தோரணங்களும் ரணங்களும் !
(உலக மகளிர் தினம்)
==============================================ருத்ரா
பெண்ணே
அதோ பார்!
உலக மகளிர் தின விழாவின்
தோ"ரணங்கள்" ஆடிக்கொண்டிருக்கின்றன.
கொஞ்ச நேரம்
உற்றுப்பார் அந்த ஊமை ரணங்களை.
மி்ன் மி்னி பூச்சியல்ல நீ.
மி்ன்னணு யுகத்தின் சுடரேந்தி நீ.
காதல்
உன் பயணத்தில்
ஒரு மைல் கல் தான்.
ஆனாலும்
தன் ஜிகினா எழுத்துக்களால்
அதை மாணிக்க கல்லாக்கிவிட
புறப்பட்டு விட்டது
புதுக் கவிஞர் கூட்டம்.
அந்த பாராங்கல்லில் நசுங்கிவிடாமல் இருக்க
பாராமுகம் காட்டு!..பெண்ணே
பாராமுகம் காட்டு நீ.
இந்த பட்டாளங்களிடையே
நீ பட்டுப்போய் விடாதே.
கவிதைவரிகளுக்கு
முடக்கு வாதம் ஏற்படும்போது
அவை
காதல் பற்றிய
"ஹைக்கூக்கள்" என்று
அழைக்கப்படுகின்றன.
சொற்களுக்கு
முட்கிரீடம் சூட்டி
சூன்ய வாதத்தையும்
மாயா வாதத்தையும்
காதலாக்கி
உன்னை
ஆதாம்களுக்கு ஏற்ற ஏவாளின்
மாடல்களாக்கி
மனம் களிப் பவர்களின்
தீனியாகி விடாதே.
மாதர் தம்மை அடிமையாக்கும்
மடமையை கொளுத்தும்
தீயாகி விடு.
காதல் சாக்கரின் தடவிய
இந்த பஞ்சுமி்ட்டாய்க்காரர்கள்
தூர ஓடிவிடுவார்கள்
உன்னைச்சுற்றி
சிலந்தி வலைகள் போல்
"ஜொள்" வலைகள்
பின்னும் இந்த கவிஞர்களிடம்
கவனம் தேவை..பெண்ணே
கவனம் தேவை.
இளந்தளிர்களே!
காதல் எனும்
மனிதநேயத்தின்
முதல் தீப்பொறியிலேயே
காதலைச் சுட்டு தின்று
உணர்ச்சியை பூதாகரமாக்கும்
புதுக்கவிதைப்பூச்சாண்டிகளை
புறந்தள்ளுங்கள்.
மிக மிக மெல்லிய
சோப்புக்குமிழிகளில்
சொர்க்கத்தீவுகள்
அமைத்து
கவிதைகளில்
கல்லா கட்டும்...இந்த
குல்லா வியாபாரிகளின்
குரல்களைப்
புரிந்து கொள்ளுங்கள்.
எதேச்சையாய்
அவர்கள் பேனா தெளித்த
மைப்புள்ளிகள் எல்லாம்
கால்விரல் நகத்துக்கு
பூசிய"மெகந்தி" என்பார்கள்.
சன்னல் கம்பிகள் வழியேயும்
முத்தம் இட
அந்த நிப்புமுனைகள்
உதடு குவிக்கும்.
கேட்டால்
அந்த பஞ்சுமேகம்
உன்
கன்னம் என்பார்கள்.
உன் கால்
கொலுசுகளின் ஓசைகள் பற்றி
"கொசுக்கடிகளாய்"
அவர்களின் வர்ணிப்புகள்.
அதற்கு யார் மருந்து அடிப்பது?
கவலை வேண்டாம்.
இந்த உலக மகளிர் தினமே
மருந்து அடிக்கட்டும்.
அதற்கான நேரம் இது.
உன் காற்சிலம்பை கழற்றி உடை.
உன் அறிவின் கதிரியக்கத்தில்
வைரங்கள் தெறிக்கட்டும்
வைரஸ்கள் தொலையட்டும்.
கன்னிப்பூவே!
கனவு மத்தாப்பு கொளுத்திக்கொண்டு
உன்னையே பின் தொடர்ந்து
பஸ்ஸில் ஏறி
ஒரு புழுக்கைப்பென்சிலை
வைத்துக்கொண்டு
நகரப் பேருந்து நடத்துனர்
எச்சில் தொட்டு
கொடுத்த
பஸ் டிக்கட்டின்
பிஞ்சு சீட்டில்
ஒரு பிய்ஞ்ச கவிதை என்று
வானவில்லையும்
வண்ணாத்திப்பூச்சியையும்
அதில்
கசக்கிப்பிழிந்து
வார்த்தைகளை வார்த்து தருவார்கள்.
கேட்டால்
அந்த பஸ்ஸில் வந்த
உன்
சுடிதார் வர்ணங்களே
அவை என்பார்கள்.
அண்ணா சாலை தோறும்
தூவிக்கிடப்பது
தூசிகள்
இல்லையாம்.
காதலிகளின்
இதய ரோஜாக்கள் தானாம்.
கேட்டால்
அண்ணா சாலை
அன்று மட்டும்
தார் பூசவில்லை
ரோஜாக்களை
பூசிக்கொண்டது.
ஏனெனில்
அன்று காதலர் தினம்
என்று ஒருவன் கவிதை எழுதுவான்.
வாசலில்
உன் சுண்ணாம்புக்கோல
வளைவு நெளிவுகள்
அவன் அம்மா
பிழிந்து தந்த
ஜிலேபியையை விட கூட
இனிப்பு என்பான் இன்னொருவன்
இந்த தப்புத்தாளங்களை
வைத்துக்கொண்டு
சாரம் இல்லாத சில
வாரப்பத்திரிகைகள
காரம்
ஏற்றிக்கொள்ளுகின்றன.
காதல் எனும்
பூங்குமிழிக்கு..அவர்கள்
பூப்பல்லக்கு தூக்கட்டும்.
ஆனால்
பெண்ணியம் எனும்
கண்ணியம்
உருவாகவிடாமல்
அதன் சவப்பெட்டிக்கு
அல்லவா
அந்த காகிதப்பக்கங்களில்
சல்லாத்துணி விரிக்கிறார்கள்.
மெல்லிய
மயிலிறகுகளைக் கொண்டு
காது குடையும்
இவர்களது
கிளு கிளுப்பு வேலைகளில்
இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டு
எங்கோ
தொலைந்து போகக்கூடாது அல்லவா?
கம்பியூட்டர் வகுப்புகள்
காமன் கரும்பு வில்லேந்தும்
களம் ஆகிப்போனதாய்
கணினியின்
பூலியன் அல்ஜீப்ராவில்கூட
காதலியின்
"ப்ரா" தைத்து
இவர்கள் கவிதை எழுதிவிடுவார்கள்.
கார்டியாலஜி என்றால்
இதயம் பற்றி
மட்டுமே
இந்த மக்கு டாக்டர்கள்
விரிவுரை ஆற்றுவார்கள்.
இதய வடிவில்
அவள்
அனுப்பியிருக்கும். அந்த
வேலண்டின்
"கார்டு"பற்றி
இவர்களுக்கு என்ன தெரியும்.
இந்த கார்டு
கொஞ்சம்
கசங்கினாலும்
எனக்கு
"இஸ்கேமியா" தான்.
காதலின்
இன்னொரு
இனிமையான பெயரும்.
இஸ்கேமியா" தான்.
மூட ஜனங்களே தெரிந்து கொள்ளுங்கள்
என்று
காதல் பற்றி ஒரு "மேனிபெஸ்டோ"
எழுதித்தள்ளுவான்
ஒரு இந்திரஜாலக்கவிஞன்.
புதுக்கவிஞர்களே
இன்று மட்டுமாவது
உங்கள் கவிதைகளுக்கு
விடை கொடுங்கள்.
இதற்கு
உலகத்து பெண்ணியமே
ஒன்று படு! போராடு!
இதனால் நீங்கள் இழக்கப்போவது
ஒன்றுமி்ல்லை.
முலாம் பூசிய
புதுக்கவிதைகள் எனும்
காக்காய்ப்பொன் விலங்குகளே
========================================================================ருத்ரா
08-03-2009
No comments:
Post a Comment