தீபாவளி வாழ்த்துக்கள்
___________________________________________
ருத்ரா
ஒரு வழியாய் இறந்துவிட்டான்
எண்ணெய் தேய்த்து குளித்து
கொண்டாடுவோம்.
புத்தாடையுடன் பட்டாசுகளுடன்.
இறந்தது யார்?
நரகாசுரனா?
தீர்த்தங்கரரா?
நெடுஞ்சாலைகளும்
கடைத்தெருக்களும்
பிதுங்கி நசுங்கி வழிய
பயணம் தான்.
அதில் நசுங்கிப்போவது
யார் அல்லது எது?
தமிழா! தமிழா!
அது நீயே தான்.
உன் வரலாறு தான்.
உன் தமிழ் இனம் தான்.
வராக அவதாரத்து திருமாலும் பூமாதேவியும்
திருமணம் புரிந்ததில்
ஒரு மண்ணின் மனிதன் தானே
பிறந்திருக்க முடியும்.
வராகமாய் பூமியைக்காத்து உழுத
ஒரு உழவன் தான் பிறந்திருக்க முடியும்.
கடவுளே
அப்படி மண்ணின் மைந்தனாயும்
உழவச்செல்வனாயும்
பிறந்தவன் எப்படி அசுரன் ஆனான்?
கடவுள் அசுரன் ஆகித்தான்
ஆரியன் அல்லாத திராவிடனை
வதம் செய்ய வேண்டும்.
ஓநாய்கள்
ஓடையில் மேல் திசையில் இருந்து
தண்ணீரைக்கலக்கியதாய்
ஆட்டுக்குட்டிகள் மேல் பாய்ந்தது போல்
ஒரு புளுகுக்கதை புராணமே
இங்கு வதம் செய்ய வந்திருக்கிறது.
தமிழர்கள் தங்களையே வதம் செய்யும்
அவலங்களின் திரியைப்பற்றவைக்கும்
இந்த உற்சாகங்களில்
தீபாவளி களை கட்டுகிறது.
தீபாவளிக்களையை
என்றைக்கு பறித்து எறியப்போகிறோம்?
பிதாவே!
இவர்களை மன்னியும்.
இவர்கள் உற்சாகமாயிருக்கிறார்கள்.
எப்படியேனும் உற்சாகமாக இருக்கிறார்களே.
அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!
_________________________________________________________
2 comments:
இரசித்தேன் நண்பரே...
மகிழ்ச்சி நண்பரே!
Post a Comment