2009-07-09

பேழைக்குள் ஒரு பிரளயம்.

பேழைக்குள் ஒரு பிரளயம்.
===================================ருத்ரா
(மைக்கேல் ஜாக்ஸன் மறைவுக்கு ஒரு கவிதை அஞ்சலி)


கரடு முரடாய் வாழ்க்கை.
கனவுகளோ மூளி வானத்தை
பாதாம் அலவாவின் கனசதுரங்களாய்
வெட்டி வைத்திருக்கின்றன.
மொய்த்துக்கொண்டிருப்பது
கொசுக்களா?
பூச்சிகளா?
தேனீக்களா?
இல்லை சாக்கடை ஈக்களா?
அந்த "காதலைத்தான்" சொல்கிறேன்.
ஏக்கத்தின் தீக்கொளுந்துகளில்
ஜீன்ஸ் அணிந்து கொண்டு
ந‌ட‌மாடிக்கொண்டிருந்த‌ போதும்
ந‌ர‌ம்புக்கூட்ட‌ங்க‌ளின்
வ‌ர‌ம்புக‌ள் அறுந்துபோய்
அவிழ்ந்து நிற்கின்ற‌ன‌.

கம்பிக்காடுகளில்
பங்களாக்களில்
பதுங்கிக்கொண்டு
என்னத்தைப் பார்க்கிறீர்கள்?
சுவாசங்களில் கந்தல்விழுந்த
அந்த நுரையீரல்களை கழற்றிவைத்துவிட்டு
இசையின் புதிய யுகத்தைப்பூங்கொத்தாக்கிய
நுரையீரல்களை சூட்டிக்கொள்ளுங்கள்.
எத்தனை ஓசைகள்! எத்தனை வண்ணங்கள்!
தேன்சிட்டுகள் ரெக்கைகளில்
அதிரும் ஏ.ஆர்.ரஹ்மான்கள்
தட்டாம்பூச்சிகளின் கண்ணாடி சிறகுகள்...
அதில் எவ‌னாவ‌து ஒரு புதுக்க‌விஞ‌ன்
தாஜ்ம‌ஹால்க‌ள் க‌ட்ட‌த்த‌விப்ப‌து...
அதோ வான‌த்தை பிய்த்துக்கொண்டு கொட்டுகிற‌தே
மைக்கேல் ஜாக்ஸ‌னின்
"த்ரில்ல‌ர்" இசைக்குழ‌ம்பின்
வ‌ர்ண‌ப்பிர‌வாக‌ங்க‌ள்....
அவ‌னா இற‌ந்துவிட்டான்?
இந்த‌ செவிக‌ளுக்குள்
செதில் உதிர்த்துக்கொண்ட‌ இத‌ய‌ங்க‌ள்
இத‌ய‌ங்க‌ளுக்குள்
செதுக்கிக்கொண்டேயிருக்கும்
அவ‌ன் ர‌த்த‌ங்க‌ளின் ச‌ப்த‌ங்க‌ள்..
கோடி கோடி டால‌ர்க‌ள் கொட்ட‌த்த‌யாராய்
இருக்கும்
ர‌சிக‌ சூறாவ‌ளியின் அக‌ல‌விரித்த
பெருங்க‌ர‌ங்க‌ள்...
"ஒன்றாய் குர‌லெழுப்பினால்
ந‌ட‌க்காத‌து ஏதுமில்லை"
இந்த‌ உல‌க‌த்துக்கே வ‌லிக‌ள் தீர‌
சிகிச்சை அளிப்போம்"...
குர‌ல்க‌ள் ம‌ழை பொழிகின்ற‌ன‌.
இது க‌ண்ணீர் அல்ல‌.
வைரக் "கிடாரை" த‌ங்க‌ப்பேழைக்குள்
வைப்ப‌து போல்
அவ‌ன் உட‌ல் அட‌க்க‌ நிக‌ழ்வு
இந்த‌ உல‌க‌த்தையே உதிர‌வைத்த‌து.
அந்த பேழைக்குள் கிடப்பது
தூக்க மாத்திரைகளின் சதியோ?
தூங்காத இசையின் நதியோ?
எதுவாய் இருப்பினும்
அந்த பேழைக்குள் இருப்பது
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
ஒரு பிரளயம்.
எம‌ன் எனும் பொறாமைப்பிண்ட‌மே!
உன் தோலையே உரித்துப்போட்டுவிட்டு
ஒரு பிளாஸ்டிக் ச‌ர்ஜ‌ரி செய்துகொண்டு வா!
இவ‌ன் இசையை உன்னால்
உருவாக்க‌ முடியாது.
ஐம்ப‌து வ‌ய‌துக்குள்
அவ‌னை ப‌ல‌கார‌ம் ப‌ண்ணிவிட்டேன் என்று
கொக்க‌ரிக்காதே.
நீ தின்ற‌து இவ‌ன் ச‌தையை ம‌ட்டும் தான்.
இசை "டோர்ன‌டோவாய்"
உய‌ர‌ங்க‌ள் எல்லாம் க‌ட‌ந்து
ஒரு சுழ‌லில் "ஃபுன‌ல்" வ‌டிவில்
விஸ்வ‌ரூப‌ம் எடுத்துக்கொண்டு நிற்கிறான்.
ஓ! ம‌னித‌ர்க‌ளே!
உங்க‌ள் துய‌ர‌ங்க‌ளை இதில் வ‌டிக‌ட்டிக்கொள்ளுங்க‌ள்.
ம‌னித‌ப்பிற‌விக‌ள் பிரபஞ்சக்கூழாய் க‌ரைந்து
அந்த‌ "எத்தியோப்பிய‌" சிசுக்க‌பால‌ங்க‌ளிலும்
க‌ண் குழிக‌ளிலும் உயிர் ஈர‌த்தை
ந‌க்கிக்காட்டுகிற‌து அது.
தாய்மையின் க‌த‌க‌த‌ப்பே அந்த‌ இசை.
இசைச் சுர‌ங்க‌ளுக்கு
ச‌ங்க‌மம் தான் உண்டு; ச‌மாதிக‌ள் அல்ல‌.
லாஸ் ஏஞ்ச‌ல‌ஸின் "ஸ்டேப்ள‌ர்ஸ் சென்ட‌ரில்"
அன்று (ஜூலை 7 2009)
தேச‌ எல்லைக‌ளின் காங்கிரீட் கோடுக‌ள் கூட‌
நொறுங்கிப்போயின‌.
குறுகிய‌ வ‌ன்முறைக‌ள் தொலைந்து போயின‌.
வெள்ளைக்க‌ண்க‌ளிலும்
க‌ண்ணீர்க்க‌ருங்க‌ட‌ல் முட்டிநின்ற‌ன‌.
நினைவின் க‌ட்ட‌ங்க‌ள்
சிறைவைத்திருக்கும்
இந்த‌ புழுக்கூட்டை உடைத்துக்கொண்டு
புற‌ப்ப‌ட்டு வ‌ருவேன்.
என்று ஒரு புதிய‌ இசையை
அந்த‌ ஹாலிவுட் ஹில்ஸின் தூரிகைப்புல்க‌ளில் கூட‌
ந‌ம்பிக்கையின் மெட் அமைத்து
பாடுகிறான் அவ‌ன்.
தியாகைய்ய‌ர் ஆராத‌னையென்றாலும் ச‌ரி
செம்ம‌ங்குடியின் தொண்டைக்குழியென்றாலும் ச‌ரி
என‌க்கு அதில் மைக்கேல் ஜாக்ஸ‌னின்
ஜெண்டை வ‌ரிசையும் க‌ம‌க‌மும் கார்வை நூற்கிற‌து.
அந்த‌ திருவால‌ங்காட்டு சிவ‌ன்
மைக்கேல் ஜாக்ஸ‌னாய்
மைக் பிடித்துக்கொண்டு ஆடிப்ப‌டுகிறான்.
திவ்ய‌மாய் கேட்க‌லாம் வாருங்க‌ள்.
=========================================================

ருத்ரா
(இ.ப‌ர‌ம‌சிவ‌ன்)
த‌வுச‌ண்ட் ஓக்ஸ் (லாஸ் ஏஞ்ச‌ல்ஸ்)
க‌லிஃப்போர்னியா
யு.எஸ்.ஏ.
<>

.

No comments: