2021-08-16

வேடிக்கை பார்த்துக்கொண்டே இரு.



 வேடிக்கை பார்த்துக்கொண்டே இரு.

_____________________________________________________ருத்ர


 

ஓ! தென்னை மரமே!


வேடிக்கை பார்த்துக்கொண்டே இரு.


உன் கூந்தலை 


சிலுப்பி சிலுப்பிக்கொண்டிருந்தாலும்


ஒன்றும் நிற்கப்போவதில்லை.


இந்த மக்களின்


கண்ணாடி பிம்பம் 


சுக்கல் சுக்கலாக‌


நொறுங்கிக்கொண்டிருக்கிறது.


அப்போதும் 


இந்த மண்ணின் கனவு 


மொழி இனமாண்பு


எல்லாம்


நொறுங்கிப்போன நிழல்களாக‌


கீழே கிடக்கின்றது.


பன மரத்திற்கும் தென்னை மரத்திற்கும்


ஈச்ச மரத்திற்கும் விடுதலை


என்று அன்று


நம் சுதந்திர சுவாசத்தை


கொண்டாடினார்கள்.


ஆனாலும் நம் வெளிச்சக்கதிர்கள்


எல்லாம்


அந்த கண்ணாடிப்புட்டிகளின் வழியே


இன்னும் இங்கே


ஏழுவர்ணம் காட்டுகின்றது.


பழைய பத்தாம்பசலிகளின்


நான்கு வர்ணங்களோடு


இன்னும் பல

 

குறுகியவெறி வர்ணங்களும்


சேர்ந்து


அதோ தோரணங்கள் ஆடிக்கொண்டே தான்


இருக்கின்றன.


புதிய கொண்டாட்டங்களுக்கு


கொடியை


துணிவிரித்துக்காட்டப்போகும்


உற்சாகங்களையும்


வேடிக்கை பார் தென்னை மரமே!


எத்தனையோ கோடி மக்கள்!


இவர்கள் எழுச்சி பெற்றால் 


என்னாவது?


ஓ மக்களே!


பத்து பேருக்கு நூறு ஒற்றர்கள்!


இதற்கு பேரா நாடு?


உங்கள் முதுகை சுரண்டிக்கொண்டிருக்கும்


அந்த முட்களின் காம்பினிலே தான்


முகம் காட்டுகின்றன‌


அந்த மூவர்ணரோஜாக்கள்.


______________________________‍‍____________


2021-05-29

குறுக தரித்த...

குறுக தரித்த...

-------------------------------------------ருத்ரா 

தேவை 


கிழிந்த பனியனை 

மறைக்க 

ஒரு சட்டை வேண்டும்.

--------------------------------------------------- 1


அந்தி 


சூரியனை 

விழுங்க முடியாமல் 

மேற்கில் ஒரு 

வாந்தி.

--------------------------------------------------- 2


செல் ஃபோன் 



எண்களில் கண்கள்.

எண்களில் எல்லாம்.

வீடும் கூடும் 

பட்டன்கள் தான்.


-------------------------------------- 3


அரசியல் சொன்னது 

அரசியல் பேசாதே 

என்று.


-------------------------------------- 4






 

2019-05-28

ஊசியிலைக்காடுகள்

ஊசியிலைக்காடுகள் 


அர்த்தம் தேடி...
=============================================ருத்ரா

அது நம்மோடு வருகிறது.
நம் புன்னகையில்
நங்கூரம் பாய்ச்சுகிறது.
நாம் பார்க்கும் சினிமாவுக்கும்
டிக்கட் எடுக்காமல்
நம் கூடவே வந்து
நம் அருகில் உட்காருகிறது.
நகர பேருந்துவில்
உட்கார இடம் கிடைக்காமல்
கம்பியில் முட்டு கொடுத்து
நாம் நிற்கும் போது
அந்த கம்பியாக
நம்மை தாங்கிக்கொள்கிறது.
வியர்வை நாற்றம்
செண்ட் வாசனை
பூ வாசனை
நெருக்கமான "ஜனநாயக" வாசனை
அவ்வப்போது
எச்சில் தெறிக்க ஊதப்படும்
நடத்துநரின் விசில்கள்
எல்லாவற்றிலும்
கதம்பமாய்க்கோர்த்து
பின்னிக்கொண்டு
நம்மோடு ஒட்டிக்கோன்டு
அது வருகிறது.
நம்மிடயே
சவடால் பேச்சுகள்
புலம்பல் குரல்கள்
ஆவேசப்பாய்ச்சல் ஒலிப்புகள்
வண்ண வண்ண அரசியல் கொடிகள்
ஆடி ஆசைக்கும்
உள் குரல்கள்
எல்லாவற்றிலும்
அந்த நீரோட்டத்திலும்
அது கால் நனைக்கிறது.
ஹாய் என்று
மனதுக்கு பிடித்தவளுக்கு
ஒரு ரோஜாப்பூ நீட்டும்போதும்
அதன் மகரந்தப்பொடியின்
சிம்மாசனத்திலும்
"அட்னக்கால்"போட்டுக்கொண்டு
உட்கார்ந்திருக்கிறது.
இவ்வளவு ஏன்
கடைசியில்
கட்டையாய் விறைத்து
நாலு பேர் தூக்கிக்கொண்டு
போகும்போது கூட‌
கொள்ளிச்சட்டியில்
புகைந்து கொண்டு நம்மோடு வருகிறது.
போலீஸ் நாய்
எல்லாவற்றையும் மோப்பம் பிடித்து
காடு மேடு கல் புல்
மரம் மட்டை மண்ணாங்கட்டி
எல்லாம் வாசனை பிடிக்கிறது.
ஆனால்
குறுக்கே ஆறு ஓடினால்
விக்கித்து நின்று விடுமாமே அது!
ஆம்..
இதுவும் அப்படித்தான்
விக்கித்து நிற்கிறது.
எதைக்கண்டு?...
தேடும் பொருளுக்கும்
தேடப்படும் பொருளுக்கும்
இடையே
கட்டப்படும் சொற்கூடங்கள்
லட்சம் லட்சமாய்
குவிந்து கிடப்பதில் அது
குழம்புகிறது..
ஆம்.
மன சாட்சி தான் அது.

=======================================================

2018-02-14

ஜென்





ஜென்

========================================ருத்ரா



ஜென் என்றால் என்ன?

இப்படி கேள்வி கேடபதே ஜென்.

கேள்வியே இல்லாத போது

கேள்வியைத் தேடும் பதில் ஜென்.



கடவுள் பற்றி

தியானம் செய்யும் வகுப்பில்

முதலில் உட்கார்வது கடவுள்.

வகுப்பை துவக்குவது ஜென்.



பிற‌ந்து தான்

வாழ்க்கையை ப‌டிக்க‌ வேண்டும்.

இற‌ந்து தான்

வாழ்க்கைக்கு கோடைவிடுமுறை.



அடுத்த‌வ‌குப்பு துவ‌ங்கும்போது

புத்த‌க‌மும் புதிது.

மாண‌வ‌னும் புதிது.

ஆசிரிய‌ர் ம‌ட்டும் அதே ஜென்.



ஜென் ஒரு புதிர்.

ஜென்னை அவிழ்ப்ப‌தும்

இன்னொரு புதிர்.

ம‌று ஜென்ம‌ம் உண்டு.

அதுவும் இந்த‌ ஜென்ம‌த்தில் தான்

உண்டு.

அதுவும் "ஜென்"ம‌ம் தான்.



ஞான‌ம் ஒவ்வொரு த‌ட‌வையும்

தோலுரிக்கிற‌து.

அதுவும் ஜென்ம‌மே

இந்த‌ ஜென்ம‌த்தின் க‌ருப்பை

அறிவும் சிந்த‌னையும்.



வ‌ழியை மைல்க‌ல்க‌ளில்

சொல்வ‌து புத்தியின் அடையாள‌ம்.

மைல்க‌ல்க‌ளை பிடுங்கியெறிந்து விட்டு

வ‌ழியை தேட‌ச்சொல்வ‌து ஜென்.



க‌ண்க‌ளை மூடுவ‌து அல்ல‌ தியான‌ம்.

க‌ண்க‌ளை திற‌ந்து வைத்து

பார்வையை மூடுவ‌து தியான‌ம்.

காட்சிப்பொருள‌ல்ல‌ ஜென்.

காட்சியின் பொருள் ஜென்.



ம‌னம் ஊசிமுனையில்

க‌ழுவேற்ற‌ப்ப‌டும்போது

ஆகாய‌த்தில் முக‌ம் துடைக்க‌ச் சொல்வ‌து

ஜென்.



ஆசை முத்த‌ங்க‌ளின் ருசி கேட்கும்போது

அங்கு சிக்கி முக்கிக்க‌ல் ஜென்.

தீக்குள் விர‌ல் வைத்து தீண்டி

ந‌ந்த‌ லாலாவை சுவைக்கும்போது

தீயின் லாலி பாப் ஜென்.



ஜென்

எது?

ஜென்

யார்?

ஜென்

எங்கே?

ஜென்

எத‌ற்கு?



ஜென் ஒரு ஜ‌ன்ன‌ல்.

இங்கிருந்து மூட‌ல‌ம் திற‌க்க‌லாம்.

அங்கிருந்து மூட‌லாம் திற‌க்க‌லாம்.

ஆத்திக‌ன் திற‌ந்தால் நாத்திக‌ம் தெரிவான்.

நாத்திக‌ன் திற‌ந்தால் ஆத்திக‌ன் தெரிவான்.



எல்லோரும் பாயை சுருட்டி ம‌ட‌க்கி

எடுத்துக்கொண்டு போவார்க‌ள்.

உட்கார்ந்து தியான‌ம் செய்ய‌.

எல்லோரும் பாயை சுருட்டி ம‌ட‌க்கி

எடுத்துக்கொண்டு வ‌ந்து விடுவார்க‌ள்.



சுருண்டு ம‌ட‌ங்கி விரிந்து

சுருண்டு ம‌ட‌ங்கி விரிந்து

தியான‌ம் செய்தது

அந்த‌ பாய் ம‌ட்டுமே.

அந்த‌ பாய் ம‌ட்டுமே ஜென்.



த‌ய‌வு செய்து வீசிஎறியுங்க‌ள்

ஜென் ப‌ற்றிய‌ புத்த‌க‌ம் ஒன்றை

வான‌த்திற்கு.

க‌ட‌வுள்க‌ள் விண்ண‌ப்பித்திருக்கிறார்க‌ள்.



===========================================================ருத்ரா

எழுதியது :-  23 ஜனவரி 2014

2016-09-18

இனியதோர் விடியல் ஆக்கு !

ஆகஸ்டு பதினைந்தே வருக வருக!
==================================================ருத்ரா

காலண்டர் தாள் சரசரப்புகளில்
ராணுவ பூட்ஸ்களின்
மரியாதை ஒலிகள் கேட்கின்றன.
அலங்கார வண்டிகள்
மாநிலம் மாநிலமாய்
பொம்மைக்காட்சிகளில் உயிர் பூசி
மிதந்து வருகின்றன.
ஆனந்த வெள்ளம் திரள்கிறது.
வந்தேமாதர முழக்கத்தின்
புடைப்பு பரிமாணம்
நம் நெஞ்சங்களில் விம்மிப்பெருகுகின்றது.
அது முக்காலங்களின்
வரலாற்றுக்கனத்தின்   பரிமாணம்.
நேற்று இன்று நாளை
என்று
எப்படிப்பார்த்தாலும்
வேர்வை கண்ணீர் ரத்தம்
என மூன்று அதிர்வலைகளில்
கனல் மூட்டும் பரிமாணம்.
சாதி சமய வர்ணங்கள் அற்ற
சமூக நீதியின் ஜனநாயகப்பூங்கா நோக்கி
நடை போட வந்திருக்கும்
இன்றைய "ஆகஸ்டு பதினைந்தே"
உன் பின்னே
சுரண்டல் அநியாயங்களால்
நியாயக் க‌பாலங்களின்
நொறுங்கும் ஒலி கேட்கிறதா?
மேலை நாடுகளில்
மனிதன் கீழே மலங்கழிப்பான்.
ஆனால்
மனிதன் மலங்களுக்கும் கீழேயும்
வாழ்ந்துகழிக்கும் நாடாய்த்தான்
நமது புண்ணிய பூமி புல்லரித்து நிற்கிறது.
நாம் எல்லோரும் கடவுளின் குழந்தைகள்
என்று
நம் மீது  நாமே
பூமாரிப்பொழிந்து
புளகாங்கிதம் அடைந்த போதும்
அஞ்சாவது வர்ணத்தவர்கள்
யாருக்கோ பிறந்தவர்கள் என்று
எகத்தாளம்
செய்பவர்களின பூமியா ..நம்
இந்திய பூமி?
சாதிக்கலப்புத் திருமணங்களை
பொறுத்துக்கொள்ளாமல்
ஆணவக்கொலை என்ற பெயரில்
கசாப்பு செய்வதையும்
ஆடாமல் அசையாமல் நின்று
பார்த்துக்கொண்டிருக்கும்
"மரப்பாச்சி" ஜனநாயக‌மா
இந்த ஜனநாயகம்?
"ஆகஸ்டு பதினைந்தே!"
வழக்கமாய் கிழித்துப்போடும்
வெறும் காலண்டர் தாள் அல்ல நீ!
இன்று
புதுத்தீயில் புதுப்பித்து பதிப்பித்து
புடம்போட்டு வந்த
புதிய ஆகஸ்டு பதினைந்து நீ!
புதிய அர்த்தங்களோடு
காலண்டர் தாள்கள்
அக்டோபர்களையும் நவம்பர்களையும்
அந்த அசைவுகளில்
அசைபோடத் தொடங்கினால்
அதன் காற்றுக்கென்ன வேலி இங்கே?
அந்த கேள்வியின்
ஊற்றுக்கென்ன பதில் கள் இங்கே?
ஓ! எங்கள்  இதயமான  இந்தியாவே!
சமுதாய நீதியின் வெளிச்சமாய்
ஒரு "ஆகஸ்டு பதினைந்தை"
எங்களின்
இனியதோர் விடியல் ஆக்கு !
அதுவரை
எங்கள் நாளங்களும் நரம்புகளும்
புடைக்கட்டும்.
துடிக்கட்டும்.
"ஜெய்ஹிந்த்"

============================================================

__________________________________

ஆழ்ந்த நம் இரங்கல்கள்
===================================ருத்ரா இ பரமசிவன்

(கவி வேந்தன் நா.முத்துக்குமார் மறைவுக்கு
நம் ஆழ்ந்த இரங்கல்கள்)



வயதுகளின் நுழைவாயில்
கட்டி முடிக்கும் முன்னே
வாழ்க்கைக்கோபுரமே
சாய்ந்து விட்ட கொடுமை என்ன?

இப்படியே விட்டால் நீ
பாட்டெழுதி பாட்டெழுதியே
நூலேணி ஏறி வந்து என்
அரியணையையும்
அபகரிக்கும் அபாயம்
வந்து விடும் என்று தான்
இப்போதே உனை நான்
எடுத்துக்கொண்டேன்
என் மடியில்
என்றெழுதினான் ஒரு பாட்டு
இறைவனுமே!
................
இந்தப்பாட்டும்
நா(வல்ல)முத்துக்குமார்
எழுதிக்கொடுத்து
இறைவன்
கீழே வீசியது தான்.

=====================================================================















2016-09-17

தமிழர்களே!தமிழர்களே!




தமிழர்களே!தமிழர்களே!
====================================================ருத்ரா

தமிழர்களே!தமிழர்களே!
உங்கள் முகத்தில் நீங்களே
கரி பூசி கொண்டீர்கள்.
செம்மொழிப்பூங்காவின்

அந்த அய்யன் வள்ளுவன்
அட்டைப்படத்தையும்
முகப்பையும்
அந்த பச்சைப்பொய்கள்
(பச்சை ஸ்டிக்கர்கள்)
மூடியிருக்கின்றனவே!

தமிழ் செம்மொழி என்றாலே
எரிச்சல் கொண்ட‌
எத்தர்கள்
உங்கள் கைகள் மூலம்
உங்க‌ள் முக‌ங்க‌ளிலேயே
க‌ரி பூசிக்கொண்டிருக்கிறார்க‌ள்.

இன்னொரு அதிர்ச்சியான‌
உண்மை உங்க‌ளுக்கு தெரியுமா?
வேத‌ங்க‌ளை தொகுத்த‌தே
வியாச‌ன் எனும் திராவிட‌ன் தான்.
நீல‌மேக‌ சியாம‌ள‌ வ‌ண்ண‌ங்க‌ளில்
அதாவ‌து திராவிட‌க்க‌ருப்பு வ‌ர்ண‌ங்க‌ளில்
பிற‌ந்த‌ திராவிட‌ர்க‌ளான‌
ராம‌னும் கிருஷ்ண‌னும்
ஆண்ட‌ திராவிட‌ பூமியே இந்தியா!

திராவிட‌நாடு திராவிட‌ருக்கே!
திராவிட‌ர்க‌ளின் பாட்டன்க‌ள் ஆன‌
த‌மிழ‌ருக்கே இந்தியா சொந்த‌ம்.
அரிய‌ என்ப‌தே ஆரிய‌ ஆயிற்று.
அரிய‌ இன‌மே
க‌ண‌வாய் வ‌ழியே புகுந்து
க‌ண்ணிய‌ம‌ற்ற‌ ஆக்கிர‌மிப்பில்
இன்னும் ந‌ம்மை
தின்ன‌த்துடிக்கிற‌து.

கண‌க்கீட்டாள‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை
வெறுமே
மூன்று ச‌த‌வீத‌ம் என்கிறார்க‌ள்.
முந்நூறு ஆண்டுக‌ளுக்கு முன்னே
ம‌ட்டும் வ‌ந்த‌
வெள்ளை ஆதிக்க‌ம் அல்ல‌ இது.
மூவாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு
முன்னே வ‌ந்து
ப‌த்தாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கும்
முன்னே இருந்த‌
இந்த‌ ப‌ர‌த‌வ‌ர்க‌ள் மீதும்
(இது சிந்து வெளித்திராவிட‌னின்
நெய்த‌ல் நில‌ப்ப‌ர‌த‌வ‌ன்)
அவ‌ர்க‌ளின் பார‌த‌த்தின் மீதும்
ச‌வாரி செய்துக்கொண்டிருக்கும்
ஆதிக்க‌ம் இது.

ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ள்
க‌ல‌ப்பில்
இந்த‌ திராவிட‌ இந்திய‌ன்
வெள்ளையாயும்
க‌ருப்பாயும்
வெள்ளையும் க‌ருப்பும் க‌ல‌ந்த‌
ப‌ழுப்பாயும்
இருப்ப‌து ம‌ட்டுமே
நிஜ‌மான மூவ‌ர்ண‌ம்.

பொய்யாய் நான்கு வ‌ர்ண‌ம்
பேசுப‌வ‌ர்க‌ள் தான்
சிவ‌ப்பான‌ செம்மையான‌
சிற‌ப்பான‌ ந‌ம் த‌மிழ் மொழி மீது
தார் பூசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சாமி படத்தின் மேல்
இப்படி ஒட்டினால்
இந்துக்க‌ள் ம‌ன‌ம்
புண்ப‌ட்டு போய்விடும்
த‌மிழ‌ர்க‌ளின் பூமி இது.
வான் புக‌ழ் வ‌ள்ளுவ‌னை
இப்ப‌டி மூடி ம‌றைத்தால்
மனம் புண் ப‌டாத‌
த‌மிழ‌ர்களின்
தமிழ்நாட்டுப் பூமி இது.

த‌மிழ‌ர்க‌ளே! த‌மிழ‌ர்க‌ளே!
இன்னும் நீங்க‌ள்
தூங்கிக்கொண்டிருந்தால்
த‌மிழ்ப்பூஞ்சோலைவ‌ன‌ம்
தார்ப்பாலைவ‌ன‌ம் ஆகிவிடும்!
விழித்திடுங்க‌ள் த‌மிழ‌ர்க‌ளே!

====================================================ருத்ரா
ஆதார‌ச்செய்திக‌ளுக்கு
இவ‌ற்றை சொடுக்குங்க‌ள்:

vedas-compiled-and-worte-by-dravidians[1].html (text/html) 42.00K
Sri Rama’s Ancestor, Vaivasvata Manu was a Dravidian King Srimad Bhagavatam « Ancient Indians – Satya Samhita.url (application/octet-stream) 1.00K
========================================================================
29  அக்டோபர் 2011 ல் எழுதியது.

2016-08-11

குரல்





குரல்
================================================ருத்ரா இ பரமசிவன்

ஒற்றையாய் நின்று ஒரு தவம்.
குருவிக் கூட்டங்களுக்கு ஏங்கி
அந்த பஞ்சு சிறகுகளின் வருடல்களுக்கு
கனவு கண்டு
நிற்கிறது இந்த ஒற்றை மரம்.
சூரியக்குளியலில்
வருடங்கள் எனும் சோப்புக்கட்டிகள்
கரைந்து
இப்படி ஒரு சிறு மரமாய் நிற்கிறது.
இலை இடுக்குகளில்
வெள்ளி ஒழுகும் வெளிச்சத்தின்
குமிழிப்பூக்களில்
தன் கன்னி ஏக்கங்களை
நிரவிக்கொள்ளும் சல சலப்புகளே
அதன் இதயத்துடிப்புகள்.
சிறுவர்களின் சைக்கிள் சக்கரங்கள்...
கால் பந்தாட்டக்காரர்களின்
விறைப்பான உதைப்புகள்..... .
அடியில் சிலநேரங்களில்
இளஞ்ஜோடிகள்
தங்கள் தாகத்தை
சில நுணுக்கமான சிற்பவடிவங்களைப்போல் 
வெளிப்படுத்தும் இனிய தருணங்கள்.....
எல்லாமும்
அதன் வேர்த்தூவிகள் முனை வரைக்கும்
நனைத்து நிற்கும்.
அதன் இலை நரம்போட்டத்திலும்
"மெகந்தி"தீட்டும்.
"இப்போது தான் தெரிந்ததா?
என்னை?
வாருங்கள் ..வந்து அமருங்கள்"
அதன் குளிர்நிழலில் சற்று
அமரலாம் என்று அங்கே சென்ற
எனக்கு
அந்த மெல்லிய இனிய குரல் கேட்டு
திடுக்கிட்டு விட்டது.
இது என்ன குரல்?
யார் பேசுவது?
எனக்கு உடம்பு சில்லிட்டு விட்டது.
திரும்பி பிடரி தெறிக்க விரைந்தேன்.
"போகாதீர்கள் ...போகாதீர்கள்.."
குரல்
என்னைத் தொடருகிறது!

==================================================