நீ
____________________________________________
நினைவோரங்களில்
கனவு மிச்சங்கள்
எலும்புத்துண்டுகளாய்
எதையோ சொல்கின்றன?
ரோஜாக்கள்
வலம் வந்த சுவடுகளில்
எருக்கம் பூ மேடுகள்.
சூரியனையே சிறகாக்கி
துடைத்து துடைத்து
பளிச்ச்சிட்ட வானத்தில்
மொட்டை இருட்டின்
மூளித்திரைகள்.
சிந்தனைக்கீற்றுகள்
தடம் அழிந்து இடம் இழந்து
ஈசல் சிறகுகளின்
குவியல்களாய்
குப்பை மேடுகள்.
ஓ! தமிழா!
உன் வீடு எங்கே?
பேய் மந்திரங்களின்
பிண்டம் தின்றா
உன் மொழி வளர்த்தாய்?
உன் சிந்து தமிழ்
சிதைந்து போன
சிதிலங்களிலிருந்து
என்றைக்கு உன்
முகம் மீட்கப்போகிறாய்?
உன் அகம் சிவக்கப்போகிறாய்?
போலிகளின்
"ஊடகத்து" நாடகங்களில் நீ
"கான முயல் எய்த அம்புகளையா"
இன்னும் பொறுக்கிக்கொண்டிருக்கிறாய்?
இமயம் உன்னால்
வரம்பு கட்டப்பட்ட வெற்றிகளை யெல்லாம்
தொலைத்து விட்டு இந்த
கூழாங்கற்களையா
சேகரித்துக்கொண்டிருக்கிறாய்?
காக்கைகள் கூட
அவற்றைக்கொண்டு தன்
நெருப்புத்தாகத்தை
தணிக்க முயலும்போது
நீ அவற்றில்
"பரம பதம்" ஆடிக்கொண்டிருக்கிறாய்.
சொர்க்கம் எனும்
பொய்க்குமிழிகளும்
உன்னை வெறும் பாவ மூட்டைகள்
ஆக்கி விட்ட
புளுகு மூட்டைகளுமா
உன் "சீறும் குமரிக்கண்டம்?"
விழிவு தான் உன் வழி!
அழிவு அகற்ற
நீ
விழித்தெழு! சிலிர்த்தெழு!
தமிழா!
சிலிர்த்தெழு!
__________________________________________
சொற்கீரன்.