2014-06-28

"ஓலைக்கிளிக‌ள்"





"ஓலைக்கிளிக‌ள்"
==================================ருத்ரா இ.பரமசிவன்
(அன்னைய‌ர் தின‌ம்)....



அம்மா
உனக்கு ஒரு பரிசு வாங்க‌
கடை கடையாய்
ஏறி இறங்கினேன்.
என்ன வாங்குவது?

இறுதியாய்
கிரிஸ்டலில்
இதயம் வாங்கினேன்.
உள்ளே
பச்சை நரம்புகளில்
சிவப்புக்கடல்.
அந்த‌
உன் கருப்பையை
ஈரம் சொட்ட சொட்ட‌
என் கைப்பையில்
நான் திணித்துக்கொண்டேன்.

அந்த‌ ப‌த்துமாத‌ இருட்டுக்குள்
சூரிய‌ப்பிழ‌ம்பாய்
நான் உருப்பிடிக்க‌
நீ உன்னை
உலைக்க‌ள‌மாய்
காய்ச்சிக்கிட‌ந்த‌தை
எந்த‌ மெம‌ரி சிப்பில்
இட்டு வைக்க‌ முடியும்?
ம‌ல‌ட்டு டிஜிட‌ல் க‌ர்ப்பப்பையை
ம‌டிப்பொறியாய்
சும‌ந்து சும‌ந்து
ப‌ன்னாட்டுக‌ம்பெனியின்
ப‌ண‌ங்காட்டு க்யூபிகிள்க‌ளில்
வியூக‌ம் அமைத்துக்கிட‌க்கும்
வித்தைக‌ளில்
உன் ம‌க‌ள்
இந்த‌ உல‌க‌த்தையே
பாப்கார்னாய் கொறித்து
கொழித்து வாழ்கிறாள்.

அந்த ப‌தினைந்தாயிர‌ம் ரூபாய் கிரிஸ்ட‌ல்
அழ‌கான‌ ப‌ரிசு தான்.
என் கைப்பை
குலுங்கி குலுங்கி
வீடு நோக்கி வ‌ந்த‌து.

வ‌ரும் வ‌ழியில்
ஒரு பிளாட்பார‌த்தில்
ஒரு ந‌லிந்த‌ தாய்
தோளில்
துணித்தொட்டிலில்
சுருண்டுகிட‌க்கும்
குழ‌ந்தையை சும‌ந்துகொண்டு
வியாபார‌ம் செய்து கொண்டிருந்தாள்.
"அம்மா
இந்த‌ பொம்மையை வாங்கிக்கொள்ளுங்க‌ள்"
ஓலைக்கிலுகிலுப்பை.
ஓலைக்கிளிக‌ள்.
ஓலையில் கொண்டைச்சேவ‌ல்க‌ள்
அம்மா..அம்மா
ஐந்து ரூபாய்க்கு ரெண்டு
வாங்கிக்கொள்ளுங்க‌ள்.."

குழ‌ந்தையோ
அப்போது தான்
அரையும் குறையுமாய்
அவள் மார்பை
ச‌ப்பிப்பார்த்து ஏமாந்து
ப‌சி ம‌ய‌க்க‌த்தில்
க‌ண்மூடிக்கிட‌ந்த‌து..
"இந்த‌ ம‌ர‌ப்பாய்ச்சியையாவ‌து..
வாங்கிக்கொள்ளுங்க‌ள்
மூன்று ரூபாய் தான்..."

என்னால்
அவ‌ளைக்க‌ட‌ந்து போக‌முடிய‌வில்லை.
சிறுவ‌ய‌தில்
அம்மா வாங்கிக்கொடுத்த‌
அந்த‌ ஓலைக்கிளி
எழுப்பிய
கீச்சு மொழியின்
சி சி ப்ள‌ஸும்
ஊப்ஸும்
இப்போது தான் புரிந்த‌து.
பிர‌ச‌வ‌ வ‌லியில்
என் அம்மா குழ‌றிய‌
பைன‌ரி ஒலிப்பு அது..
"என் க‌ண்ணே
என் க‌ண்ணே"

அடுத்த‌ க‌ண‌ம்
அந்த‌ அம்மாள்
கையில் உள்ள‌
ஓலை உருவ‌ங்க‌ளை
எல்லாம்
அள்ளிக்கொண்டேன்
என் அம்மாவுக்கு.
கைப்பையில் இருந்து
ஆயிர‌ம் ரூபாய்க்க‌ட்டை
அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய்
அவ‌ள் கையில் திணித்து விட்டு
ந‌ட‌ந்து கொண்டே இருந்தேன்
"அம்மா
சில்ல‌றை இல்லையே.."
அவ‌ள் குர‌ல் என் காதுக‌ளில்
விழ‌வில்லை.

அவ‌ள் ஒரு தாய்.
அந்த‌ துணிச்சுருணையில் நான்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍========================================ருத்ரா
12 மே 2013

2014-06-27

பெண்ணே !

Rainbow-Hair-Technology-Woman-Wallpaper-1280x800.jpg
http://black-wallpapers.com/wallpapers/rainbow-hair-technology-woman-wallpaper/ WITH COURTESY



பெண்ணே !
===========================================ருத்ரா இ.பரமசிவன்

தண்டைகள் குலுங்க‌
கிளிந்தட்டு விளயாடிய போது
நினைத்திருந்தாயா?
கிளிச்சிறகுகளை கத்தரித்து விட்டு
கூண்டுக்குள் வைத்து
கூடி கும்மாளம்
அடித்துக்கொண்டிருப்பார்கள் என்று.
ஆனாலும் கிளியே பார்.
காலம் மாறிவிட்டது.
வயதுக்கு வந்து விட்டாய் என்று
உலக்கைக்கோடுகள் போட்டு
உன் உலகத்தை குறுக்கி வைத்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

குங்கும செப்புக்குள்
ஒரு மாளிகை கட்டி
உன்னை வைத்திருந்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

முரட்டுத் தாய் மாமன்களின்
மீசைக்கு நெய்தடவி
ஆசைக்கு தீனியாகி உன்னை
உறவு என்னும் கொட்டாங்கச்சிக்குள்
மடக்கி வைத்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

காதலாவது கத்தரிக்காயாவது என்று
வரதட்சிணையும் கழஞ்சுத்தங்கமும்
கொடுத்து வாங்கிவந்த கணவனுக்கு
கத்தரிக்காய் வதக்குவதும்
கறி சோறு ஆக்கிப்போடுவதுமே
உன் எல்லை என்று இருந்தவர்களும்
மாறித்தான் போனார்கள்.

பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
என்றவர்களும்
புதை குழிக்குப்போய்
ரொம்ப நாளாய் ஆச்சு.
அவர்களும் மாறித்தான் போனார்கள்.

இப்போது பார்.

மாட்டுச்சங்கிலியை நினவுபடுத்தும்
மாங்கல்யம்
சுவரில் ஆணியில்
தொங்குகிறது.

பந்தல் கெட்டிமேளம் மொய்களோடு
அத்தியாயத்தை முடித்துக்கொள்ள்ளும்
கல்யாணங்கள்
பதிவாளர் அலுவலகத்தில்
கையெழுத்துக்கு வந்தது.

பெண்ணே!
வளையல்களை மட்டும் குலுக்கி
கிளர்ச்சியூட்டும் உன் கையில்
விஸாவும் பாஸ்போர்ட்டும் அல்லவா இருக்கிறது.

உனக்கு எதற்கு இந்த‌
வேதமும் பிரம்மமும்
என்று ரகசியம் காத்தவர்கள்
உன் அறிவுச்சுடரில்
பிரம்மன்கள் எல்லாம்
அணைந்து போய் நின்ற ரகசியத்தை
இவர்கள் புரிந்து கொண்டார்கள்.

உன் அறிவுப்பெட்டகம் திறந்த போது
இந்த அஞ்சறைப்பெட்டிகளோடு
கம்பியூட்டர்களும் அல்லவா
திறந்து கொண்டுவிட்டன.
அதில் உன் சமையல் திறங்கண்டு
அடிமையாகின பலப்பல‌
பன்னாட்டுக்கம்பெனிகள்.

அம்மிக்கல் இருந்தபோது நீ அரைத்தாய்.
மிக்ஸி வந்த போது
இவனும் அரைக்கிறான்.
கிணரும் கல்லும் இருந்தபோது
நீயே எல்லாம் துவைத்தாய்.
வாஷிங் மெஷினில்
இன்று அவனும் துவைக்கிறான்.
அடுக்களையில் அன்று
பாத்திரங்கள் தேய்த்து தேய்த்து
மல்யுத்தம் புரிந்தாய்.
டிஷ் வாஷரில்
அள்ளிப்போடுகிறான் பாத்திரங்களை
இவனும் இன்று.
"டெம்பரேச்சர் ஆவன்"
குமிழ்கள் இருவரும் திருகலாம்.
சமையலும் கூட பொதுவுடைமை.

ஓ! பெண்ணே!
எந்திரமாய் இருந்தாய்.
எந்திரப்புரட்சியில்
எழுச்சி கொண்டாய்.

பெண்ணே!
நீ இவர்களுக்கு எந்திரமாய் இருந்தபோதும்
அறிவுக்கண் விழித்து
அதிர்ச்சி வைத்தியம் அளித்துவிட்டாயே.
இப்போது எந்திரங்களின் எந்திரங்களுக்கெல்லாம்
பொறி நுட்பம் எழுதத்தெரிந்த பிறகு
இந்த உலகம் கூட‌
உன் கால் கொலுசுவின்
ஒரு குண்டுமணிக்குள் தான்
குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

பெண்ணே! நீ வாழ்க!

2014-02-25

ருத்ரா இ.பரமசிவன்

வாசலில் ஒரு கோலம்

வாசலில் ஒரு கோலம்.........................ருத்ரா
=======================================

வாசலில் ஒரு புள்ளிமான்
தன் புள்ளிகளையெல்லாம்
உதிர்த்துவிட்டு சென்றதோ!
அவள்
விரல் வழியே
வாசல் எல்லாம்
மின்னலில் ஜாங்கிரிகள்.
லால்பாக்கும் கப்பன்பாக்கும்
பெங்களூரை விட்டு
பெயர்ந்து வந்தன‌
இங்கு பூக்களாக‌
இறைந்து கிடக்க.
மேகப்பஞ்சுகள் தூரிகைகள் ஆகி
வானவில் அக்ரிலிக் குழம்பை
சித்திரக்கொடிகளாய்
வாசலில் படர்ந்து கிடந்தன.
இதனுள்
என் இதயத்தை
அவள்
எங்கே வரைந்து வைத்திருக்கிறாள்?
அவள் கால் பதிந்த தடங்களில்
சிற்றெரும்புகளின் வியூகம்.
அவைகளுக்கு கூட‌
அவள் இனிய ஸ்பரிசம்.
என் இதய ஸ்பரிஸம்
இங்கே எங்கு துடிக்கிறது?
கோலம் முழுவதும்
என் சுவாசங்களால்
ஒற்றி யெடுத்தேன்.
எங்கே இதில்
அவள் அன்பின் வாசனை?
அங்கேயே நின்றேன்.
எவ்வளவு நேரம் நின்றேன்?
எனக்குத்தெரியவில்லை.
என் கால்களின் அடியில்
திடீரேன்று
உலுக்கல்
குலுங்கல்
குலுங்கியது பூமி மட்டும் அல்ல.
அண்டமே அதிர்ந்தது.
இலைச்சருகுகள் போல்
நட்சத்திரங்களின் இடிபாடுகள்.
"துடிப்பை இன்னுமா உணரவில்லை?"
இடையில்
லேமினேட் ஆகி
ஒரு துடிப்பில் அதிர்ந்து
படலமாய்க்கிடந்தேன்.
அவள் கவிதை படர்ந்த காகிதம் போல.
அவள் துடிப்பா அது?
ஆம்.எங்கள் துடிப்பு தான் அது.
ரிக்டர் ஸ்கேலில்
"பதினாறு"இருக்கும்.

=====================================ருத்ரா

காலம் என்றொரு கண்ணாடி

காலம் என்றொரு கண்ணாடி
==================================ருத்ரா


முகம் பார்க்கலாம்.
மூக்கு நுனியில் உள்ள‌
பருவை கிள்ளலாம்.
வடகலையோ தென்கலையோ
இல்லை வெண்ணீறோ
நெற்றியில் தீட்டிக்கொள்ளலாம்.
புருவமத்தியில்
குண்டலினியை குங்குமமாக‌
வைத்துக்கொள்ளலாம்.
சாய்ங்காலம் பார்க்கப்போகும்
காதலனுக்காக‌
இமைகளின் மயிர்க்கால்
ஒவ்வொன்றையும்
மின்னல் துரும்பு கொண்டு
மயக்கத்தின் மின்சாரப்பூச்சுகளால்
துடிப்புகளை
உயர்த்தலாம்.
இல்லையென்றால்
ஒட்டுப்பொட்டை அதன் பரப்பில் ஒட்டி
விதவையாய் கிடக்கும்
கண்ணாடியை
சுமங்கலி ஆக்கலாம்.
வயதுகளைப்பற்றி
கொஞ்சமும்
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்
வட்டச்செயலாளர்கள்
மீசையை துல்லியம் ஆக்கும்போது
ஆங்காங்கே தலை காட்டும்
"வெள்ளைய"ஆதிக்கம் கண்டு
வெகுண்டெழுந்து
அதற்கு கரி பூசலாம்
இல்லை
வேரோடு பிடுங்கி எறியலாம்.
இல்லை
நடுக்கூடத்தில்
ஆளுயரத்தில் மாட்டி
உள்ளே வருவோரின்
உச்சி முதல் உள்ளங்கால் வரையான‌
காக்காய்வலிப்பு நெளிப்புகளின்
பிம்பங்களை
வடிகட்டி வைத்துக்கொள்ளலாம்.
இருப்பினும்
இதற்கு
ரசம் போகலாம்.
சிறுபயல்கள்
சச்சின் இடத்தைப்பிடிக்க‌
பழகுகிறேன் என்று
கல் போன்று கெட்டித்த‌
கிரிக்கெட் பந்தால்
தூள் தூள் ஆகலாம்.
கண்ணாடித்தூள் எல்லாம்
கூட்டிப்பெருக்கிய பின்னும்
என் மடியில்
வடுக்களாய் கிடப்பது
கண்ணாடியின் பரிமாணங்களா?
காலத்தின் பரிணாமங்களா?

================================================ருத்ரா

வதம்

 


வதம்
========================================
ருத்ரா

தீபாவளியன்று அதிகாலை.
வடை சட்டியும் அடுப்புமாய் அம்மா.
கொடுவாய் ஓட‌
பல்லுகில்லு தேய்க்காம‌
கால்கள் அடுப்படிப்பக்கம்
இழுத்தன.
மிச்சம் இருந்த என் கொட்டாவி
அங்கே என் முகத்தை
நசுக்கிக் காட்டியது.
அதைப்பார்த்த என் அம்மாவுக்கு
மத்தாப்பூ பிரகாசம்.
"வடை திங்கிரியா..இந்தா."
சுடச்சுட தட்டில்
உளுந்த வடை மிளகுக்கண் துருத்தி
என்னைப்பார்த்தது.
ஆமை வடை
முதுகு இப்படித்தான் ஆமைக்கு
சொர சொர என்று
பருப்பு முண்டு கட்டி இருப்பது போல்
இருக்கும் போலிருக்கிறது.
எத்தனை தின்றேன் என்று தெரியவில்லை.
அம்மாவுக்கு எடுத்த‌
புது பட்டுச்சேலை இன்னும்
விளக்குமுன்னாலேயே
வைக்கப்படவில்லை.
ஆனால்
இப்போதே புதுப்பட்டு
உடுத்தியது போல்
பொலிவாக சிரித்தாள்.
நான் சாப்பிடுவதை
பார்ப்பது தானே அவளுக்கு தீபாவளி.
மற்ற நாட்களில்
பல் தேய்..குளி..
அப்புறம் தான் இட்லி என்பாள்.
அந்த கண்டிப்பில்
சுருண்டு கிடந்த
நரகாசுரன்களையெல்லாம்
இப்போ எங்கே காணோம்.
என் அம்மாவின் அன்பு
சுத்தம் எல்லாம் பார்க்காத‌
சுத்தமான அன்பு இன்றைக்கு..
"டமார்"
வெளியே லெட்சுமி வெடி.
காகிதக்குடல் சரிய‌
நரகாசுரன் வாசலில்
வாரி இறைந்து கிடந்தான்.




2011-10-29

தமிழர்களே!தமிழர்களே!

தமிழர்களே!தமிழர்களே!
====================================================ருத்ரா

தமிழர்களே!தமிழர்களே!
உங்கள் முகத்தில் நீங்களே
கரி பூசி கொண்டீர்கள்.
அந்த அய்யன் வள்ளுவன்
அட்டைப்படத்தையும்
செம்மொழிப்பூங்காவின்
முகப்பையும்
அந்த பச்சைப்பொய்கள்
(பச்சை ஸ்டிக்கர்கள்)
மூடியிருக்கின்றனவே!

தமிழ் செம்மொழி என்றாலே
எரிச்சல் கொண்ட‌
எத்தர்கள்
உங்கள் கைகள் மூலம்
உங்க‌ள் முக‌ங்க‌ளிலேயே
க‌ரி பூசிக்கொண்டிருக்கிறார்க‌ள்.

இன்னொரு அதிர்ச்சியான‌
உண்மை உங்க‌ளுக்கு தெரியுமா?
வேத‌ங்க‌ளை தொகுத்த‌தே
வியாச‌ன் எனும் திராவிட‌ன் தான்.
நீல‌மேக‌ சியாம‌ள‌ வ‌ண்ண‌ங்க‌ளில்
அதாவ‌து திராவிட‌க்க‌ருப்பு வ‌ர்ண‌ங்க‌ளில்
பிற‌ந்த‌ திராவிட‌ர்க‌ளான‌
ராம‌னும் கிருஷ்ண‌னும்
ஆண்ட‌ திராவிட‌ பூமியே இந்தியா!

திராவிட‌நாடு திராவிட‌ருக்கே!
திராவிட‌ர்க‌ளின் பாட்டன்க‌ள் ஆன‌
த‌மிழ‌ருக்கே இந்தியா சொந்த‌ம்.
அரிய‌ என்ப‌தே ஆரிய‌ ஆயிற்று.
அரிய‌ இன‌மே
க‌ண‌வாய் வ‌ழியே புகுந்து
க‌ண்ணிய‌ம‌ற்ற‌ ஆக்கிர‌மிப்பில்
இன்னும் ந‌ம்மை
தின்ன‌த்துடிக்கிற‌து.

கண‌க்கீட்டாள‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை
வெறுமே
மூன்று ச‌த‌வீத‌ம் என்கிறார்க‌ள்.
முந்நூறு ஆண்டுக‌ளுக்கு முன்னே
ம‌ட்டும் வ‌ந்த‌
வெள்ளை ஆதிக்க‌ம் அல்ல‌ இது.
மூவாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு
முன்னே வ‌ந்து
ப‌த்தாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கும்
முன்னே இருந்த‌
இந்த‌ ப‌ர‌த‌வ‌ர்க‌ள் மீதும்
(இது சிந்து வெளித்திராவிட‌னின்
நெய்த‌ல் நில‌ப்ப‌ர‌த‌வ‌ன்)
அவ‌ர்க‌ளின் பார‌த‌த்தின் மீதும்
ச‌வாரி செய்துக்கொண்டிருக்கும்
ஆதிக்க‌ம் இது.

ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ள்
க‌ல‌ப்பில்
இந்த‌ திராவிட‌ இந்திய‌ன்
வெள்ளையாயும்
க‌ருப்பாயும்
வெள்ளையும் க‌ருப்பும் க‌ல‌ந்த‌
ப‌ழுப்பாயும்
இருப்ப‌து ம‌ட்டுமே
நிஜ‌மான மூவ‌ர்ண‌ம்.

பொய்யாய் நான்கு வ‌ர்ண‌ம்
பேசுப‌வ‌ர்க‌ள் தான்
சிவ‌ப்பான‌ செம்மையான‌
சிற‌ப்பான‌ ந‌ம் த‌மிழ் மொழி மீது
தார் பூசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சாமி படத்தின் மேல்
இப்படி ஒட்டினால்
இந்துக்க‌ள் ம‌ன‌ம்
புண்ப‌ட்டு போய்விடும்
த‌மிழ‌ர்க‌ளின் பூமி இது.
வான் புக‌ழ் வ‌ள்ளுவ‌னை
இப்ப‌டி மூடி ம‌றைத்தால்
மனம் புண் ப‌டாத‌
த‌மிழ‌ர்களின்
தமிழ்நாட்டுப் பூமி இது.

த‌மிழ‌ர்க‌ளே! த‌மிழ‌ர்க‌ளே!
இன்னும் நீங்க‌ள்
தூங்கிக்கொண்டிருந்தால்
த‌மிழ்ப்பூஞ்சோலைவ‌ன‌ம்
தார்ப்பாலைவ‌ன‌ம் ஆகிவிடும்!
விழித்திடுங்க‌ள் த‌மிழ‌ர்க‌ளே!

====================================================ருத்ரா
ஆதார‌ச்செய்திக‌ளுக்கு
இவ‌ற்றை சொடுக்குங்க‌ள்:

vedas-compiled-and-worte-by-dravidians[1].html (text/html) 42.00K
Sri Rama’s Ancestor, Vaivasvata Manu was a Dravidian King Srimad Bhagavatam « Ancient Indians – Satya Samhita.url (application/octet-stream) 1.00K
============================================================================