2024-08-17

கள்ளக்குளி

 கள்ளக்குளி

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________

சொற்கீரன்



இது என்ன சொல் என்று

மிரண்டு விடாதீர்கள்.

எங்கள் கல்லிடைக்குறிச்சி 

தேசத்தில்

தாமிரபரணிதான் எப்போதும்

கொடி சுற்றிக்கொண்டு கிடக்கும்.

கன்னடியன் கால்வாய் தான்

புகழ் பெற்ற எங்கள் சூயஸ் கால்வாய்.

ஒவ்வொரு பாலத்திலிருந்தும்

விரால் பாய்ந்து

அந்த பச்சைப்பளிங்கு நீர்

பிழம்புக்குள்

முக்குளி போட்டு முக்குளி போட்டு

தண்ணீர்ப்பாசிகளின் 

நீண்ட கூந்தலுடன்

பின்னி பின்னி விளையாடிவிட்டு

கால்களினூடூ

விரையும் தண்ணீர்ப் பாம்புகளோடும்

சமரசம் செய்து கொண்டு போகும்போது

எங்கள் குமாரர் கோவில் தெருவில்

எங்கோ ஒரு மூலையிலிருந்து

"மந்திரிகுமாரியின்" 

வாராய் நீ வாராய் என்ற பாட்டு

மிதந்து மிதந்து வந்து

எங்களோடு பிசைந்து

இனிமையை பிழிந்து ஊற்றி

ஜலக்கிரீடை செய்யும்.

வாய்க்காலின்

பத்து பன்னிரெண்டு பாலங்களில்

கடைக்கோடி பாலம் வரைக்கும்

நீர்ப்பயணம் செய்து

கரையேறுவோம்

கொழுக்கு மொழுக்கென்று

அம்மணங்குண்டிகளாய்.

ஏழெட்டு வயதுகளின்

மின்னல் குஞ்சு விளையாட்டுகள் இவை.

எங்கள் கால் சட்டைகளை 

அந்த வாய்க்காங்கரை

குத்துக்கல் கண்களில்

செருகி வைத்திருப்போம்.

கண்கள் செவ செவ என்று

ஆகியிருக்கும்.

ஒரு சிரட்டைப்பயல்

ஐடியா குடுப்பான்.

வெயிலில் சுட்டுப்பொசுக்கும் 

கூழாங்கற்களை

கண்ணில் ஒற்றி ஒற்றி எடு

என்பான்.

ஆயிரத்துத்தொள்ளாயிரத்து

"ஐம்பது"களின்

எங்கள் விக்கிர்மாதித்தன் 

வீர விளையாட்டுகள்

இவை.

வகுப்புகளுக்கு கூட‌

கட் அடித்து விட்டு

இந்த வாட்டர் ஒலிம்பிக்ஸின்

விருதுகளுக்கு

எத்தனை எத்தனை வேட்கைகள்

எங்களிடையே.

விருதுகளாய்

பூவரச இலைகளை சுருட்டி

பீப்பி செய்து தருவான் ஒருத்தன்.

அந்த ஒலி எங்கள்

பிஞ்சு நரம்புகளுக்குள்ளும்

வீர யாழ் இசைக்கும்.

வீட்டுக்குத்தெரிந்தால்

முதுகு பிஞ்சுடுமே.

அப்ப..

இது "கள்ளக்குளி" தானே!

____________________________________________








விரைந்து வாருங்கள்.

 விரைந்து வாருங்கள்.

_____________________________________


நொறுங்கிக்கிடக்கிறது

மணி மண்டபம்.

நூற்றாண்டுகளை சிதிலங்களாக்கி

ராட்சத வௌவ்வால்களின்

சிறகடிப்புகளும்

நூலாம்படை வலைகளின்

ஹைபர்போலிக் ஜியாமெட்ரியில்

பாழடைந்த பிக்காஸோவின்

கோட்டுச்சித்திரங்களும்

எதைச்சொல்கின்றன?

எதோ ஒரு 

ஓநாயின் ஊளைகளையா?

கலைடோஸ்கோப் திருப்பு வண்ணங்களின்

எண்ணக் குழம்பியங்களையா?

கீட்ஸ்

எழுதினானே "கிரேக்கக்கோப்பை" என்று

ஒரு கவிதை...

அதன் சுடுகாட்டு மூச்சு வெப்பங்களில்

காதல் ரோஜாக்களின்

பேய் இதழ்கள் பிய்த்துக்கொள்ளும்

கூந்தல் கீற்றுகள் போன்ற‌

சிலுப்பல்களையா?

எதையாவது

ரத்தக்கடலின் சுநாமி அலைச்சுருட்டல்கள் போல்

நெய் ஓவியம் தீட்டிக் காட்டும்

திகில் உரிப்புகளையா?

எதை

கருப்பிடிப்பது?

எதை

உருப்பிடிப்பது?

யுகங்கள் கோரைப்பல் பிளப்புகளில்

புதிய விடியலை

உமிழ்கிறேன் உமிழ்கிறேன் என்று

பிலிம் காட்டுவதையா?

சித்தாந்தங்கள் மலடு தட்டிப்போயின.

அதனால்

மூச்சுப்பிரளயங்களில் மூண்டெழுந்து

முகம் காட்டி வரும் கப்பல்கள்

எங்கோ அங்கு 

தரை தட்டி நின்று கொண்டிருக்கின்றன.

ஓ! எங்கள் பளிங்குக்கவிதைகளாய்

அங்கே பளபளப்பாய் 

எழுதிக்காட்டிக்கொண்டிருக்கிற‌

நம்பிக்கைகளே!

வாருங்கள்...வாருங்கள்

விரைந்து வாருங்கள்.


____________________________________________

சொற்கீரன்.





என்ன செய்யலாம் சகோ?

 

 என்ன செய்யலாம் சகோ?

________________________________



என்ன சகோ

ஒரு மாதிரியாய் இருக்கிறீர்கள்.

என்ன மாதிரியாய் இருந்தாலும்

ஒரு பூ கூட

விழ வில்லையே.


சரி விடுங்கள்.

ஃபில்ம் போகலாமா?

போகலாம் தான்.

அங்கேயும் 

அந்த இமைகளின்

பிறாண்டல் இனிமையில்

நான் மாய்ந்தே போவேன்.


அப்போ

புத்தகத்திருவிழா?

ஆமாம்.

மனத்தை ஏமாற்றிவிட்டு

பக்கம் பக்கமாய்

புரட்டிக்கொண்டிருக்கலாம்.

இருந்தாலும்

அந்த அச்சுமை நாற்றத்திலும்

பட்டாம்பூச்சிகள் நசுங்கிச்சொல்லும்

சிறகுச்சுவடுகள்

சில்லிட வைக்குமே.

என்ன செய்யலாம் சகோ?


ஒன்றும் செய்யமுடியாது.

நானே அன்னமாய் அவர்களிடம்

தூது போகிறேன்.

சொல்லிமுடிப்பதற்குள்

குவாக் குவாக் என்று

சின்ன சின்ன கடுகுக்கண்கள்

கருப்பும் பச்சையும் நீலமுமாய்

மினுமினுக்க‌

சிறகு பரப்பி

என் காலைச்சுரண்டிக்கொண்டு

நிற்கிறாள்

_________________________________________

எப்சி.


2024-08-14

நுள்ளி விளையாடலாம்.

 சொற்கள் 

கத்தரிக்காய் என்றால்

கூட்டு வைக்கலாம்.

அத்திக்காய் இத்திக்காய் 

என்றால்

பாட்டு எழுதலாம்.

கோவைக்காய் என்றால்

உள்ளே மதுரைக்காயையும்

சேர்த்து துவட்டல் துள்ளலுடன்

நறு வெண்சோறு சமைக்கலாம்.

கவிதைக்கு பேர் என்ன? ஊர் என்ன?

யாதானும் ஊராமல் நாடாமால்

செம்புழுதி மண்ணின் துளியையும்

பாடலாம்.

பனை உயரக்கள்ளியின் 

சுடர்ப்பூவும் வருடலாம்.

அருகு வரும் 

அந்த அதிர்வு சிறைப்புள்ளோடு

கொஞ்சம் வாயடலாம்

வாருங்கள்.

வானத்தையும் கொஞ்சம் 

நுள்ளி விளையாடலாம்.

__________________________________________

எப்சி


2024-08-02

அவள் எனும் அனாடமி

 அவள் எனும் அனாடமி

____________________________________

சொற்கீரன்



என்ன தான் அவள்?

சங்குப்பூவா?

குவி கனவுகளின் 

கதிர் வீச்சுகளா?

சதையைத் தின்னும்

ரேடிய விளாறுகளிலா

அரிக்கப்பொகிறாள்?

பூதம் காட்டும் அவள் முல்லைகளில்

எல்லாம் 

மூழ்கடிக்கப்பட்டு விடுமா?

ராமானுஜனின் மாடுலர் ஃபங்ஷன்களா

அவள் கொத்துச்சிரிப்புகள்?

புரியாமலே

புதைந்து கொண்டு

எனை எந்த‌

குமிழிகளில்

சோழி குலுக்கிப்போட்டு

வெடிக்கச்செய்வாள்?

ப்ரத்யங்கிரஹா கோரைப்பற்கள் காட்டி

கொஞ்சும் நாணல்கீற்றுகளாய்

ஆற்றின் கரையோரம்

நிற்பாளா?

க்ளுக் சிரிப்புக்குள்

ஏலியன்கள்   குளுவானுமாய்

மில்லியன் கணக்கில்

வந்து பிம்பம் காட்டுபவளா?

யார் அவள்?

இந்த கேள்வியே போதும்

மின்னல் மழை பொழிய.

கிரீன் ஃபங்ஷன் தொகுப்புக்கணிதத்தில்

எத்தனை முறை

செருமி

இந்த இதயத்தை சுக்குநூறாக்குவாள்?

இவள் அநாடமியை

யாராவது வி ஆர் கேமிராவில்

பதிவிட்டு தரமுடியுமா?

அது போதும் என்று

இந்த எல்லா கனவுச்செதுக்கல் மற்றும்

கொத்தும் உளிக்காயங்களிலிருந்து

தப்பி

பறந்து விடுவேன்.

அவளின் இந்த பிம்பம் போதும்

அதில் 

ஆயிரம் பிம்பம் காட்டி

மறைந்து ஒளிர்வேன்.


_____________________________________________________







உன்னிடம் வாசித்துக்காட்ட‌..

 

உன்னிடம் வாசித்துக்காட்ட‌

________________________________________

கல்லாடன்.



இந்த கவிதையை 

உன்னிடம் வாசித்துக்காட்ட‌

மிக மிக ஆசை.

இதை படிக்கும் போது

அது உன் செவிகளில்

காட்சிகளை பூத்துச்சொரியுமா?

இந்த வானத்து சிமிழுக்குள்

உன்னை இன்னொரு வானமாக‌

காட்டி வியக்க வைக்குமா?

உன் ஒரு துளி முறுவலுக்குள்

எத்தனை ஆயிரம் வானப்படுதாக்களை

நான் சுருட்டி சுருட்டி 

விரித்திருப்பேன்.

ஒவ்வொரு எழுத்தும்

ஒரு கருப்பை.

அது பிறப்பிக்கும்

ஒவ்வொரும் உயிர்ப்பும்

எத்தனை குழிகளை வெட்டி

வைத்திருக்கின்றன தெரியுமா?

எதிலாவது நான் விழுந்து

மூடப்பட்டு

சலவைகல் எழுத்துக்களாய்

பொறிக்கப்பட்டு விடுவேன்.

பிறந்து பிறந்து 

இறந்து இறந்து

இந்த விநாடிமுள் 

சுற்றி சுற்றி வந்து 

பட்டாம்பூச்சி இறகுகளை

மில்லியன் கணக்கில் குவிக்கிறது.

அந்த வர்ணங்களின் பிரளயங்களில்

எல்லாம் காணாமல் போகிறது.

காலம் கூட‌

காலமாகி விட்டதாகத்தான்

சொன்னார்கள்.

இன்னும் அதை

படித்து முடிக்கவில்லை.

நீயும்

கேட்டு முடிக்கவில்லை.

வரிகள் படபத்துக்கொண்டிருக்கின்றன.

இந்த பஃறுளியாறு

பரல்களை பரப்பிக்கொண்டு ஓடுகிற‌து.

கூழாங்கற்களினூடே

நினவுக்கபாலங்களின் சிதிலங்களும்

சரசரத்துக்கொண்டு ஓடுகின்றன.


___________________________________________________




2024-07-28

கிழக்கு தோறும்

 



கோழி கூவிற்று.

அது அடைகாத்து 

வைத்திருந்த 

விடியல் முட்டையும்

உடைந்து சிதறி 

வெளிச்சச் சிறகை

விரித்து வெளியே வந்தது.

தமிழனின் மூளி வானம் மட்டும்

மொக்கையாக‌

அப்படியே இருந்தது.

பத்துப்பாட்டும் 

எட்டுத்தொகையும் 

தந்தவன்

தர்ப்பைப்புல்லொடு

தடுமாறும் 

மந்திரங்கள் சொல்லி

தடங்கள் மறந்தவன்.

தமிழ்ச்சுவடுகள் அழித்து

அமிழ்ந்து போனவன்

மீண்டு 

என்று எழுவான் என்று

இந்த உழக்குகளின் 

கிழக்கு மேற்குகளே

கிழக்கு தோறும்

விழித்து 

நோக்கிக்கொண்டிருக்கிறது.


_______________________________________

சொற்கீரன்