2021-08-28

பேய்


 பேய்

=======================================ருத்ரா


ஆற்றங்கரை மருத மரம்.

அடியில் நான்

கற்சிலையாய்

மரத்தின் கிளை ஆடும் நிழலை

ஆற்றில் சுழிப்பில்

பார்த்து பார்த்து

காலத்தருணங்களோடு

என்னை நெசவு செய்து கொண்டேன்.

நிழல் கையாட்டி விடை கொடுப்பது

தெரிந்தது.

வளையல்களுடன்

அதன் ஒலிகளுடன்....

இறுதியாய் குமிழிகளுடன்.

அவளை காப்பாற்ற‌

அவளோடு மூழ்கிபோகாத‌

கோழையாகிபோனேன்.

என் வாழ்க்கை மிச்சத்தை

ஒரு எலும்புக்கூடாக்கிக்கொண்டேன்.

காலம் இதையும்

ஒரு "நோவாக்கப்பல்" ஆக்கியது.

பிரளயத்தில் மிதந்து கொண்டு தான் போகிறேன்.

சிரிப்புகள் கூத்துக்கள் அதன் கூடுகள்

குஞ்சுகள் சிறகுகள் 

எல்லாமே ஒரு தேசம் ஆகியது.

ஆனால் வெறுமையின் தேசம்.

அவள் சிரிப்பு மட்டும்

எங்கிருந்தோ இன்னும் கேட்கிறது.

உற்றுக் கேட்டு

கூர்மையாய் நான் கரைந்தே போனேன்.

மருதமர கிளையும் இலைகளும்

எதேதோ பேசின.

அப்பா..என்னப்பா?

பேசவே மாட்டேங்கிறே..

என் மடியில் இருந்த என் குழந்தையின்

குரல் இது..

ஐயோ இவ்வளவு நேரம்

குழந்தை திக்கு முக்காடிப்போயிருப்பாளே!

இறுக்க அணைத்துக்கொண்டு

முத்தங்கள் பொழிந்தேன்.

குழந்தை இப்போதும் 

திக்கு முக்காடிப்போயிருப்பாளோ!

அந்த இடைவெளி எனும்

காலப்பிசாசு

செத்தொழியட்டும்

இந்த முத்தங்களின் குத்தீட்டிகளில்

செத்தொழியட்டும்.

ஹா..ஹா..ஹா..ஹா

என் சிரிப்பைக் கண்டு குழந்தை பயந்தாள்!

"அப்பா என்னாச்சு?"

"ஒண்ணுமில்லம்மா..சும்மாதான். 

ஒரு குஷியிலே தான்"

"ஹா..ஹா...ஹா..ஹா.."

"பயந்துட்டியா அப்பா?

நானும் குஷியில‌ தான்!"

குழந்தையும் சொல்லிச்சிரித்தாள்.


===============================================

23rd Sep 2016

பேனாவின் வழியே வழிந்தது ஒரு 

"மின் சிறுகதையாய்"இக்கவிதை.

=======================================ருத்ரா

No comments: