2015-12-31

"கண்ணாடி வளையல்கள்"...ருத்ரா

Sunday July 2, 2000
கண்ணாடி வளையல்கள்
- ருத்ரா.


1
நீ
ஒலித்தாலும்
உடைந்தாலும்
இனிக்கும்.
2
கண்ணாடி
வளையல்களிலிருந்து
கண்ணாடி விரியனா
தீண்டியது ?
மூச்சை நிறுத்தியது
உன் ஓசை.
3
உன் ஓசைப்பூக்கள்
உதிர்க்கும்
மகரந்தமே
என் அன்றாட உணவு.

4
கண்ணாடி ஓசைக்குள்ளும்
கனமான சம்மட்டிகளா ?
என் இதய நாளங்கள்
கொல்லம்பட்டறை ஆனது.
ஆனாலும்
துடித்து துடித்து
அது அடித்தது
அத்தனையும்
அந்த மயிற்பீலியின்
அசைவுகள் அல்லவா ?

5
தாஜ்மகாலை
உருக்கிச்செய்ததில்
உன் ஓசையில்
காதலின்
உளிச்சத்தங்கள்.

6
சோழிகளைக்
குலுக்கி
எப்படி
இப்படி ஒரு
புதை குழி
வெட்டினாய்.
அமிழ்ந்ததும்
புாிந்து கொண்டேன்
அத்தனையும்
அமிழ்தம் என்று.


7
தைரியம் தான்!
கண்ணாடி
வீட்டுக்குள்ளிருந்து
கல்லெறிகின்றாய்.
ஏனென்றால்
நீ
உடைந்தாலும்
நொறுங்கிப்போவது
நான் தானே!

8
உன் ஒலியை
என்றோ கேட்டது.
அது என்னை
விரட்டிக்கொண்டேயிருக்கிறது.
கடந்து போகட்டும் என்று
நின்று பார்த்தேன்.
அது இப்போது
என்னை
இழுத்துக்கொண்டே
ஓடிக்கொண்டிருக்கிறது.


9
எந்த ாிஷி சபித்தது ?
செம்மங்குடிகளும்
பாலமுரளிகளும்
உன் கண்ணாடிக்
குருகுலத்தில் கிடந்து
இதன் ஓசைகளில்
'சாதகம் '
செய்யவேண்டும் என்று ?


10
உன் ஓசைகளின்
பின்னேயே சென்று
நின்றேன் ஒர் இடம்.
இன்னும் உனக்கு
நாலு ஜோடி வளையல்கள்
விலை கேட்டேன் அவனிடம்.
'ஜோடியாய் எல்லாம்
கிடைக்காது '
என்று சொல்லிச் சிரித்தான்
கடைக்காரன்.
ஏனென்றால்
நான் போய் நின்றது
' ஒரு வீணைக்கடை '.

11
உன் ஓசையின்
கைதி நான்.
நன்றாய் உற்றுப்பார்.
உன்
கண்ணாடி வளையல்கள்
என் கை விலங்குகள்.


12
கிளு கிளு வென்று
எனக்குள்
'கிடார் ' வாசித்து
கிறு கிறுக்க வைத்தது
போதும்!
'மன நல மருத்துவ '
மனைக்கு
நான் போகும் முன்
என் மனதுக்குள்
வந்து விடு.


13
நீ
கிளப்பிய ஒலிகள்
வெறும்
'டெசிபல் 'களாய்
காற்றில் கிடந்தபோது
ஒரு நாள்
நான் அதில்
இடறி விழுந்தேன்.
வீணை இடித்து காயமா ?
இந்த விழுப்புண்ணுக்கு
வானவில்லில்
ஒரு 'பேண்டேஜ் ' போட்டேன்.
கனவை
விரித்துப் படுத்து
புரண்டு கொண்டிருக்கிறேன்
உறக்கம் வராமல்.



14
என் கற்கோட்டைக்குள்
கலகம் மூட்டும்
கண்ணாடிச்சிப்பாய்களே.
உங்கள் ராணியிடம்
சொல்லுங்கள்
ஓசை அம்புகளால்
நான் வீழ்ந்து விட்டாலும்
இந்த 'ராஜ்யத்தில் '
தோல்வியின் அர்த்தமே
வெற்றி தான் என்று.


Thinnai 2000 July 02
திண்ணை

Thursday November 20, 2008

2015-12-27

இருளிலிருந்து ஒளி......






இருளிலிருந்து ஒளி......
=============================================ருத்ரா


"தமஸோ மாம் ஜ்யோதிர் கமய..."
அந்த கும்மிருட்டுக்கும்
நீலப்பிழம்பின் வானச்சதைக்கும்
சமஸ்கிருதம் புரியவில்லை.
தமிழும் தெளியவில்லை.

விதை பிளந்து
மண்ணைத்தின்றது.
வேர் நீட்டி
நீர் குடித்தது.
மயிர்கள் போல வேர்த்தூவியாய்
மண்ணின் இதயத்தோடு
நாளம் ஆகி நாட்கள் நகர்த்தியது.
வெளியே
செடியாய் மரமாய் கிளையாய்
விழுது வீழ்த்தி
நிலை பெற்றது.
சிவப்பு ஆலம்பழத்தை
அந்த பச்சைக்கிளி
சுவைத்து துப்பிய‌
கடுகினும் சிறிய விதைக்குள்
இத்தனை பெரிய ஆரண்ய காண்டம்
எப்படி நுழைந்தது?
இது விதையல்ல.
இது மனிதக்கேள்வி!
இது பற்றி யெரிந்து வேள்வியானதில்
கேள்வியும் எரிந்து விடையும் எரிந்து
சாம்பல் மட்டுமே மிச்சம்.
எஞ்சி நின்ற நாலு வர்ணத்தில்
நான்காவதாயும் ஐந்தாவதாயும்
மனிதன் சேற்றுப்புழுக்களாய்
நெளியவோ
இத்தனை அவதாரங்கள் கடவுளுக்கு?
இந்த மார்கழிப்பனியிலும்
எரிமலை லாவா
மனதுக்குள் ஓடுகிறது.
சங்கரர் தன் உள்ளத்து தீயால்
சுட்டுக்கொண்டு
பாடிய வரிகளைப்பாருங்கள்!

"கிம் கங்காம்புனி பிம்பிதே அம்பரமணௌ
சண்டாலவாடீபயஹ.
பூரே சாந்தரமஸ்தி காஞ்சன கடீ
ம்ருத்கும்பயோர்வாம்பரே.
ப்ரத்யக்வஸ்துனி நிஸ்தரங்க சஹஜானந்தாவ‌
போதாம் புதௌ.
விப்ரோஅயம் ச்வபசோயமித்யபி மஹான்
கோஅயம் விபேதப்ரமஹ."

இது அவரது மனீஷா பஞ்சகம் எனும்
மன உறுதிப்பாடல்களில் ஒன்று.

"கங்கை நீரிலும் சண்டாளன் வீட்டு அருகில் உள்ள
சாக்கடை நீரிலும் பிரதிபலிக்கின்ற சூரியனிடம்
வேற்றுமை ஏதாவது உண்டா?
பொன் பாண்டத்திலும் மண் பாண்டத்திலும்
உள்ள வெளியில்(ஸ்பேஸ்) வேற்றுமை இருக்கிறதா?
அலையில்லா சுபாவத்தைக் கொண்ட அளவில்லா
பேரானந்த கடலான உள்ளார்ந்த ஆன்மாவில்
இவன் பிராமணன்
இவன் நாய் மாமிசம் உட்கொள்பவன் என்ற‌
இந்த மகத்தான வேற்றுமை எனும் மோகம்
எங்கிருந்து வந்துள்ளது?"

இது சுவாமி ரங்கநாதானந்தரின்
அருமையான மொழி பெயர்ப்பு.
இன்னும் அர்ச்சகர் நியமனத்தில்
நீதியே இர‌ட்டை வேடம் போடுகிறது.
மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள்
அடித்துக்கொல்லப்படுகிறார்கள்.

அடித்துக்கொல்லப்படுவது
ஆதி சங்கரரா?
இல்லை
அந்த பிரம்மம் என்னும்
பரம்பொருளா?

ஆத்மீக பூமியான பாரத‌த்தில்
எப்படி இப்படி ஒரு
பாதக நிழல் படர்ந்தது?

=========================================================