வேடிக்கை பார்த்துக்கொண்டே இரு.
_____________________________________________________ருத்ர
ஓ! தென்னை மரமே!
வேடிக்கை பார்த்துக்கொண்டே இரு.
உன் கூந்தலை
சிலுப்பி சிலுப்பிக்கொண்டிருந்தாலும்
ஒன்றும் நிற்கப்போவதில்லை.
இந்த மக்களின்
கண்ணாடி பிம்பம்
சுக்கல் சுக்கலாக
நொறுங்கிக்கொண்டிருக்கிறது.
அப்போதும்
இந்த மண்ணின் கனவு
மொழி இனமாண்பு
எல்லாம்
நொறுங்கிப்போன நிழல்களாக
கீழே கிடக்கின்றது.
பன மரத்திற்கும் தென்னை மரத்திற்கும்
ஈச்ச மரத்திற்கும் விடுதலை
என்று அன்று
நம் சுதந்திர சுவாசத்தை
கொண்டாடினார்கள்.
ஆனாலும் நம் வெளிச்சக்கதிர்கள்
எல்லாம்
அந்த கண்ணாடிப்புட்டிகளின் வழியே
இன்னும் இங்கே
ஏழுவர்ணம் காட்டுகின்றது.
பழைய பத்தாம்பசலிகளின்
நான்கு வர்ணங்களோடு
இன்னும் பல
குறுகியவெறி வர்ணங்களும்
சேர்ந்து
அதோ தோரணங்கள் ஆடிக்கொண்டே தான்
இருக்கின்றன.
புதிய கொண்டாட்டங்களுக்கு
கொடியை
துணிவிரித்துக்காட்டப்போகும்
உற்சாகங்களையும்
வேடிக்கை பார் தென்னை மரமே!
எத்தனையோ கோடி மக்கள்!
இவர்கள் எழுச்சி பெற்றால்
என்னாவது?
ஓ மக்களே!
பத்து பேருக்கு நூறு ஒற்றர்கள்!
இதற்கு பேரா நாடு?
உங்கள் முதுகை சுரண்டிக்கொண்டிருக்கும்
அந்த முட்களின் காம்பினிலே தான்
முகம் காட்டுகின்றன
அந்த மூவர்ணரோஜாக்கள்.
__________________________________________
No comments:
Post a Comment