழுத்தும்

ஒரு கருப்பை.

அது பிறப்பிக்கும்

ஒவ்வொரும் உயிர்ப்பும்

எத்தனை குழிகளை வெட்டி

வைத்திருக்கின்றன தெரியுமா?

எதிலாவது நான் விழுந்து

மூடப்பட்டு

சலவைகல் எழுத்துக்களாய்

பொறிக்கப்பட்டு விடுவேன்.

பிறந்து பிறந்து 

இறந்து இறந்து

இந்த விநாடிமுள் 

சுற்றி சுற்றி வந்து 

பட்டாம்பூச்சி இறகுகளை

மில்லியன் கணக்கில் குவிக்கிறது.

அந்த வர்ணங்களின் பிரளயங்களில்

எல்லாம் காணாமல் போகிறது.

காலம் கூட‌

காலமாகி விட்டதாகத்தான்

சொன்னார்கள்.

இன்னும் அதை

படித்து முடிக்கவில்லை.

நீயும்

கேட்டு முடிக்கவில்லை.

வரிகள் படபத்துக்கொண்டிருக்கின்றன.

இந்த பஃறுளியாறு

பரல்களை பரப்பிக்கொண்டு ஓடுகிற‌து.

கூழாங்கற்களினூடே

நினவுக்கபாலங்களின் சிதிலங்களும்

சரசரத்துக்கொண்டு ஓடுகின்றன.


___________________________________________________




No comments: