அகழ்நானூறு 15
___________________________________________
சொற்கீரன்
"வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை"
_____________________________________________________
வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை
கண்பதித்து வழிபூத்த விழிமீன் துள்ளுநிரை
எல்மேவு அகல்வானின் கவுள்வெள்ளி வேய்விரீஇ
முகை அவிழ்க்கும் மெல்லிமிழ் நின் நகை
கண்டல் அல்லது யாது உற்றனள்.
கூன்முள் முள்கு குவித்தலைப் பெருமீன்
குய்தர பொங்கும் நுரைகடல் சேர்ப்ப!
திரை திரை பாய்ந்து துறை துறை ஊர்ந்து
ஞாலத்து உப்பக்கம் நெடுங்கரை சேர்ந்து
கனைபடு பல் ஒலி பல் தேஅத்தும் ஊடி
மறைபடு மொழிகள் பல ஈண்டு கொணர்ந்து
செறிதமிழ் அடர்த்தி செந்தமிழ் ஈன்று
செம்மை நன்மொழி ஆக்கிய திரைஞர்
திரை இடத்துப் பட்டினம் தந்தனர் தமிழர்.
அன்னவன் நின்னவன் ஆருயிர்த்தமிழன்.
முன்னீர்ப்பரவை முளிஅலை வென்று
திரைவியம் தேட நீலப்படுகை நெடும் ஊழ்
கடாஅ யானை அன்ன எழுந்து அதிரச் சிதைஇ
ஆழ்கடல் ஆளும் தகைமை ஆயிரம் இறந்து
உலகு வியப்ப விண்ணும் அளந்த
பெரியோன் என்ன உன்னை ஒருசிறை
பெயர்த்துப் பெயரத் தந்தோன் வரூஉம்.
எறி எல் நாளும் பூக்கும் அவிழ்க்கும்
அணிநிரல் வென்றிக் கொடி கொண்டு
ஆயிழை உன்னைத் தழீஇயத் தந்திடும்
நெடும்பணைத்தோளொடு விரையும் மன்னே.
___________________________________________________________
No comments:
Post a Comment