2022-09-30

வைராவி குளம்

 வைராவி குளம்

_____________________________________



"வைராவி குளமா?"

முகநூலில் யாரோ தொட்டுக்

காட்டினார்கள்.

அம்பதுகளின்

அந்த வைர நினைவு 

பளிச்சு களில்

இப்போதும் 

சலவை செய்யப்பட்டு விடுகிறேன்.

எனது தந்தை வழி 

அத்தை அவர்கள்

எங்கள் கல்லிடைக்குறிச்சி

குமாரர் கோவில் தெரு வீட்டுக்கு

வருவார்கள்.

எல அய்யா எசக்கி என்று

வாய் நிறைய 

எங்கள் அப்பாவை

அழைத்துக்கொண்டே தான்

வருவார்கள்.

அந்த உற்சாகத்தை

அன்றைய‌

சிறு பயலாய் ஒரு தீபாவளி

மத்தாப்பூவை 

"பொருத்தி"க்காட்டினால் தான்

புரியும்.

குடமுருட்டி சங்கரன் கோயில் 

ஆடித்தவசு விழாவுக்கு போகும் போது

பெண்களின் கண்களை

கருவிழிகளாய் 

பாதையெல்லாம் விழும் 

கருநாவல் பழங்களோடு

அன்று உவமிக்கத்தெரியாத‌

பொடிப்பயலாய்

அந்த கன்னடியன் 

கால்வாய்க்கரையோரம்

அம்மா இடுப்பில் 

சுமந்துகொண்டு போகும்

கூட்டாஞ்சோற்றின் சூட்டை

மோப்பம் பிடித்துக்கொண்டே

சென்ற நாட்கள் இனி

சென்ற நாட்கள் தான்.

கோவிலுக்கு செல்லும் போது

கால்கள் அந்த‌

நீர் என்னும் பளிங்குப்பாயில்

அளைய அளைய‌

கால்களில் சரசரக்கும் 

அத்தனை கூழாங்கற்களும்

என் வைரகற்கள் அல்லவா?

பற்பசையை 

குழாயிலிருந்து

பிதுக்கிய பின் மீண்டும்

குழாய்க்குள் நுழைக்க முடியுமா?

ஏதோ படத்தில்

நாகேஷ் சொன்ன காமெடி இது.

அப்படி மீண்டும் அந்த‌

பாற்கடலை

நசுங்கிப்போன இந்த வாழ்க்கை 

டியூபுக்குள் 

அடைக்க முடியுமா?

வேண்டும்போதெல்லாம்

அந்த நினைவுகளின்

அமுதக்குழம்பை 

சுவைக்கத்தான் முடியுமா?

நோஸ்டால்ஜிக்

எனும் பழம் நினைவோட்டம்

செறிந்த செர்ரி மரக்கூட்டங்களுக்குள்

நுழைந்து வருவது தான்

என் எழுத்துக்களில் அந்த‌

வைராவிக்குளம் தளும்பி நிற்பதாகக்

காட்டிக்கொண்டே இருக்கும்.

வைராவிகுளமே!

உனக்கு தலபுராணம் பாட‌

தெய்வங்கள் தேவையில்லை.

அந்த பச்சை வயல் விரிப்பும்

மணிமுத்தாறும் தாமிரபரணியும்

இழை ஊடி நெசவு செய்யும்

அந்த அற்புதமுமே போதும்.

அங்கு ஒரு நாள் வருவேன்.

எவனோ வானத்திலிருந்து இறங்கி

குதித்து வருவான்

என் ஓட்டை உடைசல்களோடு 

வியாபாரம் செய்து கொள்ள.

ஈயம்பித்தாளை பேரிச்சம் பழத்துக்கு

போட்டு விடப்போகும் 

இந்த உடம்புக்கூட்டுக்குள்

பாயும் பழம் நினைவுப்பாய்ச்சல்களை

புதுப்பித்துக்கொள்ள‌

நானும் ஒரு நாள்

வைராவி குளம் வருவேன்.


________________________________________________

ருத்ரா இ பரமசிவன்.







 

2022-09-29

பெரியார் ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

 

See the source image











பெரியார்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________



தாடி விழுதுகளுடன்

வெண்கதிர் வீச்சு

அறிவொளி தெறிக்க‌

இதோ

கண்டுபிடித்து விட்டோம்

ஒரு காலக்ஸி 

பெயர் பெரியார்

என்றது ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி.

தூரம் 

வெகு வெகு அருகில் தான்

தமிழ் நெஞ்ச ஒளி மண்டலங்களே

அவை.

காலம்

உளுத்துப்போன இருள் ஆண்டுகளை

அடித்து துவைக்கவந்த‌

மனிதத்தின் "சுய மரியாதை"யின்

ஒளியாண்டு!


________________________________________

கவிஞர் ருத்ரா


இன்று இதயங்களின் தினம்

 இன்று இதயங்களின் தினம் அல்லவா?

உலகத்தின் எல்லா இதயங்களின்

ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள்

அறைகளுக்குள் எல்லாம் சென்று

தேடிப்பார்த்து விட்டேன்.

என் இதயத்தை அன்று

அந்த ஷாப்பிங் காம்ப்லெக்ஸில்

அவளிடம் தொலைத்தேன்.

அவள் தோழிகள் 

ஒரு பெயரை வைத்துக்கூப்பிட்டதில்

அவள் பெயரை 

உச்சரித்துக்கொண்டே இருந்தேன்.

அந்தப்பெயரை அழைத்துக்கொண்டே தான்

என் இதயத்துள் அவள் பெயரை

பதியம் இட்டு க்கொடுத்தேன்.

அன்று இழந்த இதயத்தை தான்

இன்று தேடுகிறேன்.

ஒரு கனவில் சொன்னாள்

இந்த தினத்தில்

எல்லா இதயங்களிலும்

மின்னல்களைக்கொண்ட நெய்த‌

பட்டாம்பூச்சியாய்

சிறகடிப்பதாய் சொன்னாள்.

அதைத்தான் இன்னும் தேடிக்கொண்டே

இருக்கிறேன்.

அந்தப் பெயரின் எழுத்துக்கள் 

எந்த இதயத்திலாவது இன்னும்

ஒலிக்கிறதா

என்று தேடிப்பார்க்கிறேன்.

ஓ!  இதயங்களே சொல்லுங்கள்..

அட..அதற்குள் இருட்டிவிட்டதா?

இந்த உலக தினம் முடிந்து விட்டது.

இனி

அடுத்த உலக தினம் வரட்டும்.

என் தேடல் தொடர்கிறது.


_______________________________________

ருத்ரா




2022-09-28

வௌவால் பிரபஞ்சம்

 (4) Flying Bat Nebula was seen by James Webb Space Telescope with exclusive images new - YouTube

"கவுண்ட் டவுண்"

 "கவுண்ட் டவுண்"

________________________________



மனிதா!

உன்னையே நீ

சுருட்டிக்கொண்டு

காணாமல் போய்விடுவதற்கு

கண்டு பிடித்த உனது சொல்

"டெக்னாலஜி"

எல்லா துறைகளிலும்

சந்து பொந்துகளிலும்

மூலை முடுக்குகளிலும்

புழு பூச்சி

மரம் மட்டைகளிலும்

ஏன்

கண்ணுக்குத்தெரியாத‌

அந்த நுண்ணுயிரிகளிலும்

இன்னும்

மில்லியன் ஒளியாண்டுகளை 

கடந்து

பல வண்ண முகங்கள் காட்டும்

ஒளி இருள் பிழம்புகளிலும்

அந்த சொல்

ஊடுருவியிருக்கிறது.

மூளைப்பெட்டியை திறக்கும் 

சாவி உன்னிடம்

வந்து விட்டது.

கருமுட்டைகளும் விந்தணுக்களும்

உன் டிஜிடல் கர்ப்பத்துள்

நுழைந்து விட்டன.

என்ன செய்யலாம் இதை வைத்துக்கொண்டு?

பணம் பண்ண வேண்டியது தான்.

பிஞ்சுகள் கூட‌

அரக்கத்தனமான "கேம்ஸ்"களில்

கருகிப்போகின்றன.

கவலையில்லை.

பணம் குவிகிறது.

உலகத்தின் கனிம வளங்களையெல்லாம்

சுருட்டி வைத்துக்கொண்டு

அழைக்கின்றாய்.

வாருங்கள் இதோ

செவ்வாய்க்கோளில் போய்

நட்சத்திர ஓட்டல்கள் கட்டி

பிரபஞ்ச காக்டெய்லை

கண்ணாடிக்கிண்ணங்களில் ஏந்தி

அருந்தி அருந்தி அனுபவிக்கலாம்.

பில்லியன் பில்லியன் டாலர்களில்

அந்த பயணத்துக்கு டிக்கெட்டுகள்

ரெடி ஆகி அச்சடிக்கப்பட்டு விட்டன.

பில்லியன் கணக்கில் இருக்கும்

மக்களின் 

கனவுகளில் ஆசைகளில்

தீ பற்றி எரிகிறது.

ஆனால்....

எதியோப்பிய சோமாலிய‌

எலும்புக்கூட்டு மனிதர்களின்

குழிவிழுந்த 

பசித்த 

வெறித்த கண்கள்

மண்ணுக்குள் மக்கத்தொடங்கி விட்டன.

ஓ!

டெக்னாலஜியே!

ராட்சச டினோசார்கள்

எலும்பு ஃபாசில்களாய்

மிஞ்சி விட்டது போல்

இந்த மொத்த பூமி உருண்டையின்

எலும்புக்கூட்டு ஃபாசில்கள்

பற்றி

இன்று ஒரு ஏ ஐ சைபோர்க்

குறிப்பு எடுத்துக்கொண்டிருக்கிறது.

மனிதா!மனிதா!

இந்தக்கணினிகள்

உன் ரத்தசிவப்பு அணுக்களில்

நுட்பமான "பைத்தான்"களை

கூடு கட்டிக்கொள்ளுவதற்கு முன்

உன்னையே

உலுக்கிக்கொண்டு

விழித்துக்கொள்.

ரகசியமான ஒரு "கவுண்ட் டவுண்'

உன் முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டு

டிக் டிக் டிக்..

என்கிறதே?

உன் இதய "லப் டப்"களில்

அது சின்க்ரோனைஸ் ஆகும் முன்

விழித்துக்கொள்.

ஆம்

விழித்துக்கொள்.


_________________________________________________________

ருத்ரா

2022-09-27

நாகேஷ்

 நாகேஷ்

_________________________________‍_____

ருத்ரா



சினிமாத் திரை எனும்

வெங்கலக்கடையில் 

ஒரு பூனைபோல் .நுழைந்த யானை

சிரிக்க வைத்து சிரிக்க வைத்து

தன் நகைச்சுவை அங்குசத்தால்

பார்ப்பவர்களை ஆட்சி செய்தது.

படங்கள் ஒவ்வொன்றையும் 

நாம் சொல்லிக்கொண்டே போனால்

நூறு இமயங்களின் சிகரங்களை

ஏறிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூன்று படங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

சர்வர் சுந்தரம்.

அருமையான நடிப்பு 

ஒவ்வொரு ஃப்ரேமிலும் சிரிப்பு

கொடி கட்டி பறக்கிறது.

நிறைவேறாத காதலை

தேவதாஸ் பிழிந்து பிழிந்து தந்திருக்கிறது

உணர்ச்சியின் எரிமலையிலிருந்து.

சிரிப்பு மூட்டிக்கொண்டே

அதே சோகத்தை வெளிக்கொணர்ந்த‌

நாகேஷ் எங்கோ ஒரு உச்சிக்கு போய் நிற்கிறார்.

அதிலும் ஒரு காட்சி.

காதலிக்கு பூங்கொத்து தருவார்

உற்சாகம் பொங்க.

அவள் காதலிக்க வில்லை என்று 

தெரிந்ததும்

அந்த பூங்கொத்து குப்பைக்கூடைக்குத் தான்

போகும் என்று தெரிந்தும்

இப்போதே குப்பையில் போட்டு விடாதே

என்பதை 

நகைச்சுவை கலந்த சோகத்தோடு சொல்வார்.

ஒரு சிரிப்புக்குள் எங்கோ சொருகிவைத்திருந்த‌

ஒரு சம்மட்டியை எடுத்து

நம் நெஞ்சத்தை நொறுக்கிவிடுவது போல்

காட்டிவிடுவார்.

இதைப்போல எத்தனையோ காட்சிகள்.

அடுத்து திருவிளையாடல்.

சிவாஜியுடன் அந்த கேள்வி பதில்..

நீ கேட்கிறாயா?

நான் கேட்கட்டுமா?

என்று அவர் கேட்டவுடன்

அவர் காட்டும் அந்த பதற்றத்தில் கூட‌

ஒரு பயத்தையும் காட்டுவார்.

அதிலும் அவர் நம்மை குலுங்க குலுங்க‌

சிரிக்க வைத்து விடுவார்.

நடிப்பு என்றால் சோகத்தை தத்துவத்தில்

தோய்த்து தருவது தான்.

அந்த கனமான உணர்ச்சிகளில்

ஒரு சிரிப்பின் இழையையும் 

மெல்லிய மயிலிறகாய் வருடி நம்

இதயத்தின் ஆழத்தையே 

துளைத்துக்கொண்டு விடுவார்

நீர்க்குமிழி என்ற படத்தில்.

மரணம் தன் தோளில் அமர்ந்த போதும்

அந்த சுமையை சிரித்து சிந்திக்க வைக்கும்

நகைச்சுவையால்

அந்த கனபரிமாணத்தை இலேசாக்கி விடுவார்.

இந்த மூன்று படங்களையும் தாண்டி

எப்போதும்

சட்டம் போட்டு சுவரில் மாட்டியிருப்பது போல்

ஒரு படம் உண்டு.

அது

காதலிக்க நேரமில்லை.

என் நினைவுகளில் சிரிப்பு அலைகளாய்

உலா வந்து கொண்டே இருக்கும் படம் அது.

எதைச்சொல்வது?

எதை விடுவது?

அந்தப்படம் வந்த வருடத்திலிருந்து

நேற்று பார்த்த விண்குழல் காட்சிகள் 

வரையும் 

என்னிடம் ஆட்சி செய்து கொண்டிருக்கும் 

படம் அதுவே தான்.

டி எஸ் பாலையாவுடன் அவர் அடிக்கும்

லூட்டி ஒன்றே போதும்.

அந்த படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பேன்

என்று கணக்கு எடுத்தால்

செஞ்சுரியை தாண்டியிருக்கும் என‌

நினைக்கிறேன்.

அவர் சேட்டைகள்

ஹாலிவுட் நடிகர் "ஜெர்ரி லூயிஸை"

நினைவு படுத்துவதாக இருக்கலாம்.

அவர் ஒரு ஃப்ரேமுக்குள் நிற்பார்.

ஆனால் இவர் நின்று கொண்டிருப்பதே தான்

இங்கு ஃப்ரேம்.

பாலச்சந்தர் அவர்கள் தன் "டைரக் ஷனை"

இவரிடம் கூர் தீட்டிக்கொண்டார்

என்பதே நிஜம்.


_____________________________________________________________


முற்றுப்புள்ளி இல்லாமல்...



ஆதலினால் காதல் செய்வீர்

பாரதி

நறுக்கென்று தலையில் குட்டி

சொல்லி முடித்தான்.

அது என்ன

இப்படி ஜிவ்வென்று ஏறுகிறது?

என்ன கணேசா?

நலம் தானே என்று

ரெண்டு தட்டு தட்டியிருப்பான் அவன்.

அதற்கும்

இப்படித்தான் ஜிவ்வென்று ஏறியிருக்கும்.

திருவல்லிக்கேணி கோவிலில்

அவனுக்கு 

முற்றுப்புள்ளி விழுந்து விட்டது.

பாரதியின் குயில் பாட்டு

எங்கிருந்தோ கேட்கிறது.

"காதல் காதல் காதல்"

முற்றுப்புள்ளி இல்லாமல்...

_____________________________________________

ருத்ரா