நிழலாடு முன்றில்
_______________________________________________
சொற்கீரன்
வீட்டு முற்றத்து கிரில்
வீட்டுக்குள்
சூரியனைக்கொண்டு
நிழலைக்கலந்து
பிக்காசோவை பிசைந்து
ஊற்றியிருந்தது.
கிரேக்கத்து அந்த அழகிய அரக்கி
மெடுஸா
கூந்தலின் ஒவ்வொரு இழையிலும்
பாம்புகளாய் நெளிந்து
சிரித்துக்கொண்டிருந்தாள்.
காற்றெல்லாம் நஞ்சு.
எப்படி நஞ்சு கூடவா அழகு?
ஆமாம்
இரண்டும் ஒன்று தான்.
அது அரக்கர்களிடம் இருந்தால்
நஞ்சு.
தேவர்களிடம் இருந்தால் அது
அமுதம்.
என்ன ஒரு மோசமான கணிதம்?
சமன்பாட்டை மாற்றிவிடத்தான்
சிவன் எண்ணினான்.
அதை அவனே குடித்துக்கொண்டான்.
அப்படியும்
பிதுங்கி வெளியே வழிந்தது
நான்கு வர்ணமாய்!
அது அவனுக்கு மட்டுமே தெரியும்.
தேவர்களே அரக்கர்கள் என்றும்.
அரக்கர்களே தேவர்கள் என்றும்.
அதை தெரிவிக்க
அதோ
அவன் உடுக்கை ஒலிகள்
துடிக்க துடிக்க
கேட்டுக்க்கொண்டே இருகின்றன.
மாலை வந்தது.
நிழல்கள் கரைந்தன.
சமநீதியற்ற அந்த
நிஜங்களின் முள் மண்டிய
தேசத்தில்
கால்களின் ரத்தம் பீறிட பீறிட
அவன் ஆடிக்கொண்டே இருக்கிறான்
அந்த
"ஊர்த்துவ தாண்டத்தை"
_______________________________________
No comments:
Post a Comment