2016-09-18

இனியதோர் விடியல் ஆக்கு !

ஆகஸ்டு பதினைந்தே வருக வருக!
==================================================ருத்ரா

காலண்டர் தாள் சரசரப்புகளில்
ராணுவ பூட்ஸ்களின்
மரியாதை ஒலிகள் கேட்கின்றன.
அலங்கார வண்டிகள்
மாநிலம் மாநிலமாய்
பொம்மைக்காட்சிகளில் உயிர் பூசி
மிதந்து வருகின்றன.
ஆனந்த வெள்ளம் திரள்கிறது.
வந்தேமாதர முழக்கத்தின்
புடைப்பு பரிமாணம்
நம் நெஞ்சங்களில் விம்மிப்பெருகுகின்றது.
அது முக்காலங்களின்
வரலாற்றுக்கனத்தின்   பரிமாணம்.
நேற்று இன்று நாளை
என்று
எப்படிப்பார்த்தாலும்
வேர்வை கண்ணீர் ரத்தம்
என மூன்று அதிர்வலைகளில்
கனல் மூட்டும் பரிமாணம்.
சாதி சமய வர்ணங்கள் அற்ற
சமூக நீதியின் ஜனநாயகப்பூங்கா நோக்கி
நடை போட வந்திருக்கும்
இன்றைய "ஆகஸ்டு பதினைந்தே"
உன் பின்னே
சுரண்டல் அநியாயங்களால்
நியாயக் க‌பாலங்களின்
நொறுங்கும் ஒலி கேட்கிறதா?
மேலை நாடுகளில்
மனிதன் கீழே மலங்கழிப்பான்.
ஆனால்
மனிதன் மலங்களுக்கும் கீழேயும்
வாழ்ந்துகழிக்கும் நாடாய்த்தான்
நமது புண்ணிய பூமி புல்லரித்து நிற்கிறது.
நாம் எல்லோரும் கடவுளின் குழந்தைகள்
என்று
நம் மீது  நாமே
பூமாரிப்பொழிந்து
புளகாங்கிதம் அடைந்த போதும்
அஞ்சாவது வர்ணத்தவர்கள்
யாருக்கோ பிறந்தவர்கள் என்று
எகத்தாளம்
செய்பவர்களின பூமியா ..நம்
இந்திய பூமி?
சாதிக்கலப்புத் திருமணங்களை
பொறுத்துக்கொள்ளாமல்
ஆணவக்கொலை என்ற பெயரில்
கசாப்பு செய்வதையும்
ஆடாமல் அசையாமல் நின்று
பார்த்துக்கொண்டிருக்கும்
"மரப்பாச்சி" ஜனநாயக‌மா
இந்த ஜனநாயகம்?
"ஆகஸ்டு பதினைந்தே!"
வழக்கமாய் கிழித்துப்போடும்
வெறும் காலண்டர் தாள் அல்ல நீ!
இன்று
புதுத்தீயில் புதுப்பித்து பதிப்பித்து
புடம்போட்டு வந்த
புதிய ஆகஸ்டு பதினைந்து நீ!
புதிய அர்த்தங்களோடு
காலண்டர் தாள்கள்
அக்டோபர்களையும் நவம்பர்களையும்
அந்த அசைவுகளில்
அசைபோடத் தொடங்கினால்
அதன் காற்றுக்கென்ன வேலி இங்கே?
அந்த கேள்வியின்
ஊற்றுக்கென்ன பதில் கள் இங்கே?
ஓ! எங்கள்  இதயமான  இந்தியாவே!
சமுதாய நீதியின் வெளிச்சமாய்
ஒரு "ஆகஸ்டு பதினைந்தை"
எங்களின்
இனியதோர் விடியல் ஆக்கு !
அதுவரை
எங்கள் நாளங்களும் நரம்புகளும்
புடைக்கட்டும்.
துடிக்கட்டும்.
"ஜெய்ஹிந்த்"

============================================================

__________________________________

ஆழ்ந்த நம் இரங்கல்கள்
===================================ருத்ரா இ பரமசிவன்

(கவி வேந்தன் நா.முத்துக்குமார் மறைவுக்கு
நம் ஆழ்ந்த இரங்கல்கள்)



வயதுகளின் நுழைவாயில்
கட்டி முடிக்கும் முன்னே
வாழ்க்கைக்கோபுரமே
சாய்ந்து விட்ட கொடுமை என்ன?

இப்படியே விட்டால் நீ
பாட்டெழுதி பாட்டெழுதியே
நூலேணி ஏறி வந்து என்
அரியணையையும்
அபகரிக்கும் அபாயம்
வந்து விடும் என்று தான்
இப்போதே உனை நான்
எடுத்துக்கொண்டேன்
என் மடியில்
என்றெழுதினான் ஒரு பாட்டு
இறைவனுமே!
................
இந்தப்பாட்டும்
நா(வல்ல)முத்துக்குமார்
எழுதிக்கொடுத்து
இறைவன்
கீழே வீசியது தான்.

=====================================================================















2 comments:

KILLERGEE Devakottai said...

///மரப்பாச்சி" ஜனநாயக‌மா இந்த ஜனநாயகம் ?///

சவுக்கடி வார்த்தைகள் உணர்ச்சிகரமான கவிதை அருமை ஐயா.

கவிஞர் நா.முத்துக்குமாரின் ஆன்மாவுக்கு எமது அஞ்சலிகள்
- கில்லர்ஜி

ruthraavinkavithaikal.blogspot.com said...

mikka nanRi naNbarE..intha paakkam naan vanthu oru aantukku mEl aakivittathu.
kaalam thaazththtiya en nanrikku mika varuththam ataikiREn.PLEASE BEAR WITH ME