2009-03-24

"வெள்ளை அங்கிக்குள் ஒரு வெளிச்சக்கடல்"

"வெள்ளை அங்கிக்குள் ஒரு வெளிச்சக்கடல்" (அன்னை தெரஸா)
============================================================ருத்ரா
25.03.09
அன்னை...
அன்னை...
நாக்கிற்கும்
பல்லிற்கும் இடையே
சத்தங்களின்
சம்மட்டிகளுக்குள்
கிடந்த
வார்த்தையின்
வெறும் நசுங்கல் வடிவம் இது..
'அன்னை தெரசா '
என்று நாங்கள்
உன்னை உச்சரிக்கும் வரை !
'அன்னை தெரசா '...என்று
எங்கள் இதயங்கள்
ஒலிக்கும் போது
தேச-உலகப் பரிமாணங்கள்
காணாமல் போயின.
மத வேலிகள் எல்லாம்
மறைந்து போயின.
இன-மொழிக்கூடுகள்
இற்று விழுந்தன.
நீலக்கோடுகள் போட்ட
வெள்ளை அங்கிக்குள்..
வெள்ளமாய்ப் பொங்கும்
மனிதநேயக்கடல் நீ !
அந்த வெளிச்சக்கடலில்
சாதி மதப்பூதங்களின்
இருட்டுகள் எல்லாம்
கரைந்தே போயின!

உன் முகத்தாமரை
பரந்தாமன்களின்
'நாபித்தாமரை"களை விட
உன்னதமானது.
ஏனெனில்
குப்பைத்தொட்டிகளில்
நாய்களால்
கவ்விக்கொண்டு வந்து
போடப்பட்ட
மனிதப்பிஞ்சுகள் கூட
உன் கரம்பட்டு
மாணிக்கத் தாமரைகள் ஆயின !
குளிர் பூ மழையே !
குமுறும் எரிமலைகள் கூட
உன் கண்களில் கசியும்
ஈரம் கண்டு
சுருண்டு கொள்ளும்.
உன் முகத்தில்
பழுத்த சேவையின்
சுருக்கம் விழுந்த
ஒவ்வொரு வரியும்
யதார்த்தமான
பைபிள் வாசகங்கள்.
நடைமுறைக்கு வந்த
கீதைப்பேருரைகள்.
மனிதனின் அருகாமைக்கு
வந்து விட்ட
அல்லாவின் அருள்மொழிகள்.


மீன் வேடம்...
ஆமைவேடம்..
வராக வேடம்...
சிங்க வேடம்...என்று
கடவுள்
பத்து விதமாய் வந்த போதும்
பத்தவில்லை.
அதனால்
மானுட நேயம் போதிக்க
வேடம் போடாமல் வந்த
அவதாரம் நீ !


பசிப்பவனுக்கு
உடனே புரியும் மொழி
எபிரேயமும் அல்ல.
சமஸ்கிருதமூம் அல்ல.
ஒரு ரொட்டித்துண்டு தான்.
ஒரு கவளச்சோறு தான்.
'பரிந்து ஊட்டும் '..அந்த
தாய்மை மொழி
நீ அல்லவா!

பிணியில் கந்தலாகிக்
கிடப்பவனுக்கு
சங்கு சக்கரத்து
விசுவரூபம் தேவையில்லை.
உன் பாசத்தின்
மருந்தும் சிகிச்சையுமே
அங்கு தெய்வதரிசனம்.
மனித சேவையின்
சாந்து கொண்டு கட்டிய
எங்கள் கோவில் அல்லவா நீ !

இறைவனைத்
தொழுவதற்கு கூட
கைகள் இல்லாத
தொழுநோய்க்காரர்களின்
கைகளாய் இருந்த
கை கண்ட தெய்வம் அல்லவா நீ!
மானுட நேயத்துக்கு
சமாதி கட்டிவிட்டு
பக்தியை பரப்புவதற்கு மட்டும்
கோவில் என்று
பளிங்கில் கட்டினாலும் சரி
கடைந்தெடுத்த
கருங்கல்லில் கட்டினாலும் சரி
அவையடக்கத்தோடு
சொல்லிக்கொள்கிறேன்..
அவையெல்லாம்
சவக்கிடங்குகளே!
சைத்தான் என்பது
கடவுளின் எதிர்வடிவம்.
ஆனால்
விழுந்து கிடப்பது
குற்றுயிராய்
குலையுயிராய்
ஒரு சைத்தான் என்று
தெரிந்தாலும்
ஓடோடிச்சென்று
பணிவிடை செயவது
உனக்குத்தெரிந்த
கடவுள் வடிவம்.
நாங்கள்
தேவன் வசனங்களை
ஒப்பிக்கிறோம்.
நீயோ அவற்றை
உயிர்ப்பிக்கிறாய்.
அன்னை தெரசாவே!
அன்பின் ஆலயமே!
காலத்தால் கரையாத
மெழுகுவர்த்தியே!
மரித்துப்போனபின்னும்
மண்ணுக்கு அடியில்
தின்ன வரும்
புழுக்களுக்கு கூட
பணிவிடை செய்ய
படுத்திருக்கும்
உன்னைக் கண்டு
வெட்கம் கொண்டு
தன்னை அங்கு
புதைத்துக்கொண்டான் அவன்.
ஆம் !
அந்தக் கல்லறையில்
கிடப்பது...
நீயல்ல!
மரணதேவன்.
கால ஓட்டத்தில்
ரத்த சதையாய்
உருகியபின்னும்
எங்களது
வெளிச்சம் நீயே!
புதிய ஏற்பாடுகளையெல்லாம்
பழைய ஏற்பாடுகள் ஆக்கி
கரையான்கள்
அவற்றை
சாப்பிட்டுவிட்டுப்போகட்டும்
என்று
எப்பொதுமே
ஜெயிக்க...
எப்போதுமே
ஜெபிக்க
'மனித நேயத்தின் '
ஒரு புதிய 'புதிய ஏற்ப்பாட்டை '
எங்களிடையே
பதிய வைத்த
இந்த பிரபஞ்சத்தின்
தாயல்லவா நீ !
'கிருமிகள்
என்னைப்
புசித்துக்கொள்ளட்டும்.
புனிதப்படுத்த
என் உடல் தான் வேண்டும்
என்று நீங்கள் கேட்டால்
அந்த புனிதப்பட்டம்
எனக்குத் தேவையில்லை...
என்று
நான் கூறும் குரல்
உங்களுக்கு கேட்கிறதா ? '
ஆம்.
இத்தனை நாள்
அடம் பிடித்த
அந்த 'வாடிகனுக்கு '
அன்னையின் குரல்
கேட்டுவிட்டது.
இறுதியில்
வாடிகன் தன்னை
புனிதப்படுத்திக்கொண்டது.

தாயே !
இந்த பங்குத்தந்தைகள்
உன்னை
கொச்சைப்படுத்திய போதும்
நீயோ
உன் பங்குக்கு
இவர்களை
தூய்மைப்படுத்தி விட்டாய்.
சொர்க்கங்கள் எல்லாம்
தலை குனிந்து கொண்டது.
நரகங்கள் எல்லாம்
புனிதமாகிப்போனது.
======================================================== ருத்ரா.







No comments: