வீரசிவாஜி வாழ்க!
_______________________________________
ருத்ரா
வீரசிவாஜியே வாழ்க.
அந்த மராட்டிய மன்னனை அல்ல
உன்னைத்தான் சுட்டுகிறோம்.
வழக்கமான
ஒரு மூக்குப்பொடி சிட்டிகையில்
எழுதிக்குவித்த அந்த நாடகப்பக்கங்கள்
எல்லாம்
நம் பேரறிஞர் வெடித்த பீரங்கிகள்
அல்லவா?
சிம்மக்குரலோனே அன்று நீ
கர்ஜித்த வீரம்
இன்றும் தன் சூடு அடங்க வில்லை.
தமிழா!தமிழா!
சூத்திரன் சூத்திரன் என
இழிவு படுத்திய
ஆதிக்க கும்பலின்
கும்பாபிஷேகங்களில்
கரைந்து விடாதே.
சிவாஜி வெடித்த தமிழ்
உன்னிடம் உண்டு.
அதைக்கொண்டு
தமிழா
நீ ஆயிரம் எரிமலைகளை
பற்ற வைத்துக்கொள்.
உன் மீது கிடக்கும்
அடிமை சாசனங்கள்
எரிந்தொழியட்டும்.
இமயங்கள் கூட
வணங்கிக்குனிந்ததே
வீர சிவாஜியாய் நீ
வீறிட்ட குரலில்.
நடிகர் திலகம் அவர்களே!
"சிந்து நதியின் மிசை நிலவினிலே.."
என்ற பாடல் காட்சியில்
பாரதியின் அந்த
முறுக்கிய மீசையிலும்
கங்கு விழிகளாய் தெறித்த
பார்வையிலும்
எங்கள் உடம்பெல்லாம் இன்றும்
சிலிர்த்து நிற்கிறது.
நடிப்பின் மேதையே!
உன் நடிப்புக்கடலில்
நீரை எங்கு அள்ளினாலும்
எங்கள் இதயங்களே அங்கு
மீன்களாய் துள்ளித்தும்பும்.
உன் நடிப்பின் மொழியும்
நம் தமிழ் போல்
ஒரு செம்மொழி தான்.
நடிப்பின் எம்மொழியும்
அதில் தான் உயிர் தரிக்கும்.
ஓங்குக
நடிகர் திலகம் சிவாஜியின் புகழ்!
___________________________________________________
2 comments:
திரு.சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கான கவிதை அருமை.
நன்றி! எத்தனை ஆண்டு ஆனாலும் சிவாஜி இங்கே ஒரு "ஒளிச்சன்னல்".".
Post a Comment