2023-02-08

அயலி

அயலி
___________________________________________
ருத்ரா



வயசா?
வயசுக்கு வருதலா?
எது முந்தி வருகிறது?
எது உந்தி தள்ளுகிறது?
மின்னலடிக்கும் 
பெண்மை
தனக்குள்
கருவில்லாமலேயே 
ஒரு பயம் எனும் கருவை
சுமக்கிறது.
பிறக்காமலேயே 
பிறக்கப்போகும் அந்த‌
சமுதாய அரக்கனின்
கொடுமைகள் 
எத்தனை? எத்தனை?
ராமாயி வயசுக்கு வந்துவிட்டாள்
என்று
அன்று ஒரு படம்.
மாமூலான அந்தக்கதைக்கருவுக்கு
கிராமத்து ராட்சசமும் மூர்க்கமும்
ஒரு நெஞ்சத்துக்கிள்ளலுக்கு
தீ வளர்க்கத்தான் செய்தது.
இன்று
சானிடரி நாப்கின் கூட‌
ஒரு கதாநாயகி அந்தஸ்தையும் மீறி
வளர்ந்து கிளர்ந்து இருக்கிறது.
கதையின் சமுதாயக்கனத்தை
அதன் வலிமிகுந்த பாரத்தை
எத்தனை தேசியவிருதுகளாலும்
இலேசாக்கி விட‌ விடமுடியாது
என்று இன்று
திரைப்படைப்பாளிகள்
காமிரா உளிகொண்டு
செதுக்கி 
சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.
பெண் 
பெண்களிடமிருந்து
பெண்மையிடமிருந்து
உண்மையை உரத்து சொல்லமுடியாத‌
ஏதோ ஒரு பிரபஞ்சத்துள்
மாட்டிக்கொண்ட‌
"ஏலியன்"தான்
அயலியா?
இந்த ஒரு எரிமலைப்புழுவை
லாவகமாக‌
தூண்டிலில் மாட்டி
திரைக்கடலில் வீசி
திரவியம் தேடிக்
கண்டு பிடித்திருக்கிறார்
இயக்குநர் 
திரு முத்துக்குமார் அவர்கள்.
தொலைக்காட்சித்தொடர்கள்
தொல்லைக்காட்சி இடர்களாக‌
மாறி விட்ட நிலையில்
இப்படியொரு
அருமைக்காவியம் எப்படி உருவானது
என்பதே பெரும் வியப்பு.
பெண்களை புண்படுத்தும்
ஒரு புண்ணிய பூமியாய்
பெண்ணை ஒரு பூமாதேவியாய்
புதைத்துக்கொண்டே
புராணங்களை
பாராயணம் செய்யும் 
ஒரு சேடிஸ தேசத்தில்
பெண்மை எனும் பெருவெளிச்சமே
மனிதம் சுடரச்செய்யும்
ஒரு பேராற்றல் என்பதை
சொல்ல வந்திருக்கும் இந்த படம்
விருதுகளால் அலங்கரிக்கப்படும் என்பதைவிட‌
இந்தப்படத்தால்
அந்த விருதுகள் தான்
உயரங்கள் எட்டும் என்பதே
மிக மிக உயரமான உண்மை.

__________________________________________________________

No comments: