2024-07-10

விளிம்பு ரசம்.

விளிம்பு ரசம்.

____________________________


எத்தனை ஞாபகங்களை

ஒவ்வொரு கல்லாய் அந்த‌

ஜாடியில் போடுவது?

கற்கள் தீர்ந்து விட்டன.

சிறகுகள் ஓய்ந்து விட்டன.

வாழ்க்கையின் அந்த 

விளிம்பு ரசம்

வாய்ப்படும் முன்

வானத்தில் என் இரைச்சல்கள்

பஞ்சு பஞ்சாய்

பறந்து விடும்.

அன்று அவளை பார்த்தபோது

சிரித்தாள்.

அப்புறம் ஏதோ சொன்னாளே!

அந்தக்கல்லை

நான் எங்கு போய் தேடி

அலகில் கவ்வி எடுத்து வருவது?

அது எப்போது என்

இதய நாளத்துள்

யாழ் வாசிப்பது?

அங்கும் இங்கும் பறந்ததில்

இந்த வானத்துக்குத் தான்

சிராய்ப்புகள்..கீறல்கள்..

குரல்கள் எழுப்பி எழுப்பி

கரைந்து கொண்டிருக்கிறேன்.


_________________________________________________

கல்லாடன்.

2024-07-09

அச்சமில்லை அச்சமில்லை.

 அச்சமில்லை அச்சமில்லை.

_______________________________

சேயோன்.



அரைக்கால் 

டிகிரி கோணத்தில்

அந்த ஓரவிழி

என்னைச்சுருட்டிக்கொண்டு

விட்டது.

முகம் தெரியாது.

அகம் தெரியாது.

எந்த 

குறுந்தொகையும் 

கலித்தைகையும் 

கொண்டு 

அவள் முகத்தை ஒற்றிகொள்வது.

எதையோ தவறவிட்டு 

அவள் ஓடிவிட்டாள்.

அருகில் பார்த்தேன்.

கசங்கிய கைக்குட்டை

கலை வேலைப்பாட்டுடன் தான்.

தொடவே பயம்.

என்ன செய்வது?

திரும்பி விட்டேன்.

விடிய விடிய 

ஜேம்ஸ்வெப் தொலை நோக்கிப் 

புகைப்படங்கள் போல்

அத்தனை கேலக்சிகளும் 

பிசைந்து கொண்டு

என் இதயம் நுழைந்தது

அவள் முகத்தோடு.


__________________________________________





2024-07-07

தாலாட்டு

 




தாலாட்டு

___________________________________



என்னைத்தாலாட்ட 

ஆரம்பித்துவிட்டாய் 

உன் நினைவுகளால்.

மாமன் அடித்தானோ?

மாமி அடித்தாளோ?

பாசத்தைப்பிழிந்து காட்ட‌

இந்த மாமூல் கேள்விகளில்

தேங்கிக்கிடக்கும் 

இசையமைப்புகளுக்கு

அமைவான 

அம்மாவின் மியூசிக் நோட் ஷீட்டுகளை

அந்த ஆண்டவனாலும் 

திருடிக்கொண்டு விடமுடியாது.

உன்னைப்பற்றிய பகல் நேரத்து

சொப்பனங்களில்

அப்ப்டித்தான் சொக்கி சொக்கி

விழுகிறேன் போலிருக்கிறது.

கொலவெறி கொலவெறி என்று

யாரோ ஒரு சினிமாக்காரர்

பாடிய அந்த சாங்க் புக் வரிகள்

அப்போதைய‌

ஜனாதிபதி மாளிகை வரைக்கும்

அலையடித்ததாக 

சொல்லுகிறார்களே.

அது போல் தான் உன் தாலாட்டு

இந்த மொட்டைவெயிலுக்கும்

குஞ்சம் கட்டி அழகு பார்க்கிறது.

இந்த சவலைப்பிள்ளை 

இப்படியே கத்திக்கொண்டு 

கிடக்கவேண்டியது தான்

உன்னுடனான‌

என் அடுத்த சந்திப்பு வரை.


___________________________________

சேயோன்.

2024-07-06

ஒரு நாவல்

 


ஒரு நாவல்

___________________________

கல்லாலன்.



புத்தகத்தை எடுத்தால்

நாவல் நம்மை

கரைத்து விடுகிறது.

வரிகளுக்குள்

பிறகு அதன்

சொற்களுக்குள்

நாம் 

பதியம் போடப்பட்டு

காகித வானத்தில்

மகரந்த சேர்க்கையின்

மத்தாப்பூக்களாய்

மூளிக்கனவுகளில்

முளை விடுகின்றோம்.

கதையின் பாத்திரங்கள்

கட புட என்ற 

சத்தம் எழுப்பிய போதும்

காதலும் பெண்ணும் கலந்த‌

ரசாயனத்தில்

அந்த எழுத்தாளனின் 

சொல் வெட்டுகளே

நம் வாழ்க்கைக்குள் விழுந்த‌

கல் வெட்டுக்கள்.

உதாரணம் சொல்லுங்கள் 

என்கிறீர்களா?

அந்த "மோகமுள்"

இன்னும் தைத்துக்கொண்டே 

இருக்கிறது.

வானத்தை அண்ணாந்து 

பார்த்தாலும்

அந்த வானவில்லின் ரத்தம்

ஏழு வர்ணங்களில்

சொட்டிக்கொண்டே இருக்கிறது.


_________________________________________________

2024-07-05

ஈரோடு தமிழன்பன் .

 ஈரோடு தமிழன்பன்

__________________________________‍‍‍


உங்கள் வரிகள் பதியாத‌

காகிதங்கள்

மக்களே இல்லாத மெரீனா பீச்.

அதனால்

உங்கள் பக்கங்களில்

புரண்டு எழும்

அல்லது தடவிக்கொள்ளும்

சிறு பூச்சியாக ஊர்வதில்

எனக்கு ஒரு பெருமிதம்

உலகம் சுற்றும் ரசிகன் என்று.

தமிழுக்கு சொற்கள் 

தேவையில்லை.

அதன் மூண்டு எழும் கனலே

அங்கு அங்கு நடப்பட்டிருக்கும்

மைல் கற்கள் என்று

காட்டி விடுகிறீர்கள்.

தமிழின் தொன்மை கூறும்

கீழடிகள் எல்லாம்

சிலருக்கு எலும்புக்குவியல்களாம்.

ஆம் அதைக்கோர்த்து தான்

தேவநாகரியாய் அதை

கழுத்தில் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களின் சின்ன நிறுத்தற்குறிகளும்

அரைப்புள்ளிகளும் போதும்

அதில் பொங்கித் ததும்பும்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின்

தமிழ் வீச்சுகளைக்

கண்டு கொள்ள.

உங்கள் எழுத்துக்கள் ஊழிப்பேரலைகள்.

இந்த உதவாக்கரைகள் எந்தக்

கரைகளிலாவது ஒதுங்கிக்கொள்ளட்டும்.


_________________________________________________

சொற்கீரன் 03.07.2024






2024-07-03

"மௌவல்" பின்னூட்டக்கவிதை

 


"மௌவல்" பின்னூட்டக்கவிதை 

08 13 PM/   03 07 24

 thiru  இராஜாஅபி. kavithai

_________________________________________________


அன்பு நண்பரே

முழு நிலவையும் 

உருக்கி வார்த்து தான் 

தந்திருக்கிறீர்கள் 

கவிதை என்று.

இருப்பினும் 

அவள் மூளி மவுனத்தில்

மூண்டெரியும்

காடுகளை 

உங்கள் மிச்சக்கவிதைகளுக்கு

பதுக்கி வைத்துக்கொண்டீர்களா?

கவிதை அருமை!

__________________________________________

அஞ்சிறைத்தும்பி.


2024-07-02

புள்ளிகள்

 புள்ளிகள்

_______________________________________


இதுவும் கடந்து போகும்

என்று

நம் தலைமீது எப்போதும்

சும்மாடு ஆக உட்கார்ந்திருப்பதே

கவிதை.

எழுதும் வரிகளில்

மெய் எழுத்துக்களின் 

மேற்புள்ளிகள் கூட சிலுவைகளே.

_______________________________________

சொற்கீரன்.